இங்கு கண்ணாடி குடுவையிலான கோப்பை ஒவ்வொருவரின் பக்கத்திலும் வைக்கப்பட்டுள்ளது . அதில் , அவர்களின் மனநிலைக் கேற்ப மது நிரம்பியிருக்கும் ..
ஒவ்வொருவரும் , ஏதோ ஒருவனின் வாழ்வில் வந்து கடந்து செல்ல நேரிடுகிறது .அப்படி , செல்கையில் தன்னிடமுள்ள மதுவிலிருந்து , சில துளிகளை அவனது கோப்பையில் ஊற்றி செல்வதும் உண்டு . அவனிடமுள்ள மதுவிலிருந்து சில துளிகளை , தன்னுடைய கோப்பையில் நிரப்பிக் கொண்டு செல்வோரும் உண்டு ..இப்போது , இவன் கதைக்கு வருவோம் !
இவன் கோப்பை மதுவினால் நிரம்பி வழிந்ததாக எந்த சுவடும் இல்லை .. இதுவரை ஒரு துளி மது கூட அந்த கோப்பையில் இருந்ததாகவும் தெரியவில்லை . இவன் இப்படி தான் .இவனுடைய வாழ்வும் இப்படி தான் ..
இதற்கு முன் , இவனை கடந்து சென்றவர்களில் சிலர் பரிதாப உணர்வுடன் சில துளியினை இவனது கோப்பையில் நிரப்ப முன்வந்த போது , அதை நிராகரித்து விட்டான் . இவன் அனுதாபத்தில் வருகின்ற துளிகளை ஏற்பதில்லை ஒரு போதும் .
அன்பின் மிகுதியில் யாராவது ஒருவர் , இந்த கோப்பையில் ஒரு துளி மதுவினை அளிக்க மாட்டார்களா ? என்று தான் ஏங்குகிறான் .. இதுவரை , அப்படி ஏதும் நடக்காத காரணத்தினால் சில நேரம் விரக்தியின் உச்சத்தில் அந்த கோப்பையை எறிந்து சுக்கு நூறாக சிதைத்துள்ளான் . இருந்தும் என்ன செய்ய ? , இந்த வாழ்வு இன்னும் மிச்சமிருக்கிறதே , ஆதலால் அவனுக்கு இன்னொரு கோப்பை வழங்கப்படுகிறது .
இந்த வாழ்க்கை முடிவதற்குள் , அவன் எதிர்பார்ப்பது ...
அந்த கோப்பையில் ஒரே ஒரு துளி மது மட்டுமே !!
No comments:
Post a Comment