Monday, 10 September 2018

ஒருத்தரும் வரல ....

***** ஒருத்தரும் வரல ****

( அந்த ஆவணப்படத்தை பார்க்காதவர்கள் தயவு செய்து பார்க்கவும் ..அந்த கடலில் , புயலில் சிக்கி , உயிர் நீத்த ஒரு மீனவனின் குரலாய் .. என் அழுகுரலின் கூப்பாடு )

நீங்கள் உணரும் நாற்றத்தில்
வாழும் வாசனைத் திரவியங்கள்
நாங்கள் ..

குரங்கிலிருந்து வந்தவன் தான் நானும்
ஆனால் ,
தவளையாய் வாழ்கிறேன்
நீரிலும் , நிலத்திலுமாய் ..

செங்கலையும் , மரத்தையும்
தெய்வமாக்கியவன் நானல்ல !!
அந்த இயற்கையே
குலதெய்வமாக்கியவன் நான் ...
எங்கள் கடலம்ம ❤




ஆசை தீர தீர
அள்ளிக் கொடுப்பாள் ..
அது இன்பமாயினும் ,துன்பமாயினும் !!

கச்சத் தீவை கச்சிதமாய்
பங்காளிக்கு தந்துவிட்டாய் ..
எனக்கும் வாழ்வுண்டு
என்பதை ஏன் மறந்துவிட்டாய் ??

நாலு காசு
பார்க்கணும்னா ..
ஆழ்கடல் போய் தான் ஆகணும் ..

திசை மாறாமல் போக
ஆழ்கடலில்
எட்டுவழிச் சாலையும் அல்ல !!
என் எல்லை இதுவென காட்ட
ஹிந்தியில் பெயர் பலகையும் இல்லை !!

சுட்டு பிடிக்கிறான்யா ..
நாங்க பிடிச்சதையும் சுட்டுகிறான்யா ..

சரி .. நான் .. விஷயத்திற்கு வாறேன்

ஏன் வரல ?
எதுக்கு வரல ?
ஒருத்தரும் வரலயே ??

ஆழ்கடலில் புயல் வருமென
முன் செய்தி சொல்ல
முன்னே அனுப்பிய
ராக்கெட்டெல்லாம்
ஆகாய கடலில் மூழ்கிப் போச்சா ?

அதிகார மெதப்பில் உள்ளவனுக்கு
தண்ணீரில் மிதப்பவன் ஏளனம் தான் ..

மூச்சை
இழுத்து இழுத்து
விட்டு விட்டு
பயிற்சி செய்ய
இது உங்களின் யோகா கூடம் அல்ல
என் உயிருக்கான போராட்ட களமிது ..

புயல் வந்தது என்னமோ ஒரிரவு தான்
ஒரு நாளாச்சு
வரல ...
இரண்டு நாளாச்சு
அப்பவும் வரல ..
ஒரு வாரமாக போகுதய்யா
இன்னும் வரல ..



கிழக்கே
சூரியன் உதிக்க தொடங்கியாச்சு  ..
தொலைவில் வள்ளுவனும்
புது குறள் எழுத ஆரம்பிச்சாச்சு ..
கலங்கரை ஒளியும்
கொஞ்சம் கொஞ்சம்
நம்பிக்கை தந்தாச்சு ...
இறகை விரித்து
வட்டமிட கழுகும் வந்தாச்சு ...
இறக்கை சுத்துற
வான்பறவை மட்டும் வந்தபாடில்லை !!

வந்திருக்க வேண்டாமா ?
தேடியிருக்க வேண்டாமா ?
என்னை காப்பாற்றாமல் போயிருந்தாலும்,
என் நம்பிக்கையை காப்பாற்றிருக்க
வேண்டாமா நீ ?

ஏன்யா வரல ??
ஒருத்தரும் வரலயே ...

அன்னாந்து
பார்த்து பார்த்து
கழுத்து சுளுக்கிடுச்சு ...
காப்பாற்றென
கத்தி கத்தி
தொண்டை தண்ணீர் வற்றிப் போச்சு ..
பாதி உயிரும்
இதிலேயே போயிடுச்சு ..




இறப்பை பற்றி ஐயமுமில்லை ..
கவலையுமில்லை !!
என் ஆதங்கம் எல்லாம் ,

என்னை பெற்றவளும் ,
நான் கட்டியவளும் ,
நான் ஈன்றவனும் ,
என்னை ...
தொட்டு
கட்டியணைத்து
முத்தமிட்டு
அழுதும் புரளும் நிலையில்
என் உடலில்லையே ..!!

நான் பிடித்த
மீன்களின் சாபமோ ? என்னமோ ??
நானும்
துண்டு துண்டாக தான்
கிடைக்கிறேன் ..
விரல் , கை , கால் , சதையென !!

என்னை
அழுத்த அழுத்த தான்
நானும் , என் இனமும்
மேலேறி வருவோம் ...
தகர்த்தெறிவோம் ...
காத்திரு !!

No comments:

Post a Comment