சட்டை பையிலிருந்து ..
ஒரு ரூபாய் நாணயத்தை எடுக்கிறேன் .. ரெண்டு பக்கமும் திருப்பி பார்க்கிறேன் .. சுண்ட வேண்டும் போலத் தோனுகிறது .. அதற்கேற்ப , இடுப்பளவு உள்ள மதிற்சுவரில் நாணயத்தை செங்குத்தாக நிறுத்துகிறேன் ,இடது கையின் ஆட்காட்டி விரலைக் கொண்டு !
இதே நொடியில் தான் ..இன்னொரு புறம் !
பறந்துக் கொண்டிருந்த பறவையொன்று கிளையின் மீது வந்து அமர்கிறது ..
இதே நொடியில் தான் .. எரிந்துக் கொண்டிருந்த விளக்கொன்று அணைந்து போகிறது .. இதே நொடியில் தான்.. கடற்கரையின் மணற்பரப்பிலுள்ள ஒரு குழியிலிருந்து நண்டு மெல்ல எட்டிப் பார்க்கிறது ..
சுண்டுவதற்காக நிலைநிறுத்தப்பட்ட நாணயத்தை , வலது கையின் ஆட்காட்டி விரலைக் கொண்டு பலமாக சுண்டுகிறேன் ..
இதே நொடியில் தான் .. கிளையில் அமர்ந்த பறவையானது தன் அலகினால் சிறகினை நீவி சத்தம் எழுப்புகிறது .. இதே நொடியில் தான் , அணைந்து போன விளக்கினை கண்டு யாரோ ஒருவர் அதனை பற்றவைக்க தீப்பெட்டி தேடுகிறார் .. இதே நொடியில் தான் , குழியிலிருந்து எட்டிப் பார்த்த நண்டு முழுமையாக குழியிலிருந்து வெளியேறி தன் எதிரே இருக்கின்ற ஆழ்க்கடலை நோட்டமிடுகிறது ..
சுண்டப்பட்ட நாணயம் , சீராக சுழலுகிறது ..வேகம் மெல்ல மெல்ல குறைந்து முற்றிலும் எந்த வித இயக்கமின்றி .. நாணயத்தின் ஒருபுறம் மட்டும் தெரியுமளவு கீழே விழுகிறது !
இதே நொடியில் தான் .. கிளையில் அமர்ந்து சத்தம் எழுப்பிய பறவை , தன் சிறகினை விரித்து பறந்து போகிறது .. இதே நொடியில் தான் , அணைந்து போன விளக்கினை யாரோ ஒருவர் தீக்குச்சியினால் பற்ற வைக்கிறார் ... இதே நொடியில் தான் , குழியிலிருந்து வெளிவந்த நண்டு கடலின் பேரலை ஒன்றில் தன் உடலை நனைத்து விட்டு திரும்ப குழிக்குள் செல்லுகிறது ...
No comments:
Post a Comment