Thursday, 12 July 2018

நா. முத்துகுமார் !! - பேரன்பு

என் வாழ்வியலில் நா.முத்துகுமார் ..❤

தமிழுக்கும் , தமிழ் சினிமாவுக்கும் இவன்
ஒரு " அழகு குட்டிச் செல்லம் " 

"உன் பெயரை சொல்லும் போதே "  மனதிற்குள் ஏதோ ஒரு அன்பின் ஊற்று
வெளிப்படுகிறது ..

"கண் பேசும் வார்த்தைகளை"
உன் விரல்கள் பேசிய போது .. உனது ரசிகன் ஆனேன் ..

" தூர் " கவிதையினால் எத்தனை பேர் மனதை தூர் வாரி அவன் ஆணவத்தை அழித்துள்ளாய் ..

"பூக்கள் பூக்கும் தருணமும் "
உன் பேனா சிந்தும் தேன் துளிக்காக தான் காத்துக் கொண்டிருக்கிறது ..

" வெயிலோடு விளையாடி "
உந்தன் கைவிரல் கவியோடு உறவாடி
எந்தன் நிகழ் காலம் , எதிர் காலங்களை நோக்கி செல்கிறது ..

" ஆரிரோ ஆராரிரோ " இது எனக்கான
உந்தன் தாலாட்டு ..

உன் பேனா உடைப்பட்டு ..
"ஒரு கல்லும் .. ஒரு கண்ணாடியுமே" உடையாமல் மோதிக் கொண்டு காதல் செய்கிறது என்றால் ??

"நெருப்பு வாயினில் "
நீ சிக்குண்டாய் என்ற செய்தி காதில் வந்து விழுகிறது ..

அந்த தொலைக்காட்சி நேரலையில் காண்கிறேன் .. உனது இறுதி ஊர்வலத்தை .. 
" வேடிக்கை பார்ப்பவனாகிய " உன்னை இந்த உலகமே செய்வதறியாது வேடிக்கை பார்க்கிறது ..

" போகாதே " " போ...கா....தே " ..
நீ இருந்தால் நான் இருப்பேன் .. கத்தி சொல்ல முயல்கிறேன் .. உனக்கு கேட்குமா என்பதறியாது .. ?

நீ சொன்னது போல் ... " தெய்வங்கள் எல்லாம் தோற்றே போனது "
உன் பேரன்புக்கு முன்னால் ...

ஏய் ... " பறவையே எங்கு இருக்கிறாய் " என தேடப் போவதில்லை  நான் ..
நீ என்னோடு தான் இருக்கிறாய் ..என் வலியோடு , உணர்வோடு இன்னும் !!

" ஒரு நாளில் " முடிந்துவிடுமா ?? உன் வாழ்வும் , உந்தன் கவியும் ..

"இன்னும் ஒரு இரவு ... இதோ ... இதோ "
என உன் நினைவோடு கடந்து சென்று கொண்டிருக்கிறேன் ..

நீ மீட்டிய "ஆனந்த யாழை " இன்னும் ரீங்காரித்துக் கொண்டு தான் உள்ளது ...

@யுவன்_முத்து





Sunday, 17 June 2018

அ....ப்...பா...

மூத்தப் பிள்ளையா ..
முத்து பிறப்பானு ...
முன்கூட்டியே
தெரிஞ்சிருந்தாயா !! 😝

என் கால்மிதி
சைக்கிள் நகர்வில்
மூச்சிறைக்க
பின்னால் ஓடி வர ...

உன் மூச்சுக் காற்று
சத்ததைக் கேட்டு ...
டயரில் காற்று போச்சான்னு !
சிரிப்பை சிதறிய தருணம்
மூளையின் ஒரு மூலையில்
இன்னும் இருக்கு ...❤

சிறு வயதில் ..
குரல் உயர்த்தி ..
ஓங்கி அறைந்த
உன் கைகள் எல்லாம் ..

வயது ஏற ஏற ..
உயர்த்திய குரல் ஊமையாகவும் ..
அறைந்த கைகள் அணைத்துக் கொண்டதும் ..
இன்றுவரை புரியாத புதிர் தான் ..😵

நான் !!
பசின்னு நின்னது இல்ல ...
உன் !!
பசியை வெளியே சொன்னதில்லை ..🙇

பெயர் சொல்லும் பிள்ளையாவும் இல்ல
பெயரைக் கெடுத்த பிள்ளையாவும் இல்ல
பெயரளவிலே உன் பிள்ளையா இருக்கேன் ..😥

அந்த சனிக்கிழமை இராத்திரி
தார்ச்சாலையில
தள்ளுவண்டியில
நூறு வாழத்தாரை
ஒத்தையில
மூச்சு வாங்க தள்ளி
நிற்கையில !!
என் நினைப்பு வந்து
துணைக்கு கூப்பிடுக்கையில
தான் எல்லாமே தெரிஞ்சது !!

என் காலின் ரப்பர் செருப்புக்கும்..
உன் பாதத்தின் பித்த வெடிப்புக்கும் ..
உள்ள காதல் !!❤

என் கலர் சட்டைக்கும் ..
கறை படிந்து ..
ஓராயிரம் ஓட்டையில்
தெரியும் உன் மேனிக்கும்
உண்டான காதல் ..❤

நான்
முகம் பூசிய பவுடர் நாற்றத்துக்கும் ..
உன்
முகத்தில் வடிந்தோடிய வேர்வை வாசனைக்கும் ..
இடைப்பட்ட காதல் ...❤

முதலில்
தோளில் சுமந்தாய் ...
இன்றும்
தோழனாய் சுமந்துக் கொண்டிருக்கிறாய் ..❤

அக்கம் பக்கத்து
உற்றார் உறவினரெல்லாம் ..
ஒருசேர சொல்றான் ..

உன் அப்பன்
ரொம்ப உழைச்சிட்டான்
ஓய்வு கொடு என ..

நான் ஓய்வெல்லாம் தர போவதில்லை
வரம் தர நினைத்திருக்கேன் ..
என்னை பிள்ளையாய்
பெற்றமைக்கு அல்ல
எதிர்ப்பார்ப்பில்லா உழைப்பிற்காக

இவ்வளவு நாள் காத்திருந்தாய் ..
இன்னும் கொஞ்ச காலம் பொறுத்திரு ..
முருகன் மகன் முன்னுக்கு வருவான் !!❤❤

Tuesday, 12 June 2018

தீராத காதல் - 1 ..

அந்த மழலையின்
பொக்கை வாய் சிரிப்பினில் ..
தொலைத்த
பொக்கிஷத்தை தேடுவது
என்றுமே தீராத காதல் தான் ...

அடைமழைக்கான
அறிகுறியாய்
முதல் துளி மேனியில் விழ ..
அன்னாந்து
இமைமூடி இரண்டாம் துளிக்காக
காத்திருப்பது
என்றுமே தீராத காதல் தான் ..

பக்கத்திலேயே சுற்றித் திரியும்
பட்டாம்பூச்சியை
கையில் பிடிக்க
முயற்சித்து முயற்சித்து
தோற்றுப் போகையில்
எட்டிப் பார்க்கும்
தோல்வி புன்னகை
என்றுமே தீராத காதல் தான் ..

அப்பனாவதற்கு
சில காலமே இருக்கையில்
இன்றும்
அன்னையின் மடிக்கு
தவமிருப்பது
என்றுமே தீராத காதல் தான் ..

பிரிந்தவளோ ...
மறந்து போனவளோ ..
என்றாவது
அன்பின் கதவை தட்டுவாள்
என காத்திருப்பதும்
தீராத காதல் தான் ..

இலை உதிர்ந்த கிளையோ ..
கிளை உடைந்த மரமோ ..
எதுவாகிப் போயினும்
தளராது தாங்கும்
வேரின் அன்பு
என்றுமே தீராத காதல் தான் ..

பூக்காரி தான்
பறித்த பூக்களை
நூலில் ஒவ்வொன்றாக
இறுக்கி கொல்கையில்
அவை ..
தேன் சிந்தி
மலர்ந்த கதை
வாழ்ந்த கதையை சொல்வது
என்றுமே தீராத காதல் தான் ..

இருண்டுப் போயிருக்கும்
அம்மாவாசை இரவிலும் ...
தன் எழுத்தால்
நிலவை வரவழைக்க
முயலுபவனுக்கு
நிலவின் மேல்..
என்றுமே தீராத காதல் தான் ...

தன்னுடைய
இன்றைய முகம் காண
கடலிருந்தும்
குளமிருந்தும் ..
சாலையின் குழியில்
தேங்கிய மழைநீரில்
முகம் காணும்
நிலவின் குணம்
என்றுமே தீராத காதல் தான் !!






Friday, 11 May 2018

மெல்லத் தமிழினிச் சாகுமோ ??

***மெல்லத் தமிழினிச் சாகுமோ ***

(கவி அல்ல .. என்னிடமிருக்கும் கேள்விகள் )

மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"
என்றந்தப் பேதை யுரைத்தான் - ஆ!
இந்த வசை எனக்கெய்திடலாமோ?

(அந்த பேதை எதை யூகித்து அப்படி கூறியிருப்பான் )...ஒருவேளை ?

வெண்பா இயற்றுமளவுக்கு ஞானமில்லை 
விருத்தத்தில் விளையாடும் வீரனுமில்லை
எதுகை , மோனை தெரிந்தும்
செயலில் காட்ட சொற்கள் சிக்கவில்லை !!
இருப்பினும் ..
நம்புங்கோள் !!
என்னதும் புதுகவியென அடம்பிடிப்பதால் ..

என்னாலும்
மெல்லத் தமிழினிச் சாகுமோ ??

அது திறந்தவெளி
தானியங்கி காசோலை எந்திரம் ..
வரிசையில்
பத்தோடு பதினொன்றாக நான் !!
எனக்கான நேரம் வருகையில்
தொடுதிரையில் கேள்வியொன்று ..
தமிழா ? ஆங்கிலமா ?
துளியும் யோசிக்காமல்
வேற்றுகிரகத்தவனை சீண்டுகிறேன் ..

இதனாலும்
மெல்லத் தமிழினிச் சாகுமோ ??

கையொப்பம் இடும் சமயத்தில்...
நண்பனின் கேள்வி ..
என்ன தமிழில் தானா ? 

இல்லை ..
தாய்மொழியில் தான் ..

அறை அதிர சிரிக்கிறான் ..

இந்த நகைப்பாலும்
மெல்லத் தமிழினிச் சாகுமோ ??

இவனை பெற்றெடுக்க
அவள் முந்தானை விரித்தது
என்னமோ ?
தமிழுக்குத் தான் ..
ஆனால் ,
தன் பெயரை
தன் மொழியில் கிறுக்கிடும் போதும்
தலைப்பெழுத்து என்னமோ ?
ஆங்கிலம் தான்

இந்த தலைப்பெழுத்தாலும்
மெல்லத் தமிழினிச் சாகுமோ ??

தாய்ப்பாலுக்கு ஏங்கி
அவளின் முலைக் காம்பை
கவ்விய உதடுகள் ..
தாய்மொழி உச்சரிக்க மட்டும்
தடுமாறுவது ஏனோ ??

இந்த உதடுகளாலும்
மெல்லத் தமிழினிச் சாகுமோ ??

அந்த குக் கிராமத்தின்
தெரு மூலையில்
அண்ணாச்சி மளிகை கடை ..
தலை உயர்த்தி
சீரியல் பல்பில் பிரகாசிக்கிற
பெயர் பலகையை பார்த்தால்
"அண்ணாச்சி டிபார்ட்மெண்ட் ஸ்டோர் "

இந்த பெயர்பலகையாலும்
மெல்லத் தமிழினிச் சாகுமோ ??

தரணியே ..
ஆண்ட தமிழன் !
இன்று ..
மிஞ்சி இருக்கும் ஒரு  பகுதியை
ஆள்வதற்கே வக்கில்லை
என்கிறபோது

மெல்லத் தமிழும் , தமிழினமும் சாகுமோ ?

பள்ளியறைத் தாயம்மாளோ ?
பேச்சியம்மாளோ ?
ஆண்டியப்பனோ ?
முத்துச்சாமியோ ?

கிளவன் ,கிளவி நினைவில்
தன் பிள்ளைக்கு பெயர் சூட்டிய
காலம் கழிந்து ..
இணையத்தில் பெயர் தேடுகின்ற
சமூகத்தாலும்

மெல்லத் தமிழினிச் சாகுமோ ??

அங்கன்வாடி எல்லாம்
ஆராய்ச்சி கூடமாக
மாறும் காலம் சில தூரமே ..
கண் விழித்து காத்திருப்பீர் !!
பிறக்கின்ற அத்தனை குழந்தையும்
தாய்மொழி வழி கல்வியை
புறக்கணிக்க வாய்ப்பிருக்கு
சீரழிந்த இந்த சமூகத்தால் ..

வேற்று மொழி பயிலும்
கல்வியாலும் ..
மெல்லத் தமிழினிச் சாகுமோ ??

தாய்மொழி மட்டும் கல்
என சொல்ல
திராவிட கட்சியல்ல நான் ..
அத்தனையும் கல்
கற்று விட்டு சொல் ..
யாமறிந்த மொழிகளிலே என ??
பாரதியின் கட்சியில்
உமக்கும் ஒரு இடமுண்டு ..

Sunday, 22 April 2018

இரண்டாம் இரவு

இன்றைய இரவு
வழக்கம் போல் இருக்காது !!
இமைகளும் உறங்காது !!
எனது இரண்டாம் இரவு ..

நான்
அந்த அறைக்குள் வந்தாயிற்று ..
அறை முழுவதும் மெளனமாயிற்று ..
தொங்குகின்ற பூக்கள் வாசனையற்று ..
தலையனைகள் கூட கனமாயிற்று ...

அவளிடத்தில் ..
இன்னொருவள் ... அவளாகவே
வர காத்திருக்கிறாள் ..

என் இதயத்தில் இடம் தேடியவள் ..
வீட்டுச் சுவற்றில் குடிபெயர்ந்து விட்டாள்..

அவளை நெருங்குகிறேன் முன்னோக்கி ..
நினைவுகள் எல்லாம் பின்னோக்கி ..

மணவறையில் இணைந்த கைகள் ..
முதலிரவில் தொடங்கிய ஊடல்கள் ..
அதன் விளைவாய் இரட்டை குழந்தைகள் ..
விபத்தில் சிதைந்த உடல் உறுப்புகள் ..
அவளின் ..
கல்லறையில் சிந்திய கண்ணீர்கள் ..

இரு குழந்தைகளுக்காக மட்டுமின்றி
மூன்றாம் குழந்தையாகிய எனக்காகவும்
தான் மறுமணம் ..

அவளுடன் பகலையும் இரவாக்கி
உயிர் கலந்திருக்கிறேன் ..
இருந்தும் ,
மனதளவில் ஒரு தயக்கம் !!
புது மங்கையினால் வந்த கலக்கம் !!
.
.
.

புதியவள் வந்துவிட்டாள் ..
என்னருகே வருவதற்கு முன்னால் ..
அவளே வணங்கிவிட்டு வருகிறாள்..

அருகில் அமர்ந்தவளுடன் ..
சில பல கதை பேசி ..
தேக உரசலில் மயிர் கூச ..
இரவை மேலும் இரவாக்க
விளக்கு அணைக்கப்படுகிறது !!

நான் கற்றுக்கொண்ட மொத்த
வித்தைகளையும் ..
அவள் சொல்லித் தந்த
சில மிச்சங்களையும் ..
அட்டவணை படுத்தி வைத்திருக்கிறேன்
மனதுக்குள் !!

முன்னவளுடனான..
முன் விளையாட்டுகள் எல்லாம்
முதலிரவில் மூர்க்கத் தனமாகவே
இருந்தது ..
ஆர்வ மிகுதியில் ,
அவளது காதினை கடிந்து விட்டேன் ..
அலறுகின்ற சத்ததில் "ஆ" என்றாள் ..
செய்வதறியாவது ..
Sorry என்றேன் !!

அறை அதிர சிரிக்கிறாள் ..
லுசு என சிணுங்குகிறாள் ...
இறுக்கி அணைத்து கொள்கிறாள் ..
வன்முறை செய்வதற்கு
ஏற்ற இடம் கட்டில் மட்டும் தான் போல் ..
இந்த முறை தெளிவோடு இருக்கிறேன் ..

சத்தமில்லாத
முத்தங்கள் பரிமாறப் படுகிறது ..
கழட்டப்படும் என தெரிந்தே
அவள் அணிந்து வந்த
அணிகலன்களும் ,
ஆடைகளும் ,
சீரான இடைவெளியில் வீசி
எறியப் படுகிறது ...

இப்போது அவள் நியாபகம் இல்லை ..
இருக்கவும் கூடாது ...
இருப்பின் ..
அது இவளுக்கு செய்யும் துரோகம் ..

ஆடையின்றி நிர்வாணமாய் இருப்பதால் ..
என் எழுத்துகளும் நிர்வாணமாக மாற போகிறது ..

வயதுக்கு வந்தோர்
படிக்கலாம் ..
வராதவர் வந்த பின்
படிக்கலாம் ..
துளியும் விருப்பமில்லாதவர்
இத்துடன் இதை புறக்கணிக்கலாம் ..

படைப்பின் சிறப்பு யாதெனில்
இரண்டு கைகளுக்கு
இரண்டு அங்கம் தான் !!

இறைவா ,
பத்து விரல் இருக்கிறேதே ..
அடுத்த முறையாவது படைக்கும் முன்
இதை கருத்தில் கொள் ..

மாறி .. மாறி ...
கட்டி, தழுவி
அணைக்க .. அணைக்க ..
வியர்வையால் உடல்
நனைய .. நனைய ...
சலசலப்பின்றி
இடைவிடாத சத்ததில்
கட்டில் ஆட்டம் ஆடுகிறது ..

மேல் மூச்சு
நான் விட ...
கீழ் மூச்சு
அவள்  விட ..
படுக்கையை மட்டுமின்றி
சுவாசித்தலையும் பங்கிட்டுக் கொள்கிறோம் !!

இரண்டாவது இரவில்
முதல் ஆட்டம்
வெற்றி தோல்வியின்றி முடிந்தது ..

இரண்டாவது ஆட்டம்
இடைவேளைக்குப் பின்
தொடரும் ..
இடைவேளையிலும் ஒரு ஆசை !!

அவளின் அடர் கூந்தல் இருட்டில் ..
என் முகம் புதைத்து துயில வேண்டும் ..
நான் விடும் பெருமூச்சில் !!
கூந்தலின் மயிரிழைகள் ..
மேலெழும்பி
பளார் ...பளார்.. என
கண்ணத்தில் அறைய வேண்டும்
இந்த இரவிலும் துயிலுவாய என ??

ஏனைய உறுப்புகள்
வரம்பு மீறி வம்பு செய்ய ..
கைவிரல்கள் மட்டும்
நட்புணர்வாய் பிசைந்து கொள்கிறது ..
அறை முழுவதும்
அவளது முனகல் ஒலி
இன்னிசையாய் எதிரொலிக்கிறது  ..

இரண்டாவது இரவில்
இரண்டு , மூன்று ஆட்டங்கள் முடிந்தபின்
எனது மார்பை
தலையணையாய் எண்ணி
தலை சாய்கிறாள் !!
ஒரு கையில் பற்ற வைத்த நெருப்பு ..
மறுபுறம் அவளின் நினைப்பு ...
இதற்கு மத்தியில்
இவளிடமிருந்து ஒரு கேள்வி ..

தப்பாக நினைக்க வேண்டாம் ..
மகிழ்வாய் இருந்தது
முதலிரவா ? இரண்டாம் இரவா ??

முதலிரவு என்றால் ..
இவளுக்கு வரும் சோகம் !!
இரண்டாம் இரவு என்றால் ..
அவளுக்கு செய்யும் துரோகம் !!

வேறு வழியில்லை ..

மூன்றாவது இரவையும்
பார்த்து விட்டு
பதில் சொல்லவா என்றேன் ...

பொறுக்கி ..என இதய வாசலை கையால் ஓங்கி குத்துகிறாள் ..

Sunday, 15 April 2018

கண்ணாமூச்சி ..ரே !! ரே !!

கண்ணாமூச்சி !!
ரே ... ரே...
கண்டுபிடி !!
ரே ... ரே ...

கண்ணாமூச்சி ஆட
போனவள்..
நிரந்தரமாக இமை மூடி
வருவாள் ..
என யார் நினைத்திருப்பார் ??

விளையாட்டுக்காக
எங்கேயாவது ஒளிந்திருப்பாள் ..
என்றிருந்தவர்களுக்கு !!

சுடுகாட்டுக்காக
மறைத்து வைக்கப்பட்டு உள்ளாள் ..
என பின்னரே தெரிந்தது !!

பிஞ்சுவை
பதம் பார்த்த ...
காவி நஞ்சுகளுக்கு !!
அந்த நீலகண்டனின் குடியிருப்பும்
துணை போயுள்ளது
வருத்தமே ..

உன் மதநல்லிணக்கம் என்பது
இந்து கோவிலின் கருவறையில் ..
முஸ்லிம் குழந்தைக்கு கல்லறை ..
கட்டுவதா ?

அந்த அரக்கனின் பிடியில் ..
அவள் என்ன செய்திருக்க முடியும் ?

அவளின் மழலை மொழியில்
காப்பாற்றுங்கள் ! காப்பாற்றுங்கள் !!
என கதறித் துடித்திருப்பாளோ ??

அய்யோ !!

அதன் அர்த்தம் தெரியாதே அவளுக்கு ..

வேறு என்ன சொல்லிருப்பாள் ??
பல ஆயிரம் அம்மா ..
சில ஆயிரம் அப்பா ..

அரக்கனின் செவிக்கு எட்டவில்லையா ??
அவனின் மதிக்கு தோணவில்லையா ??
தானும் !!
ஒரு குழந்தைக்கு அப்பா ..
ஒரு அம்மாவிற்கு குழந்தையென ..

               *****************

மானையும் , பெண்களையும்
வேட்டையாடுபவனுக்கு பெயில் ...
நீர்க்காகவும் , உரிமைக்காகவும்
போராடுபவனுக்கு ஜெயில் ..

நீதித்தாயே !!
உனக்கும் கண்ணாமூச்சி பிடிக்குமோ ??
இன்னும் எத்தனை காலம்
கண்மூடி இருக்கப் போகிறாய் ??

உன் தராசும்
சந்தைகாரனைப் போல் ..
ஏமாற்று வேலை செய்கிறது !!
டிஜிட்டல் இந்தியாவில்
உனக்கும் டிஜிட்டல் அளவு இயந்திரம்
வாங்கித் தர வேண்டும் போல் ..

நீதிமான்களே ..
தீர்ப்பு என்கிற பெயரில்
10 ரூபாய்
பேனாவின் முனையை உடைப்பதே
நிறுத்துங்கள் ..

மரணத்தை விட பெரியதாக
ஏதாவது தர முயலுங்கள் ..

இப்போதைய இந்தியா பற்றி
அப்போதைய பீம்ஜி - க்கு
தெரியாமல் போயிற்று ..
தெரிந்திருந்தால் !!
இந்த சிறார் குற்றங்களுக்கு
சாமானை சுட்டுத் தள்ள
சட்டம் எழுதியிருப்பார் ..

தூரத்தில் ஒரு சத்தம்
கண்ணாமூச்சி !
ரே .. ரே ...
கண்டுபிடி !!
ரே ... ரே ...

யாரும் தடுக்க வேண்டாம்
அவள் விளையாடட்டும் !!

8 வயது சிறுமிக்கு
அரை குறை  கௌவுன் தான் போட முடியும் !!

இவர்களுக்கு பயந்து ..

மீண்டும் சேலை உடுத்தி
மணமேடையில் உட்கார வைக்க முடியாது !!

ரே ... ரே....ரே...ரே....
ரே...ரே.....ரே....ரே....

Wednesday, 4 April 2018

வேண்டும் !! வேண்டும் !!

முழுவதும் படிக்க
நேரமும் , பொறுமையும்
உங்களுக்கு வேண்டும் ..




சுட்டெரிக்கும் வெயிலில் ..
கொட்டும் மழை வேண்டும் !!

கொட்டுக்கின்ற மழையில் ..
நீர்ப்பிடிப்பு அணைகள் நிரம்ப வேண்டும்!!

மேலும் மழை பொழிய வேண்டும் ..
அணைகளின் ஆயுளுக்கு ஆபத்து வர வேண்டும் !!

அப்போது 
அவன் திறந்து விட்டுத் தான் ஆக வேண்டும் ..

உன் தண்ணீரை நீயே வைத்துக் கொள் !!
என,
தன்மான தமிழன் சொல்ல வேண்டும் !!

தன் தவறை அப்போதாவது ..
கன்னடனோ ? மலையாளனோ ?
உணர வேண்டும் ..

உபரி நீர் தருவதை 
நிறுத்திட வேண்டும் ..
உரிமை பெற்ற நீரை 
குறைவின்றி தந்திட வேண்டும் ...

மேலாண்மை வாரியங்கள் எல்லாம்
நல வாரியமாக மாற வேண்டும் !!

இதை வைத்து கபட நாடகமாடிய
திராவிட கட்சிகள் எல்லாம் ..
நாடு கடத்தப் பட வேண்டும் !!

விரிந்திரிக்கும் கைகள் எல்லாம் ..
சுருங்கிப் போக வேண்டும் !!

நம் கனவிலாவது
தாமரை மலர்ந்திட வேண்டும் !!

இன்று இருக்கும் சூழ்நிலைக்கு
தமிழகத்தை வீரப்பன் ஆண்டிருக்க வேண்டும் !!

சிலைகளின் ..
தலை கொய்வேன் ..
என சூளுரைத்தவனை தட்டிக் கொடுக்க ..
வெண்தாடி கிழவனின் தடிகளுக்கு உயிர் வந்திருக்க வேண்டும் !!

அப்புறம் ... இதுவும் வேண்டும் ..


****

பாலியல் தொல்லை என இடம்பெறாத ..
செய்தித்தாள் காண வேண்டும் !!

ஒரு நடுநிசி இரவில் ..
செல்லாத நோட்டு போல ..
செல்லாத தலைவர்கள் என பட்டியல் அறிவிக்க வேண்டும் !!

"பூணை மேல் மதில் "
என..
புதிய பழமொழிகள் பிறக்க வேண்டும் !!

உண்ணாவிரதப் போரட்டங்களில் ..
மூன்று நேர உணவு இடைவேளை ..
கண்டிப்பாக வேண்டும் !!

தொழிலதிபர்கள் ..
வாங்கிய லோனை கட்ட வேண்டும் ..
விவசாயிக்கு ..
உரிய மரியாதை தந்துவிட வேண்டும் ..

அத்தனை கம்பெனி வாசல்களிலும் ..
"WANTED ENGINEERS " என்ற பலகை
தொங்க வேண்டும்  !!


*****

எங்களுக்கு எதற்குடா
ஸ்டெர் "லைட்" ??
வெளியேற மறுத்தால் ..
உனக்காகவும் உயர்த்தி  காட்டப்படும் ப்ளாஷ் "லைட்" (flash light)...




பூமியின் ஆழம் அறிந்து
மீத்தேன் எடுத்தாய் !!
மண்ணிற்கும் , மனிதனுக்கும் உயிர்
உள்ளதை ஏன் மறந்தாய் ??

எங்களின்
போராட்டங்கள் எல்லாம்
கொண்டாட்டங்களாக  மாற வேண்டும் !!

ஒற்றுமையாக போராடும் குணம் ..
பெருகிட வேண்டும் !!
நம்மை அழிக்க நினைப்பவனுக்கு ..
அதுவே முடிவாக அமைய வேண்டும் !!
வேண்டும் !! வேண்டும் !!


முழுவதுமாக படித்திருந்தால் விமர்சனம் செய்ய வேண்டும் ...

Thursday, 15 March 2018

** என் அண்ணனுக்காக **

(அவள் -அம்மா .. அவர் -அப்பா ... அண்ணன் -அவன் .. இவையெல்லாம் அன்பின் வெளிப்பாடே )

மூத்தவனே ..
எனக்கு முன்னால் எல்லாம் அவனே ...
ஆம் !!

நான் குடியேறுவதற்கு முன்னால் ...
அவளின் கருவறை ..
அவளுடான தொப்புள் கொடி ..
அவளது மார்ப்பின் பால் ..
அவளின் தாலாட்டும் மடி ..
அவளின் கைப்பிடிச் சோறு ..

இன்னும் சொல்லப் போனால் !!

அவளின் அன்பு முத்தங்கள் மற்றும் பல ...

                        
அதுபோலத்தான் ...அவருடனும்...

அவரின் மார்ப்பில் தூக்கம் ..
அவரின் தோள்களில் உப்பு மூட்டை ..
அவரின் மேல் யானை சவாரி ..
அவரின் அரவணைப்பு எல்லாம் ..

ஆனால், என்ன ?? இவையெல்லாம்
அவனுக்கு நிரந்தரமாக கிடைக்கவில்லை ..
அதை பங்கீட்டுக் கொள்ள
வந்த என் வருகையால் ..

எவ்வளவு பெரிய தியாகம் இவையெல்லாம் ..
அண்ணா ! Loves lot ..

********

அவன் !!
வெயிலிலும்,மழையிலும் ...
ஆடி ,பாடி ,ஓடி ...
குண்டி தெரிய கிழித்த டவுசர்களை எல்லாம் ..
ஒட்டுப்போட்டு தைத்துக் கொண்டு..
நான் ஆடுகிறேன் ,
அந்த வெயிலிலும் , மழையிலும் !!

அவன் !!
ஆசை..ஆசையாய் ..
வாங்கிய கலர் சட்டைகள் எல்லாம்
இப்போது என் வசம் ஆகிவிட்டது ..

அவன் எழுதிய சிலேட் ,
அவன் படித்த கோனார் தமிழ் கையேடு ..
முதற்கொண்டு ..
எனக்காக பத்திரமாக வைத்திருந்தார்கள் !!

இன்னும் சொல்லப்போனால் ..

என் வாழ்வில் வந்த முதல் நண்பன் ..

ஒரு ரூபாய்க்கு வாங்கிய மிட்டாயை
இரண்டாக பகிர்ந்துக் கொண்டோம் ..

டிவி ரிமோட்காக அடித்துக் கொண்டோம் ..
இதைப்பார்த்து அப்பா கை ஓங்கையில்
ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு
நலம் விசாரித்தோம் ..

எனக்காக விட்டுக்கொடுத்த ..
பேருந்தின் ஐன்னல் இருக்கை !!
அம்மா சுட்ட சூடான மொறுவலான எண்ணெய் தோசை ...
அவ்வளவு எளிதில் நினைவுகளிலிருந்து
அகற்ற இயலாது ..

********

வயது ஆக ஆக ...
அவன் அண்ணன் என்ற நிலையில் மட்டுமின்றி ..

என் வழி தவறவிடாது காத்திடும் அப்பாவாக !!

அறிவை வழங்கிடும் ஆசானாக !!

தோள் கொடுத்திடும் உற்ற தோழமையாக !!

அன்பு காட்டிடும் அம்மாவாக ??

இல்லை ! இல்லை !!

அந்த பொறுப்பை மட்டும் அவன் மனைவியிடம் வழங்கி விட்டான் ..

அதாங்க ..அண்ணி என்ற என் அம்மாவிடம்  வழங்கி விட்டான் ..

என் உடன் பிறப்பை எனக்காக !!
இன்னும் என்ன என்ன ??
செய்யப் போகிறாய் ..

நீ தந்தவற்றையெல்லாம் என்னால் ஒரு போதும் தர இயலாது ..

உன்னை வாழ்த்தி அன்பு செலுத்துவதே தவிர ..

Tuesday, 13 March 2018

பெண் தோழி !!

என் வாழ்வில் மீண்டும் ஒரு அவள் !!
இந்தமுறை கிட்டத்தட்ட என் வயதிற்கேற்ப..

யார் அவள் ?
கேட்டால் "பெண் தோழி" என்கிறாள் ..
ஆனால் ..
அந்த வரிக்குள் மட்டும் அவளை அடக்கி விட முடியாது ..

நல்ல வேளையாக அவள் என் வாழ்வில் வந்தால் ...
வராமல் போயிருந்தால் ??

பெண்களின் கண்ணைப் பார்த்து பேச முடியாமல் !!
தடுமாறிப் போயிருப்பேன் ..

மனதில் பட்டதை பெண்களிடம் சொல்ல முடியாமல் !!
திக்குவாயாக மாறியிருப்பேன் ...

அவளின் துப்பட்டா என்னருகே உரசும் போது எல்லாம் !!
என் அம்மாவின் சேலை வாசம் ...

அவள் வீட்டு டிபன் பாக்ஸ்களிலெல்லாம் !!
என் அம்மாவின் கை பக்குவம் ..

செல்லமாக தலை கோதி விடுகிறாள் ..

இறுக்கமாக கை பிடித்துக் கொள்கிறாள் ..

(அவளின் துணைக்கு நானா ? இல்லை ..என் துணைக்கு அவளா ? )

என் நிழலுக்கும் அவள் கொடை பிடிக்கிறாள் ...

நான் அழுகையில் கைக்குட்டையாக மாறிவிடுகிறாள் ...

என் மொட்டை மாடி தனிமையில் !!
நிலாவாக வந்து கதை சொல்கிறாள் ..

உரிமை கொண்டாடுகிறாள் ...
சண்டை போட்டுக் கொள்கிறாள் ..
பின்பு அவளே !!
என்ன பேசமாட்டியா ? என கேள்வியும் கேட்கிறாள் ..

நம் இருவருக்குமிடையே ..
காமம் இல்லை !!
ஆனால் , காதல் இருக்கிறது ..

அன்பு செய்கிறாள் ..
அரவணைத்து செல்கிறாள் ...
விட்டுக் கொடுத்து போகிறாள் ..
வீம்பாக வார்த்தை போர் செய்கிறாள் ..
எதாவது நமக்கென்றால் ??
துடிதுடித்தும் போகிறாள் ...
புரியாத புதிர் தான் இவள் ..

என்ன தவமோ ??
நான் பெற்ற வரமோ !!
இன்னொரு யுகம் கிடைக்குமோ  ??

மீண்டும் ..
என்னை செதுக்கும் உளியாய் ..
நீயே வேண்டும் பெண் தோழியாய் ..

Monday, 12 February 2018

அவளுக்கான வரிகள் ( soup boy - words )


             ** Soup boy - words **

அவள் ..
வருகைக்கு முன் !!
கனவு கண்டுக் கொண்டிருந்தேன் ...
.
.
அவள் ..
வருகைக்குப் பின் !!
கண்ட கனவுகளில் வாழ்ந்துக் கொண்டிருந்தேன் ..
.
.
அவள் ..
போன பிறகு தான் !!
என் வாழ்க்கையே வாழப்போகிறேன் ..

**

அவள் மீது ..
அன்பை செலுத்துங்கள் !!
கொட்டி விடாதீர்கள் ..

திரும்ப அள்ள எல்லாம் முடியாது ..
நீங்கள் கொட்டிய அன்பை
காற்றடிக்கும் திசையில் !
பறக்கச் செய்திருப்பாள் ..
அவள் !!

**

மை லார்ட் ..
சிற்றின்ப பட்டியலில் ..
அவள் காதலையும் சேர்த்து விடுங்கள் !!

**

நீங்கள் அப்ப அப்ப
தருவதை / தந்ததை எல்லாம் ..
அவளும் தர வேண்டும் ..என
எதிர்ப்பார்க்காதீர்கள் !!

கடைசியில் மொத்தமாக ஒன்று தருவாள் ..
வாங்கிக் கொள்ள .. Sorry ..
தாங்கிக் கொள்ள தயாராகுங்கள் ..

**

நான் எப்பவும் ராவா ... தான் ?
ஏனா ?
என் மனசு பூரா.... அவளே தான் !!

**

அவள் பிரிவினால் தான் ..
முதன் முறையாக
விரல்களுக்கு இடையே சிகரெட்டை பற்றவைத்தேன் !!
காரணமிருக்கிறது ...
நான் ஊதித் தள்ளும் புகை காற்றில் மறைவது போல ..
அவள் நினைவுகளும் மறையட்டும் என்றுதான் !!

**

அப்போது ...
எங்கே பார்த்தாலும் அவள் முகம் !!
இப்போது..
எங்கே தேடியும் அவளே காணும் !!

ஒளிந்திருந்து விளையாடுகிறாளோ ?

காதல் விளையாட்டாக இருந்தால் சரி..
என் வாழ்வில் விளையாடுவதாக இருந்தால் ??

**

கொள்ளையடிக்க வந்தவளே ..
கொள்ளை அடித்து விட்டு போயிருக்கலாமே ??
ஏனடி ?
கொன்று விட்டு போகிறாய் ..

**

அவள் ...
மாடு ! மாடு ! என்றழைக்கும் போது ..
செல்லமாக அழைக்கிறாள் என்றிருந்தேன் !
இப்போது தான் காரணம் தெரிகிறது ..
அவளின் நினைவுகளை
முழுங்கவும் முடியாமல் ..
துப்பவும் முடியாமல் ...
அசைப் போட்டுக் கொண்டிருக்கிறேன் ..
நல்ல எருமை மாடாக !!

**

தூங்கும் போது கூட
அலைபேசியை காதருகே தான் வைத்துள்ளேன் !!

அவளின் மறதினால் ..
தெரியாதனமாக கூட அவளிடமிருந்து ..
அழைப்பு வந்துவிடுமோ ? என

காத்திருக்கிறோம்... நானும் !
என் அலைபேசியும் ..

**

என் காதல் பொல்லாதது ...
எப்படியும் ஒருநாள் என்னை எண்ணுவாய் !!
உன் விழியோரம் நீர் ததும்பும் ..
சிந்தினாலும் பரவாயில்லை ..
கவலை கொள்ளாதே .. கண்மணியே !!

அப்போதும்
அதை துடைக்க ...
உன் கழுத்தை தவழும் துப்பட்டாவாகவோ !
உன் மேனி சூழ்ந்த புடவையாகவோ !
எப்போதும் போல் உன் கைக்குள் அகப்பட்ட ..
கைக்குட்டையாகவோ !!
நானே இருப்பேன் ..

**

மறவாதே கண்மணியே .. என்னை அல்ல ..என் காதலே !! என்னை விட எந்த கொம்பனும் உன்னை இவ்வளவு நேசித்திருக்க மாட்டான் என ..

        ** மங்களம் _உண்டாக்கடும் **

Sunday, 11 February 2018

சவரக்கத்தி - பிசாசு கையில் தங்கமீன்

                        **சவரக்கத்தி**

இந்த கத்தி பார்ப்பவர்களை குத்துமா என்று தெரியவில்லை .. ஆனா , கண்டிப்பா  ஏதோ ஒரு வகையில் உரசி பார்க்கும் ..

பிசாசு  (மிஷ்கின் ) (மங்கா)
தங்கமீன்கள் (ராம் ) (பிச்சை)
தூண்டில் (பூர்ணா) (சுபத்ரா)

இந்த பிசாசுக்கு தங்கமீன் வேணும் .. அதை எப்படியாவது அடையனும்னு போராடுது..  தங்கமீனை பிடிக்கிறதுக்கு ஒரே வழி.. தூண்டில் இந்த பிசாசு கையில் இருந்தால் மட்டுமே சாத்தியம் ..அதே தான் அதுவும் பண்ணுகிறது ..

தங்கமீன் ரொம்பவே சுவாரஸ்யமானது .. தன் குழந்தைகளுக்கு முன்னால் ஹீரோவாகவும் , பேரம் பேசும் மனிதனாகவும் , உண்மையிலேயே தூண்டிலில் அகப்பட்ட மீன் போலத் தான் ,அவன் காது கேளாத மனைவியிடம் சிக்கித் தவிக்கிறான் .. காட்சிக்கு காட்சி சிரிப்பு , கோபம் ,அழுகை ,தன் இருப்பை காட்டுதல் என பல்வேறு பரிமாணங்களில் தோன்றுகிறான் ..

பிசாசு .. ஒரு ஜிப்பா , மிலிட்டரி கட்டிங்  ,கழுத்துல ஜெயின் ,கூர்மையான பார்வை ... அந்த பிசாசின் குணம் எப்ப  பார்த்தாலும் கோப படும் .. கோபம் மட்டுமே படும் ...நல்லா தொண்டை தண்ணீர் வற்ற கத்த தெரியும் ...

தூண்டிலுக்கு இதை விட நல்ல கதாபாத்திரம் அமையுமா  ? என்பது கேள்விக்குறியே ..
புருஷனுக்கு ஏற்ற மனைவி போல் தான் அவளின் பகுமானமும் ,வாயும் ..

கவனிக்கத் தோன்றிய இடங்கள் ::

** குப்பைத் தொட்டியில் தங்கமீன் ஒளிந்திருக்கும் போது .. குப்பை அள்ளுபவனின் செயல் .. அவனுக்கு தேவை குப்பை மட்டும் தானே .. அவனது செயலை பார்த்தால் எவனுக்கோ அது தங்கும் வீடு போல

** நீங்க எங்க இருக்கீங்கனு சொல்லுங்க நானே வருகிறேன் என தங்கமீன் சொல்லும் போது ..
"இல்ல ..நீ ஓடு ..நான் உன்ன துரத்தி பிடிக்கிறேன் " என பிசாசு தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு ..சொல்லுவது எல்லாம் தன் இருப்பை நிலை நாட்டவும் !!
தோல்வியை ஒப்புக் கொள்ளமுடியாமல் தவிப்பதும் தான்

** என்னத்த ராக்கெட் செஞ்சு மேல பறக்க விட்டாலும் ... கையால தான் கழுவனும் .. என கவனிக்க வைக்கிறார் டீ கடையில் வேலை செய்பவர்

** இப்படியொரு காதலை காட்டியதற்கே ஆயிரம் முத்தங்கள் தரலாம் அந்த பிசாசுக்கு (கதை ,திரைக்கதை ) !! தனக்கான மாப்பிள்ளை ஒரு ஊனம் என்று தெரிய வரும்போது .. அவளிடம் நீடிக்கும் அந்த மவுனங்களே உடைத்தெறிந்தது ..அவள் சாதிகளின் ஆணவத் தன்மையே .. ஊனமற்றவனின் கால்களை தாங்குவது எல்லாம் ... அவளின் பாவங்களை கழுவும் செயல்

** எல்லாம் இழந்து போய் இருப்பவனுக்கு உத்வேகம் தரும் ஊனமுற்ற டீ கடைக்காரரின் சைகை மொழிகள்

** கரும்பு ஜூஸ் அக்கா , சைக்கிள் கடை ஓனர்

** பிசாசின் நிலை கண்டு துடிக்கும் அவனின் அப்பா

** தத்துவம் பேசும் பைத்தியம் .. ஆங்கிலத்தில் பேசினால் அவன் மகான் ..

இதை விட முக்கியமாய் கவனிக்க வைத்த இடங்கள் ..

** நிறைவு பகுதியில் ... நம்ம அப்பா / நமக்கு ஹீரோ தானா !!

தங்கமீன் அடி வாங்கும் காட்சி .. யப்பா .. சண்டை போடுப்பா !! என கண்ணீர் மல்க கெஞ்சும் பெண் பிள்ளையிடம் ..
"அப்பாக்கு ..சண்டை தெரியாதுமா " என கண்ணீர் சிந்தும் அதே தங்கமீன் தான் !!

ஆண் பிள்ளை ஓடி வந்து பார்க்கிறது .. தன் தந்தை அடி வாங்குவதை .. அவனிடம் வார்த்தைகள் கூட இல்லை ... ஒரு பார்வை தான் .. இதை கவனித்த தங்கமீன் வீரம் கொண்டு எழுவது எல்லாம் ?

பெண் பிள்ளை சொல்லும் போது .. எங்கே போனது அந்த வீரம் ..

** கட்டி உருளும் பிசாசும்  , தங்கமீனும் .. தண்ணீர் டப்பாவில் இவர்கள் மோதும் போது ..அங்கு அவளின் தண்ணீர் குடத்திலிருந்து வெளிவருகிறது சிசு .. கணத்த மெளணங்கள் ஆக்கிரமிக்கிறது சில நொடிகள்..

#கத்தி எதுக்கு தான் .. தொப்புள் கொடி வெட்டத்தான் ...

** அந்த கத்தியை கழுவ திறந்த தண்ணீர் குழாயை ஏன் அவள் அடைக்காமல் சென்றால் ?? அந்த பிசாசுக்கு தண்ணீர் தெளித்து உயிர் கொடுக்கவா ..

வந்து விட்டதே .. பிசாசுக்கும் உயிர் , மனிதாபிமானம் எல்லாம் ..

https://youtu.be/JVFm1gYgXkI