Sunday, 16 September 2018

தற்கொலை செய்யணும் !!

தற்கொலை செய்ய வேண்டும்
இப்போது ஏன் ?
எதற்கு ?
என்றெல்லாம் தெரியாது
ஆனால், செய்ய வேண்டும் ..
அப்படிதான் இருந்தது
அன்றும்
அதற்கு முன்பும் !
தோராயமாக
தற்கொலை எண்ணம்
1,234 ஆக வைத்துக் கொள்ளலாம் ..
அதிகமாகவும் இருக்கலாம்
குறைவாகவும் இருக்கலாம்
என்ன செய்ய ?
எண்ணம் தற்கொலை நோக்கி இருந்ததால்
எண்ண மறந்துவிட்டேன்

யார் அனுமதியும் வேண்டாம்
என்னை நானே
கொலை செய்யப் போகிறேன்
சென்ற முறைப் போல் இல்லாமல்
இந்த முறை புதியதாக யோசிக்கிறேன்
கத்தியின்றி
இரத்தமின்றி
வலியெதுமின்றி
ஒரு தற்கொலை ..
இது சாத்தியமா ?
அதெல்லாம் தெரியாது எனக்கு
ஆனால்,
தற்கொலை செய்ய வேண்டும்

வழக்கம் போல்
நம்முன்னோரின் முயற்சியில்
தற்கொலை செய்யலாமா ?
பூச்சி மருந்து குடித்து ..
நேரமாகி விட்டது
கடையை அடைத்திருப்பான் ..

தூக்கு கயிறு ,
வேண்டவே வேண்டாம் ::
போன முயற்சிலேயே
நான்
உடைந்த நாற்காலி
தொங்கும் காத்தாடி
அறுந்த கயிறென
வெவ்வேறு திசையில்...
அசிங்கமாய் போகும்
ஒரு தூக்கு கூட ??
த்தூ ...

ஓடும் ரயில் முன்
தலை , தசையென
தனிதனியாய்
தண்டாவளத்தில்
தகர்த்தெறியப்படும் !
இறந்த அடுத்தநாள்
முகம் தெரியமால் செய்தி தாளில் வரும்

மலை உச்சியிலிருந்து ,
.
முதலில் ஏற முடியுமா ?
இந்த உடலை வைத்து ..
அப்படியே ஏறி குதித்தாலும்
பாதி உயரத்திலேயே உயிர் போய்விட்டால்
என் உயிர் போவது
எனக்கே தெரியாவிட்டால்
அது தற்கொலையாகதே ..

உடல் முழுக்க பெட்ரோல் ஊத்தி
லிட்டர் 84.50 பைசா ?
ஆறு ரூபாய் குறைவாக உள்ளது பர்சில்
தீப்பெட்டி வேறு ,
பட்ஜெட் பற்றாக்குறை !

பழைய சங்கதி எதற்கு
இப்படி செய்யலாம்
நூறு குண்டூசிகளை விழுங்கிடலாம் ,
எழுதிக் கொண்டிருக்கின்ற
பேனாவின் முனையால்
தொண்டையில் கோடு போடலாம் ,
வீட்டின் மலத்தொட்டியில்
மண்டைய விடலாம் ..
மலத்தை அள்ளுபவன் ,
என்னையும் அள்ள வேண்டும்
பாவம் !

ஆஆஆஆஆஆஆஆ !!

வேறு என்ன செய்ய ?
தற்கொலை செய்யணுமே ...
இந்த நொடி கணமே ..

மின் கம்பியை கடித்து விடவா ?
விஷநாகத்துடன் மல்யுத்தம் செய்யவா ?
கைப்பேசியே ஒளித்து வைத்திடவா ?
நகத்தைப் போல்
என்னை நானே கடித்து துப்பவா ?
யோசிக்க யோசிக்க
தலை வலிக்கிறது ..
பேசாமல்
மனுஷ்யபுத்திரன் கவிதைகளை படித்து
அவரைப் போல் 
கவிதையென  எழுதவா ?
படிப்பவன் தான் இறப்பான்
பின்பு அவரே என்னை கொல்வார்
அது கொலையாகிவிடும் ..

என்னை நானே
கொலை செய்ய வேண்டும்
வேற வழியேயில்லை
சுலப வழி
தாமரை கட்சியில்
இணைந்திடலாம் ..
ஆசை இருப்பின் வருவீர்
தாமரையில் அமருவீர்
தற்கொலையே பருகுவீர் !!







Wednesday, 12 September 2018

நாற்காலியும்_இவர்களும்



கண்மூடிக் கொள்ளாதே
களவாணிப் பயலுக
களப்பணி செய்ய
காத்திருக்காக !!

நாலு காலு
மெத்தை நாற்காலியில
ஒருமுறை
குத்த வைக்க ..
பலாயிரம் முறை
கால்ல விழணும் !
கோஷம் போடணும் !
கொடி பிடிக்கணும் !
சாஷ்டாங்கம கும்பிடவும் செய்யணும் !!

சூரிய குடும்பத்து நாற்காலி ...
முதல்வனாய் இருந்தாலும்
முதியவனாய் இருந்தாலும்
இறுதி வரை நாற்காலி தான்
கட்டுமரத்திற்கு !!
கட்டுமரம் கவிழ்ந்தாச்சு
இடத்தை நிரப்ப சூரியனும் வந்தாச்சு ..
உதிக்கிற திசை தெரியாமலே
நாற்காலி நமக்கு நாமேனு நினைச்சிடுச்சு .


அடிமை சாசன நாற்காலி ..


நம்புங்க !!
என் தேசம் சுதந்திர தேசமே ..
அடிமைகளும் ஆளும் தேசமே !!
ஒற்றை நாற்காலி தான் ..
அதுவும்
உடைந்த நாற்காலி தான் ..
ரெண்டு கயிறால் இறுக கட்டி
காலத்தை கடத்துற நாற்காலி தான் .

உதிரி நாற்காலி ...

*
கொட்டும் முரசொன்று
கொட்டு கொட்டென கொட்டியது
பக்கத்தில் நின்றவனையும்
அதிகாரத்தில் இருந்தவனையும்
அதிரடி நாயகனை
நகைச்சுவை நாயகனாய்
சித்தரித்து விட்டோம் !!
ஒர் அறைக்குள்
சிறைப்படுத்தி விட்டோம் !!
**
சாதிக்காயொன்று
நாற்காலிக்கான மாறுவேடப் போட்டியில்
மாம்_பழம் ஆயிற்று ..
இது என்ன மாயம் ,
பழமும் கசக்குதே !!
***
பாசக்கயிறு ஒன்றினால்
பம்பரம் சுழலுகிறது
ஐந்தாண்டுக்கு ஒருமுறை
இங்கும் அங்குமாய் ..
****
காவியம் படித்த அண்ணன்
சட்டை பாக்கெட்டிலிருந்து
ஆயிரம் மதயானைகளை
கிழக்கே , மேற்கேயென
வீசியெறிய குதுக்குலமாய்
தம்பிகளும் ... தங்கச்சிகளும் !!
*****
மய்யம் கொண்ட புயல்
நாற்காலியை வந்தடைவதற்குள்
அகம் டிவியில்
வலுவிழுந்து போகிறது ..

எந்திரன் ஒருவன்
உணர்ச்சியற்ற எந்திரனாகிறான்
மக்கள் போராட்டத்தில் ,

இடதுசாரிகள் எல்லாம்
ஒரு ஒரமாய்
வேடிக்கை பார்க்குது ..

நோட்டா கூட
தனி நாற்காலி கேட்குது !!

இனத்திற்கொரு கட்சி
மதத்திற்கொரு கட்சி
சாதிக்கொரு கட்சி
மனைவிக்கு ஒரு கட்சி
கணவனுக்கொரு கட்சி
இனியொரு
கட்சியும் வேண்டாம் ..
கலர் கலராய் கொடியும்
பறந்திட வேண்டாம் ..

கண் திறக்க
காமராசும் வரப்போவதில்லை ..
வெங்காயங்களை தோலுரிக்க
வெண்தாடி கிழவனும் வரப்போவதில்லை ..
கோபம் கொண்ட
நீயும் , நானும் தான் வரணும்
களம் வந்து சேரு  ..
   - ஜோசப்_யுவன்_முத்து
(ஆதார் அட்டையை தேட முயற்ச்சிக்க வேண்டாம் )

Monday, 10 September 2018

ஒருத்தரும் வரல ....

***** ஒருத்தரும் வரல ****

( அந்த ஆவணப்படத்தை பார்க்காதவர்கள் தயவு செய்து பார்க்கவும் ..அந்த கடலில் , புயலில் சிக்கி , உயிர் நீத்த ஒரு மீனவனின் குரலாய் .. என் அழுகுரலின் கூப்பாடு )

நீங்கள் உணரும் நாற்றத்தில்
வாழும் வாசனைத் திரவியங்கள்
நாங்கள் ..

குரங்கிலிருந்து வந்தவன் தான் நானும்
ஆனால் ,
தவளையாய் வாழ்கிறேன்
நீரிலும் , நிலத்திலுமாய் ..

செங்கலையும் , மரத்தையும்
தெய்வமாக்கியவன் நானல்ல !!
அந்த இயற்கையே
குலதெய்வமாக்கியவன் நான் ...
எங்கள் கடலம்ம ❤




ஆசை தீர தீர
அள்ளிக் கொடுப்பாள் ..
அது இன்பமாயினும் ,துன்பமாயினும் !!

கச்சத் தீவை கச்சிதமாய்
பங்காளிக்கு தந்துவிட்டாய் ..
எனக்கும் வாழ்வுண்டு
என்பதை ஏன் மறந்துவிட்டாய் ??

நாலு காசு
பார்க்கணும்னா ..
ஆழ்கடல் போய் தான் ஆகணும் ..

திசை மாறாமல் போக
ஆழ்கடலில்
எட்டுவழிச் சாலையும் அல்ல !!
என் எல்லை இதுவென காட்ட
ஹிந்தியில் பெயர் பலகையும் இல்லை !!

சுட்டு பிடிக்கிறான்யா ..
நாங்க பிடிச்சதையும் சுட்டுகிறான்யா ..

சரி .. நான் .. விஷயத்திற்கு வாறேன்

ஏன் வரல ?
எதுக்கு வரல ?
ஒருத்தரும் வரலயே ??

ஆழ்கடலில் புயல் வருமென
முன் செய்தி சொல்ல
முன்னே அனுப்பிய
ராக்கெட்டெல்லாம்
ஆகாய கடலில் மூழ்கிப் போச்சா ?

அதிகார மெதப்பில் உள்ளவனுக்கு
தண்ணீரில் மிதப்பவன் ஏளனம் தான் ..

மூச்சை
இழுத்து இழுத்து
விட்டு விட்டு
பயிற்சி செய்ய
இது உங்களின் யோகா கூடம் அல்ல
என் உயிருக்கான போராட்ட களமிது ..

புயல் வந்தது என்னமோ ஒரிரவு தான்
ஒரு நாளாச்சு
வரல ...
இரண்டு நாளாச்சு
அப்பவும் வரல ..
ஒரு வாரமாக போகுதய்யா
இன்னும் வரல ..



கிழக்கே
சூரியன் உதிக்க தொடங்கியாச்சு  ..
தொலைவில் வள்ளுவனும்
புது குறள் எழுத ஆரம்பிச்சாச்சு ..
கலங்கரை ஒளியும்
கொஞ்சம் கொஞ்சம்
நம்பிக்கை தந்தாச்சு ...
இறகை விரித்து
வட்டமிட கழுகும் வந்தாச்சு ...
இறக்கை சுத்துற
வான்பறவை மட்டும் வந்தபாடில்லை !!

வந்திருக்க வேண்டாமா ?
தேடியிருக்க வேண்டாமா ?
என்னை காப்பாற்றாமல் போயிருந்தாலும்,
என் நம்பிக்கையை காப்பாற்றிருக்க
வேண்டாமா நீ ?

ஏன்யா வரல ??
ஒருத்தரும் வரலயே ...

அன்னாந்து
பார்த்து பார்த்து
கழுத்து சுளுக்கிடுச்சு ...
காப்பாற்றென
கத்தி கத்தி
தொண்டை தண்ணீர் வற்றிப் போச்சு ..
பாதி உயிரும்
இதிலேயே போயிடுச்சு ..




இறப்பை பற்றி ஐயமுமில்லை ..
கவலையுமில்லை !!
என் ஆதங்கம் எல்லாம் ,

என்னை பெற்றவளும் ,
நான் கட்டியவளும் ,
நான் ஈன்றவனும் ,
என்னை ...
தொட்டு
கட்டியணைத்து
முத்தமிட்டு
அழுதும் புரளும் நிலையில்
என் உடலில்லையே ..!!

நான் பிடித்த
மீன்களின் சாபமோ ? என்னமோ ??
நானும்
துண்டு துண்டாக தான்
கிடைக்கிறேன் ..
விரல் , கை , கால் , சதையென !!

என்னை
அழுத்த அழுத்த தான்
நானும் , என் இனமும்
மேலேறி வருவோம் ...
தகர்த்தெறிவோம் ...
காத்திரு !!