Saturday, 26 October 2019

யாரோ ஒருவர்

** யாரோ ஒருவர் ** 

என்னுடைய காயத்திற்காக
யாரோ ஒருவர் 
துடிதுடித்துப் போகிறார் ...

என்னுடைய உரிமைக்காக 
யாரோ ஒருவர் 
வீதி இறங்கி போராடுகிறார் ...

என்னுடைய வாழ்விற்காக 
யாரோ ஒருவர் 
உயிரோடு தொலைந்தும் போகிறார் ...

என்னுடைய பசிக்காக 
யாரோ ஒருவர் 
அரைநிர்வாணமாய் மன்றாடுகிறார் ...

என்னுடைய இருப்பிடத்திற்காக 
யாரோ ஒருவர் 
சிறையினை இருப்பிடமாக கொள்கிறார் ..

நான் பறப்பதற்காக 
யாரோ ஒருவர் 
தன் சிறகினை வெட்டிக் கொள்கிறார் ...

நான் உறங்குவதற்காக 
யாரோ ஒருவர்
விழித்துக் கொண்டே இருக்கிறார் ...

நான் மேலேறி வருவதற்காக
யாரோ ஒருவர் 
கீழிறங்கி செல்கிறார் ...

நான் நிழலில் நிற்பதற்காக
யாரோ ஒருவர் 
மரமாகி போகிறார் ...

நான் சிரிக்க வேண்டுமென்பதற்காக
யாரோ ஒருவர் 
அழுது கொண்டே இருக்கிறார் ...

ஏன் ?
ஏன் ? 
நான் மட்டும் ஏன் ....
யாரோ ஒருவராக 
எவரோ ஒருவருக்கு 
இருப்பதில்லை ..
இருக்க முடிவதில்லை !!

No comments:

Post a Comment