Saturday, 24 November 2018

வகுத்தல் - ஒற்றுமை

(வகுத்தலின் உள்நோக்கமெல்லாம்
பகிர்தலே ...
மன்னிக்கவும் !
சமமாய் பகிர்தலே .. )

மானிடனாய் பிறந்துவிட்டேன்
நரக வாழ்வை தொடங்கிவிட்டேன்
இனி நான்
கண் மூடி
மண் மூடும் வரை ..
சரித்திரம் ஏதும் வேண்டாம்
சமத்துவம் கிடைத்தால் போதும்

எனக்கொரு பேராசை !

இந்த சமூகத்தை
வெண் தாடி கிழவனின் தடிகளால்
வகுக்க வேண்டும் ...
ஈவாக ஒற்றுமையானவர்களையும்
மீதியாக சில வெங்காயங்களையும்
பிரித்தெடுக்க வேண்டும் ..

அநீதிக்கெதிராக ,
...
அமைதியாக இருந்தால்
அடக்கம் செய்து விடுகிறான் !
ஆர்ப்பாட்டம் செய்தால்
ஆண்டி- இந்தியன் என்கிறான் !

என் மக்களே ::

தனியாக போராடினால்
தாளித்து விடுவான் ..
ஒற்றுமையாக போராடினால் தான்
பயந்து விடுவான் ..

(இப்போதும் கூவுகிறேன்
வகுத்தலின் உள்நோக்கமெல்லாம்
பகிர்தலே ...
மன்னிக்கவும் !
சமமாய் பகிர்தலே ... )

எனக்கு
அர்ச்சனை செய்ய ஒரு கூட்டம்
என்
மலத்தை அள்ள ஒரு கூட்டம்
என்
பிணத்தை எரிக்க ஒரு கூட்டம் ...
அத்தனை கூட்டத்தையும்
கல்விக் கொண்டு
வகுத்தெடுப்போம் !
இப்பொழுது
மலம் அள்ள நான் வருகிறேன் ..
மலையேற நீயும் வருகிறாயா ?

பூஜ்ஜியங்களெல்லாம்
ராஜ்ஜியங்கள் அமைக்க
உருவாக்கிற கூட்டணி
உப்பு கலந்த தேநீராக
சுவைக்கத் தான் செய்கிறது
அந்தந்த தேர்தல் சீஸனில் !

காதலை
சாதிக்கொண்டு வகுக்கிறாய்
ஈவாக ,
கயிற்றில் கட்டிய பிணங்களும்
மீதியாக ,
இன்னுமொரு காதலும்
துளிர்விடுகிறது ..

உங்களை
உங்களாலே வகுத்துக் கொள்ளுங்கள் ..
.
.
என் சுதந்திரத்தை
சகித்துக் கொள்ள முடியாத
உன் சுதந்திரம் தான்
இங்கு தீண்டாமை
என்பதே உணரும் வரை !
.
.
என் தேவையெல்லாம் ,
சரிசமமாய்
உட்கார நாற்காலி
கண்ணாடி குவளையில் தேநீர்
காதல் சுதந்திரம்
பயில கல்வி
இன்னும் இன்னும் பல ...

(நிறைவாக சொல்கிறேன்
வகுத்தலின் உள்நோக்கமெல்லாம்
பகிர்தலே ..
மன்னிக்கவும் !
சமமாய் பகிர்தலே )

மறந்து விடாதே தோழா
நாளையொரு போராட்டமெனில்
வீதிக்கு வா
ஒற்றுமையாக !