***மெல்லத் தமிழினிச் சாகுமோ ***
(கவி அல்ல .. என்னிடமிருக்கும் கேள்விகள் )
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"
என்றந்தப் பேதை யுரைத்தான் - ஆ!
இந்த வசை எனக்கெய்திடலாமோ?
(அந்த பேதை எதை யூகித்து அப்படி கூறியிருப்பான் )...ஒருவேளை ?
வெண்பா இயற்றுமளவுக்கு ஞானமில்லை
விருத்தத்தில் விளையாடும் வீரனுமில்லை
எதுகை , மோனை தெரிந்தும்
செயலில் காட்ட சொற்கள் சிக்கவில்லை !!
இருப்பினும் ..
நம்புங்கோள் !!
என்னதும் புதுகவியென அடம்பிடிப்பதால் ..
என்னாலும்
மெல்லத் தமிழினிச் சாகுமோ ??
அது திறந்தவெளி
தானியங்கி காசோலை எந்திரம் ..
வரிசையில்
பத்தோடு பதினொன்றாக நான் !!
எனக்கான நேரம் வருகையில்
தொடுதிரையில் கேள்வியொன்று ..
தமிழா ? ஆங்கிலமா ?
துளியும் யோசிக்காமல்
வேற்றுகிரகத்தவனை சீண்டுகிறேன் ..
இதனாலும்
மெல்லத் தமிழினிச் சாகுமோ ??
கையொப்பம் இடும் சமயத்தில்...
நண்பனின் கேள்வி ..
என்ன தமிழில் தானா ?
இல்லை ..
தாய்மொழியில் தான் ..
அறை அதிர சிரிக்கிறான் ..
இந்த நகைப்பாலும்
மெல்லத் தமிழினிச் சாகுமோ ??
இவனை பெற்றெடுக்க
அவள் முந்தானை விரித்தது
என்னமோ ?
தமிழுக்குத் தான் ..
ஆனால் ,
தன் பெயரை
தன் மொழியில் கிறுக்கிடும் போதும்
தலைப்பெழுத்து என்னமோ ?
ஆங்கிலம் தான்
இந்த தலைப்பெழுத்தாலும்
மெல்லத் தமிழினிச் சாகுமோ ??
தாய்ப்பாலுக்கு ஏங்கி
அவளின் முலைக் காம்பை
கவ்விய உதடுகள் ..
தாய்மொழி உச்சரிக்க மட்டும்
தடுமாறுவது ஏனோ ??
இந்த உதடுகளாலும்
மெல்லத் தமிழினிச் சாகுமோ ??
அந்த குக் கிராமத்தின்
தெரு மூலையில்
அண்ணாச்சி மளிகை கடை ..
தலை உயர்த்தி
சீரியல் பல்பில் பிரகாசிக்கிற
பெயர் பலகையை பார்த்தால்
"அண்ணாச்சி டிபார்ட்மெண்ட் ஸ்டோர் "
இந்த பெயர்பலகையாலும்
மெல்லத் தமிழினிச் சாகுமோ ??
தரணியே ..
ஆண்ட தமிழன் !
இன்று ..
மிஞ்சி இருக்கும் ஒரு பகுதியை
ஆள்வதற்கே வக்கில்லை
என்கிறபோது
மெல்லத் தமிழும் , தமிழினமும் சாகுமோ ?
பள்ளியறைத் தாயம்மாளோ ?
பேச்சியம்மாளோ ?
ஆண்டியப்பனோ ?
முத்துச்சாமியோ ?
கிளவன் ,கிளவி நினைவில்
தன் பிள்ளைக்கு பெயர் சூட்டிய
காலம் கழிந்து ..
இணையத்தில் பெயர் தேடுகின்ற
சமூகத்தாலும்
மெல்லத் தமிழினிச் சாகுமோ ??
அங்கன்வாடி எல்லாம்
ஆராய்ச்சி கூடமாக
மாறும் காலம் சில தூரமே ..
கண் விழித்து காத்திருப்பீர் !!
பிறக்கின்ற அத்தனை குழந்தையும்
தாய்மொழி வழி கல்வியை
புறக்கணிக்க வாய்ப்பிருக்கு
சீரழிந்த இந்த சமூகத்தால் ..
வேற்று மொழி பயிலும்
கல்வியாலும் ..
மெல்லத் தமிழினிச் சாகுமோ ??
தாய்மொழி மட்டும் கல்
என சொல்ல
திராவிட கட்சியல்ல நான் ..
அத்தனையும் கல்
கற்று விட்டு சொல் ..
யாமறிந்த மொழிகளிலே என ??
பாரதியின் கட்சியில்
உமக்கும் ஒரு இடமுண்டு ..