Saturday, 26 October 2019

கல்லறைக்கு அருகில்

கல்லறைக்கு அருகில் ...

உயிருடன் இருத்தல் என்றால் என்ன ? 
இதயம் துடித்தால் உயிருடன் இருக்கிறேன் என்று அர்த்தமா ? அப்படி தான் இங்குள்ளவர்கள் சொல்லிக் கொள்கிறார்கள் ..

இவர்களின் பதில் சரிதான் என மனதையும் ,மூளையையும் ஒப்புக் கொள்ள வைப்பதற்கு நான் படுகின்ற சிரமம் இருக்கிறதே ............

மனதும் , மூளையும் ஒரு வரியை தான் தொடர்ந்து என் முன்னே வைத்து வாதம் செய்கிறது .. எங்களை போன்று இதயத்திற்கும் உடலில் ஒரு வேலை என இருக்கிறது .அந்த வேலையின் போது துடிக்கிறது , அதன் வேலையில் குறுக்கீடு நடக்கின்ற போது துடிப்பதை நிறுத்திக் கொள்கிறது ..அவ்வளவு தான் !!

என்னைப் பொறுத்த வரையில் , உணர்ச்சிகளின் வெளிப்பாடாய் தான் நான் உயிருடன் இருப்பதை உணர விரும்புகிறேன் . அது , இவர்களை போல இதய துடிப்பை காது வைத்தும், நாடியை பிடித்தும் உணர்வது அல்ல ..

வயிறு வலிக்க சிரித்து விட்டு , கண்களிலிருந்து கசிகின்ற கண்ணீரை துடைக்கின்ற போது ஏற்படுகின்ற உணர்வு ! 
அழுகைக்கும் , விசும்பலுக்கும் இடைவெளியில் இடைநிறுத்தமாய் விரல்களை மூக்கின் அருகில் வைத்து உள்நோக்கி மூச்சினை இழுக்கின்ற போது ஏற்படுகின்ற உணர்வு !!
சட்டென பயம் கொள்தல் ,கோபத்தில் எதையோ தூக்கி எறிதல் , சுயமாய் புணர்தல் , இன்னும் இன்னும் இன்னும் மிகுதியாய் ... 

கொஞ்சம் யோசித்து பார்த்தால் , நா.மு வின் வரியில் சிறு திருத்தத்துடன் ஒன்றை மட்டும் சொல்லத் தோணுகிறது .

கடைசியாய் 
உயிருடன் இருந்தது எப்போது ? 
ஞாபகமில்லை இப்போது !! 

தினமும் புழுக்கள் தின்றுக் கொண்டிருக்கும் பிணமாக தான் உணர்கிறேன் .என்ன மாயமோ ? என்னை சுற்றி இருப்பவர்களும் பிணமாக தான் தெரிகிறார்கள் . எல்லோரும் கல்லறைக்கு அருகில் நின்று கொண்டிருப்பது போல் இருக்கிறது !! 

                                                     -@யுவன்முத்து

No comments:

Post a Comment