Saturday, 26 October 2019

புணர்தலும் புணர்தல் நிமித்தமும்

நடுநிசியில் , 

இரவும் குளிரும் ..

நிலவும் மேகமும் ... புணர்ந்து கொண்டிருந்த அதே வேளையில் , 

அந்த அறையின் கட்டிலில் அவர்களின் உறுப்புகள் மட்டும் எந்தவித இடையூறுமின்றி புணர்ந்துக்  கொண்டிருந்தன ..

அவர்களின் உயிர் , கழட்டி எறிந்த ஆடையினை போல் எதிரெதிர் திசையிலிருந்து புணர்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது ..

#புணர்தலும்_புணர்தல்_நிமித்தமும்  

                                            @யுவன்முத்து

கல்லறைக்கு அருகில்

கல்லறைக்கு அருகில் ...

உயிருடன் இருத்தல் என்றால் என்ன ? 
இதயம் துடித்தால் உயிருடன் இருக்கிறேன் என்று அர்த்தமா ? அப்படி தான் இங்குள்ளவர்கள் சொல்லிக் கொள்கிறார்கள் ..

இவர்களின் பதில் சரிதான் என மனதையும் ,மூளையையும் ஒப்புக் கொள்ள வைப்பதற்கு நான் படுகின்ற சிரமம் இருக்கிறதே ............

மனதும் , மூளையும் ஒரு வரியை தான் தொடர்ந்து என் முன்னே வைத்து வாதம் செய்கிறது .. எங்களை போன்று இதயத்திற்கும் உடலில் ஒரு வேலை என இருக்கிறது .அந்த வேலையின் போது துடிக்கிறது , அதன் வேலையில் குறுக்கீடு நடக்கின்ற போது துடிப்பதை நிறுத்திக் கொள்கிறது ..அவ்வளவு தான் !!

என்னைப் பொறுத்த வரையில் , உணர்ச்சிகளின் வெளிப்பாடாய் தான் நான் உயிருடன் இருப்பதை உணர விரும்புகிறேன் . அது , இவர்களை போல இதய துடிப்பை காது வைத்தும், நாடியை பிடித்தும் உணர்வது அல்ல ..

வயிறு வலிக்க சிரித்து விட்டு , கண்களிலிருந்து கசிகின்ற கண்ணீரை துடைக்கின்ற போது ஏற்படுகின்ற உணர்வு ! 
அழுகைக்கும் , விசும்பலுக்கும் இடைவெளியில் இடைநிறுத்தமாய் விரல்களை மூக்கின் அருகில் வைத்து உள்நோக்கி மூச்சினை இழுக்கின்ற போது ஏற்படுகின்ற உணர்வு !!
சட்டென பயம் கொள்தல் ,கோபத்தில் எதையோ தூக்கி எறிதல் , சுயமாய் புணர்தல் , இன்னும் இன்னும் இன்னும் மிகுதியாய் ... 

கொஞ்சம் யோசித்து பார்த்தால் , நா.மு வின் வரியில் சிறு திருத்தத்துடன் ஒன்றை மட்டும் சொல்லத் தோணுகிறது .

கடைசியாய் 
உயிருடன் இருந்தது எப்போது ? 
ஞாபகமில்லை இப்போது !! 

தினமும் புழுக்கள் தின்றுக் கொண்டிருக்கும் பிணமாக தான் உணர்கிறேன் .என்ன மாயமோ ? என்னை சுற்றி இருப்பவர்களும் பிணமாக தான் தெரிகிறார்கள் . எல்லோரும் கல்லறைக்கு அருகில் நின்று கொண்டிருப்பது போல் இருக்கிறது !! 

                                                     -@யுவன்முத்து

யாரோ ஒருவர்

** யாரோ ஒருவர் ** 

என்னுடைய காயத்திற்காக
யாரோ ஒருவர் 
துடிதுடித்துப் போகிறார் ...

என்னுடைய உரிமைக்காக 
யாரோ ஒருவர் 
வீதி இறங்கி போராடுகிறார் ...

என்னுடைய வாழ்விற்காக 
யாரோ ஒருவர் 
உயிரோடு தொலைந்தும் போகிறார் ...

என்னுடைய பசிக்காக 
யாரோ ஒருவர் 
அரைநிர்வாணமாய் மன்றாடுகிறார் ...

என்னுடைய இருப்பிடத்திற்காக 
யாரோ ஒருவர் 
சிறையினை இருப்பிடமாக கொள்கிறார் ..

நான் பறப்பதற்காக 
யாரோ ஒருவர் 
தன் சிறகினை வெட்டிக் கொள்கிறார் ...

நான் உறங்குவதற்காக 
யாரோ ஒருவர்
விழித்துக் கொண்டே இருக்கிறார் ...

நான் மேலேறி வருவதற்காக
யாரோ ஒருவர் 
கீழிறங்கி செல்கிறார் ...

நான் நிழலில் நிற்பதற்காக
யாரோ ஒருவர் 
மரமாகி போகிறார் ...

நான் சிரிக்க வேண்டுமென்பதற்காக
யாரோ ஒருவர் 
அழுது கொண்டே இருக்கிறார் ...

ஏன் ?
ஏன் ? 
நான் மட்டும் ஏன் ....
யாரோ ஒருவராக 
எவரோ ஒருவருக்கு 
இருப்பதில்லை ..
இருக்க முடிவதில்லை !!

முட்டாளாகிய நான்

மனிதர்களை ரசிக்க வைப்பதே , அவர்களுக்குள் இருக்கும் முட்டாள்களால் தான் .அந்த முட்டாள் எப்போது வெளிப்படுவான் என்றெல்லாம் தெரியாது . ஆனால் , அவன் வெளிப்படும் போது மட்டும் தான் .. தன் நிலை என்னவென்று என உணர்ந்திட முடியும் ..தனக்குள் தென்படுகின்ற முட்டாள்களையெல்லாம் , எவன் கொன்று புதைத்து முன்னே செல்கின்றானோ ? 
அவனே தான் , மேதையாக ஏற்று கொள்கின்றனர் ..இன்னும் முட்டாள்களின் பிடியிலிருந்து வெளிவராத மனிதர்களால் !! 

இங்கு , மேதை என்பதே ஒரு மாயை தான் . முட்டாள் என்பவன் தான் நிரந்தரமானவன் ! தன்னை தானே  மேதையென கருதிக் கொள்பவன் , ஆகச்சிறந்த பெரும் முட்டாள் எனக் கொள்க ..

தனக்குள் இருக்கும் முட்டாள்களை தேடித்தேடி சந்திப்போம் . அவன் , முட்டாளாய் இருப்பதற்கான காரணத்தை கண்டறிவோம் .. முடிந்த அளவு , தன்னிடமிருந்து வெளிப்படும் முட்டாள்தனத்தை எண்ணி எரிச்சல் அடையாமல் .. அதனை ரசித்து புன்னகை செய்வோம் ....

நானும் முட்டாள் ..
நீயும் முட்டாள் ...💙💙

இதே நொடி !

சட்டை பையிலிருந்து .. 
ஒரு ரூபாய் நாணயத்தை எடுக்கிறேன் .. ரெண்டு பக்கமும் திருப்பி பார்க்கிறேன் .. சுண்ட வேண்டும் போலத் தோனுகிறது .. அதற்கேற்ப , இடுப்பளவு உள்ள மதிற்சுவரில் நாணயத்தை செங்குத்தாக நிறுத்துகிறேன் ,இடது கையின் ஆட்காட்டி விரலைக் கொண்டு ! 

இதே நொடியில் தான் ..இன்னொரு புறம் ! 
பறந்துக் கொண்டிருந்த பறவையொன்று கிளையின் மீது வந்து அமர்கிறது ..
இதே நொடியில் தான் .. எரிந்துக் கொண்டிருந்த விளக்கொன்று அணைந்து போகிறது .. இதே நொடியில் தான்.. கடற்கரையின் மணற்பரப்பிலுள்ள ஒரு குழியிலிருந்து நண்டு  மெல்ல எட்டிப் பார்க்கிறது ..

சுண்டுவதற்காக நிலைநிறுத்தப்பட்ட நாணயத்தை , வலது கையின் ஆட்காட்டி விரலைக் கொண்டு பலமாக சுண்டுகிறேன் ..
இதே நொடியில் தான் .. கிளையில் அமர்ந்த பறவையானது தன் அலகினால் சிறகினை நீவி சத்தம் எழுப்புகிறது .. இதே நொடியில் தான் , அணைந்து போன விளக்கினை கண்டு யாரோ ஒருவர் அதனை பற்றவைக்க தீப்பெட்டி தேடுகிறார் .. இதே நொடியில் தான் , குழியிலிருந்து எட்டிப் பார்த்த நண்டு முழுமையாக குழியிலிருந்து வெளியேறி தன் எதிரே இருக்கின்ற ஆழ்க்கடலை நோட்டமிடுகிறது ..

சுண்டப்பட்ட நாணயம் , சீராக சுழலுகிறது ..வேகம் மெல்ல மெல்ல குறைந்து முற்றிலும் எந்த வித இயக்கமின்றி .. நாணயத்தின் ஒருபுறம் மட்டும் தெரியுமளவு கீழே விழுகிறது !
இதே நொடியில் தான் .. கிளையில் அமர்ந்து சத்தம் எழுப்பிய பறவை , தன் சிறகினை விரித்து பறந்து போகிறது .. இதே நொடியில் தான் , அணைந்து போன விளக்கினை யாரோ ஒருவர் தீக்குச்சியினால் பற்ற வைக்கிறார் ... இதே நொடியில் தான் , குழியிலிருந்து வெளிவந்த நண்டு கடலின் பேரலை ஒன்றில் தன் உடலை நனைத்து விட்டு திரும்ப குழிக்குள் செல்லுகிறது ...

இதே நொடியில் தான் .. இப்போது நானும் ? 👣👣👣

ஒரு துளி !

இங்கு கண்ணாடி குடுவையிலான கோப்பை ஒவ்வொருவரின் பக்கத்திலும் வைக்கப்பட்டுள்ளது . அதில் , அவர்களின் மனநிலைக் கேற்ப மது நிரம்பியிருக்கும் ..

ஒவ்வொருவரும் , ஏதோ ஒருவனின் வாழ்வில் வந்து கடந்து செல்ல நேரிடுகிறது .அப்படி , செல்கையில் தன்னிடமுள்ள மதுவிலிருந்து , சில துளிகளை அவனது கோப்பையில் ஊற்றி செல்வதும் உண்டு . அவனிடமுள்ள மதுவிலிருந்து சில துளிகளை , தன்னுடைய கோப்பையில் நிரப்பிக் கொண்டு செல்வோரும் உண்டு ..இப்போது , இவன் கதைக்கு வருவோம் ! 

இவன் கோப்பை மதுவினால் நிரம்பி வழிந்ததாக எந்த சுவடும் இல்லை ..  இதுவரை ஒரு துளி மது கூட அந்த கோப்பையில் இருந்ததாகவும் தெரியவில்லை . இவன் இப்படி தான் .இவனுடைய வாழ்வும் இப்படி தான் .. 
இதற்கு முன் , இவனை கடந்து சென்றவர்களில் சிலர் பரிதாப உணர்வுடன் சில துளியினை இவனது கோப்பையில் நிரப்ப முன்வந்த போது , அதை நிராகரித்து விட்டான் . இவன் அனுதாபத்தில் வருகின்ற துளிகளை ஏற்பதில்லை ஒரு போதும் .

அன்பின் மிகுதியில் யாராவது ஒருவர் , இந்த கோப்பையில் ஒரு துளி மதுவினை அளிக்க மாட்டார்களா ? என்று தான் ஏங்குகிறான் .. இதுவரை , அப்படி ஏதும் நடக்காத காரணத்தினால் சில நேரம் விரக்தியின் உச்சத்தில் அந்த கோப்பையை எறிந்து சுக்கு நூறாக சிதைத்துள்ளான் . இருந்தும் என்ன செய்ய ? , இந்த வாழ்வு இன்னும் மிச்சமிருக்கிறதே , ஆதலால் அவனுக்கு இன்னொரு கோப்பை வழங்கப்படுகிறது .

இந்த வாழ்க்கை முடிவதற்குள் , அவன் எதிர்பார்ப்பது ...

அந்த கோப்பையில் ஒரே ஒரு துளி மது மட்டுமே !!