யம்மா !! யம்மா !! டைம் ஆயிடுச்சு ...
நான் கிளம்புறேன்...
எப்போதும் போல் பரபரப்பாக கிளம்புகிறான் "ஷ்" ..
இவனின் வருகைக்காக ...எப்பவும் போல் காத்துக் கொண்டு இருக்கிறார்கள் ,அவனது கல்லூரி தோழிகளான ..
"னி" & "னோ" & "மா" ..
( என்ன பிடிபடலையா ? "_" இந்த குறிக்குள் இருப்பது அவர்கள் பெயரின் இறுதி எழுத்து .. இத்தொடர் முடியும் தருவாயில் சொல்கிறேன் ..அவர்களது பெயரை !! இல்லை ... நீங்களே உத்தேசித்து கொள்ளுங்கள் )
சிறு வயதில் இருந்தே ஒன்றாக தான் படிக்கிறார்கள் ,இந்த 4 பேரும். "ஷ்" வீட்டு வழியாக தான் கல்லூரிக்குச் செல்ல வேண்டும் .அது மட்டுமில்லாமல் , "ஷ்" வீட்டை சுற்றி பூக்கள் வித விதமாக பூத்து இருக்கும் ..அவனது தந்தை ஒரு தோட்டக் கலை தொழிலாளி ,கூடவே பூச்செடிகள் விற்பதும் ..
இதற்காகவே அந்த "னி" & "னோ" & "மா "
மூன்று பேரும் வருகை தருவது ஒரு காரணம் . இவர்கள் தலையில் பூ சூடிக் கொள்ளும் செலவு மிச்சம் பாருங்க ..
***
என்னம்மா ! "னோ" உன் அக்காக்கு குழந்தை பிறந்திருக்காமே ? என்று வினாவிக் கொண்டே அவள் தலையில் தான் கோர்த்த மல்லிகை பூவை வைக்கிறாள் "ஷ்" வின் அம்மா ..
ஆமா ! ஆண்ட்டி ... நாளைக்கு தான் நான் போய் பார்க்கனும் ..இன்னிக்கு கடைசி நாள் காலேஜ் ... அதான்..
சரிமா !! பார்த்து போய்ட்டு வாங்க ....
*****
உங்களுக்கு ஒன்று தெரியுமா ?
இந்த "ஷ்" க்கு "னோ" மீது ஒரு தலைக்காதல் .... இன்றாவது , எப்படியாவது சொல்லிட வேண்டும் என மனதை தயார் செய்து கொண்டு உள்ளான் ...
மதிய உணவுக்காக ... வகுப்பறையில் இருந்து எல்லோரும் வெளியே கிளம்புகிறார்கள் .."ஷ்" அவனது இடத்தில் அமர்ந்து எதையோ ,யோசித்துக் கொண்டே இருக்கான் ...
என்னடா ? சாப்பிட வரலையா .. என்னாச்சு இப்படி உட்கார்ந்து இருக்க .. வா..போகலாம் : "னோ" அவனது கையை பிடித்து கூப்பிடுகிறாள் ...
உன்ட .. கொஞ்சம் பேசணும் .. உட்காரு !!
அவளை அருகில் அமர வைக்கிறான் .. "ஷ்"
ஏய் ? நீங்க வேணும்ன போங்க ..நாங்க பின்னாடி வாறோம் என "னோ" சொல்வதற்கு முன்னாடியே "னி" யும் "மா" வும் நடையே கட்ட ஆரம்பித்து விட்டார்கள் !!
உங்களுக்கு இன்னொரு விஷயம் தெரியுமா ? இந்த "னி" க்கும் , "மா" க்கும் இவன் காதல் விஷயம் தெரியும் .. உனக்கு சொல்ல தயக்கமா இருந்தா சொல்லு !! நாங்களே அவளிடம் சொல்லிடுறோம் .. என சொல்லியும் பார்த்தாச்சு எப்பவோ ..
நம்ம துரை "ஷ்" தான் இல்லை , நானே சொல்லிக்கிறேன் . நீங்க எதுவும் பண்ண வேண்டாம் ,என அன்பு கட்டளையிட்டு உள்ளான் ..
ஏண்டி ?? "மா " இன்னிக்காச்சும் ... சொல்லிடுவானா ? இந்த பக்கி என சிரித்துக் கொண்டே போகிறாள் "னி"..
****
சரி... சொல்லுங்க ஷார் !! என்னாச்சு உங்களுக்கு ...
பையில் இருந்து ஒரு பேப்பரை எடுத்து அவள் முன் நீட்டுகிறான்..
எட்டாய் மடித்து வைத்திருந்த பேப்பரை விரித்து பார்க்கிறாள் ... கோபம் !! உச்சிக்கு ஏறி என்னடா இது ? ஒன்றுமே இல்ல .. வெறும் பேப்பரா இருக்கு ..
அவன் குடுத்தான் ! அதுல அவனால எழுத முடியலனு ... ஏன்ட சொல்லி அனுப்பிருக்கான் !! " ஷ்" மெளனத்தை உடைத்து பேச முயல்கிறான் ..
யாரு அவன் ? என்ன சொன்னான் ??
அவனா ??? அவன் ...அவன் ...
அடேய் !! சீக்கிரம் சொல்லு !! பசிக்குது எனக்கு ...
அவன் வேற யாரும் இல்ல .. எங்க வீட்டு மெயின் கதவை ஒட்டுன மாதிரி ஒரு ரோஜா செடி இருக்கும் ல .... அதுல பூக்குற ரோஜா பூ ( மஞ்சள் நிறம் ) ...
பூ வா ?? அதுக்கு என்ன ...
அது உன்ன ரொம்ப காதலிக்குதாம் .. அது சொல்லுது , அந்த பகுதியிலேயே அதுதான் மஞ்சள் நிறமா ? மற்றதைக் காட்டிலும் வித்தியாசமாக இருக்குமா. அதனாலே , எல்லோருக்கும் என் மேல ஒரு கண்ணு !! நான் ? நீ ? னு போட்டி போடுவாங்க ..என்ன பறிக்க ..
ஆனா.. நீ தான் அத கண்டுக்கொள்ளவே மாட்டேன்குறனு ரொம்ப பீல் பண்ணுது .. அதுக்கு உன் கூட சேர்ந்து இருக்கணும்னு ரொம்ப ஆசையாம் ..ஏன் ? உனக்கு அது பிடிக்கலையா ..
யாரு சொன்னா ?? அந்த மஞ்ச ரோஜா தான .. அது தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் .. நான் தினமும் வருவதே அத பார்க்கத் தான் ..என்ன ? எனக்கு பிடிச்சது இங்க எல்லோருக்கும் பிடிக்குது ..அதான், அது மேல கொஞ்சம் பொறாமை ..கண்டுக்கொள்ள மாட்டேன் .ஆனா,அத ஒரக் கண்ணால பார்ப்பேன் ..ரொம்ப அழகா இருக்கும் !!
அதுட போய் சொல்லு அவளுக்கு உன்ன ரொம்ப பிடிக்குமாம்னு..
நெஜமாத் தான் சொல்றீயா .."னோ" ..அப்புறம்,
அதோட காதல்வலியை வெளிபடுத்துகிற மாதிரி ஒரு விஷயம் சொன்னது !! சொல்லவா ??
சொல்லுடா !!
அந்த பூ சொல்லுது ..
அவளால் ..
பறிக்கப்பட்டு ..
அவளின் கூந்தலில் ஒய்யாரமாய் அமர்ந்த
பூவல்ல நான் !!
அவளால் ...
மறுக்கப்பட்டு ..
தற்கொலை என்கிற பெயரில் தானாக உதிர்ந்த
பூ நான் !!
அவளின் கூந்தலில் அமர்ந்த பூ வின் மணம் வாடியதை உணர்ந்த அவளுக்கு !!
தானாக உதிர்ந்து அவள் காலடிக்கு மெத்தையாகிய
எனது மனம் ஊசலாடுவது அவளுக்கு தெரியாமல் போனது ஏனோ ??
டேய் ...."ஷ்" ..என்ன அவ்வளவு லவ் பண்ணுதா ? அந்த பூ ..சரி..நாளைக்கு அத எங்க வீட்டுக்கு கொண்டு போய்டுறேன் .. இனிமே எப்பவும் அது என் கூட இருக்கும் ..கவலைப்பட வேண்டாம்னு , அதுட சொல்லு !!
சரி.."னோ" ..ஆனா,???
என்னடா ...திரும்ப...
இல்ல..அது இன்னொரு விஷயம் கடைசியா சொல்லுச்சு ..அதான்,எப்படி சொல்லனு தெரியாம.?
சொல்லுடா ...எதுனாலும்...இப்ப நீ சொல்றீயா ?? இல்ல நானே , அதுட கேட்கிறேன் ..விடு..
இரு ..நானே சொல்றேன்..அது சொல்லுது! உன்கூட அது சேர்ந்து வாழனுமா ? தினமும் காலையில உன் கூந்தலில் குடி புகுந்து ..மாலையில் குப்பைத் தொட்டிக்கு போகிற வாழ்க்கை அதுக்கு வேண்டாமா ? அதுவும் இல்லாமல் சில காலங்களில் அது பூக்கவே பூக்கதாம்..
உன் கூட எப்பவும் சேர்ந்து வாழனும்னா ?? அது மனிதனாக பிறவி எடுக்க வேண்டும் .இல்லையேல், நீ அதே செடியில் ஒரு பூ வாக உருவாக வேண்டும் .. இதுல ஏதாவது நடக்க எத்தனை ஜென்மம் வேண்டும் என தெரியவில்லை ..அதனாலே , எனக்கு பதிலா நீ ("ஷ்") கல்யாணம் பண்ணிக்கோ ..என்ன மாதிரி, அவள நீ சந்தோஷமா பார்த்துக் கொள்வாய் ..அதாவது , நான்...உன்ன கல்யாணம் பண்ணிக்க வேண்டும் என சொல்லுது ..என்ன பண்ண ???
( அருகில் அமர்ந்தவள் ..எழுந்து நிற்கிறாள் )
கையை இறுகப் பிடித்துக் கொண்ட "ஷ்" ..எங்கப் போற..அந்த பூ வுக்கு ஒரு பதில் சொல்லிட்டு போ ..
அவள் முகம் இப்போது இவனை திரும்பி பார்க்கிறது .. கண்களின் ஓரத்தில் கண்ணீர் துளிகள் .அந்த பூ க்கு இப்ப தான் அப்படி சொல்லத் தோணுச்சா ??
இல்ல !! இப்ப தான் அதுக்கு தைரியம் வந்துச்சு !! சொல்லிடுச்சு ..ஆமா ? அழுகுறீயா ??
நானா ? நான், ஏன் அழப்போறேன் நீ இருக்கும் போது .. அவனது இறுகிய கைப்பிடியை கண்ணருகே வைத்துக் கொண்டு , பெரு மூச்சு விடுகிறாள் ..
ஏய் ! லூசு..என்னாச்சு ..சரி திரும்பு ..தான் மறைத்து வைத்திருந்த அந்த மஞ்சள் நிற பூவை அவள் தலையில் வைத்து அதை அவள் சூடிய அழகை பார்த்து விட்டு .. தோல்கள் உரச ,கைப்பிடி இன்னும் இறுக அணைத்துக் கொண்டு முன்னே செல்கிறார்கள் ..
ஒரு பூ வின் காதல் ஜெயித்தது ...அட !! ஒரு நிமிஷம் ...சொல்ல மறந்துட்டேன் .. "ஷ்" அம்மா இன்னிக்கு காலையில "னோ" தலையில மல்லி பூ வச்சதுல ...அப்ப அது ..??
ஸாரி மல்லி ...
என் மனதில் "ஷ்" - பிரகாஷ்
"னோ" - வினோ "மா"-ஹேமா " னி"- ரஞ்சினி