Monday, 11 March 2019

பொள்ளாட்சி கூட்டு பாலியல் தொல்லை

இப்பொழுதாவது #பேசுவோம் 

Speak about pollachi_rapist

*****************

அவளின் குரலாக ...

அன்பை கொட்டி
நம்ப வைக்கலாம் ..
அறிவை தீட்டி
அறைக்கும் அழைக்கலாம்
அடங்க மறுத்தா
அத்து மீறலாம் ..

கூட்டு பயலுக
கூட்டமாய் முன்  நிற்க ..
அந்த நொடியிலேயே
பாதி உயிரும் போக ..
அழுது அழுது
காலில் விழுந்து கரைந்து போனாலும் ..
அரக்க கண்களுக்கு
பெண் எல்லாம்
பொம்மை தான் ..

கத்தி கதற
தெம்பு இல்ல ..
இன்னும் கெஞ்ச
கண்ணுல தண்ணீர் இல்ல ..
கழட்டி எறிந்த ஆடையும்
கனத்து போச்சு ..
பிடியில் சிக்கிய உடம்பும்
மறத்து போச்சு ..
வெளியில் சொல்லவும்
திராணி இல்ல ..
மாண்டு போகவும்
உசிரு இல்ல ..

அதிகாரம் இருந்தால்
அடிவயித்துல எட்டி மிதிக்கலாம் ..

காமிரா இருந்தால்
கண்டபடியும் படம் பிடிக்கலாம் ..

கூட்டணி கட்சிகளெல்லாம்
முக்கியச் செய்தி ..
கூட்டுப் பலாத்காரமெல்லாம்
விரைவுச் செய்தி ..

இத்தனைக்கு பின்னும் ,
நீ ஏன் போனனு தான்
கேட்குற ..
அவனை கேள்வி கேட்க
ஏன் பயப்புடுற ?

சட்டத்தின் ஓட்டையெல்லாம்
பெண்ணின் யோனியா ..
ஆண்குறி உள்ளிருந்து
தப்பி பிழைத்தது போல்
மரண பிடியிலிருந்து
நீயும் தப்பிக்க ..



Saturday, 9 February 2019

கருப்பும் , காக்கியும் !!

சமீபத்தில் ஜிப்ஸி என்ற படத்தின் ஒரு ப்ரோமோ பாடல் ..
#very_very_bad !!  காக்கி சட்டைகளை சீண்டி பார்க்கும் கருப்பு கூட்டம் .. அதன் உந்துதலின் வெளிப்பாடு தான் இந்த பதிவு .. மொழி நடை ஒரு கானா மெட்டுக்கு ஏற்றாற் போல் 🙏


Very very bad .. Bad to the core ❤

*****

வருவ ..
மேல வருவ ..
இடம் தந்தா தான வருவ !

நிற்ப ..
எதிர்த்து நிற்ப ...
கற்றால் தான கேள்வி கேட்ப !

( பாவம் ! நெய் வாங்கவே சிரமப்படுகின்ற அந்த சமூகத்துக்கு 10% இட ஒதுக்கீடு அறிவிக்கப்படுகிறது .. இது பின்னாடி உள்ள சமூகத்தை எவ்வளவு பாதிக்கும்னு தெரிஞ்ச போராளிஸ் வழக்கம் போல , போராட வாறாங்க )

படிக்க வாறோம் நாங்க ..
கதவைத் திறங்க  நீங்க ..
எங்களைத் தடுத்தா ?
ஏறி மிதிச்சா ?
எட்டி உதைச்சா ?
**தா ..

வருவேன் வருவேன் முன்னால

கருப்பர் கூட்டம் பின்னால

வழிய விடுவ தன்னால ...


(இப்படி ரைமிங்கா சொல்லும் போதே போலீஸ் லத்தி சார்ஜ் பண்றாங்க .. அப்போது , அந்த கூட்டத்திலிருந்து )

பூட்ஸ் கால
பாலிஸ் பண்ணி
தொண்டையில மிதிக்கிற ..

லத்தியை தான் உருவிக்கிட்டு
மண்டையை பொளக்குற ..

குடிசையை பற்றவைத்து
ஜெகஜோதியாய் கொளுத்துற ..
என்னனு கேட்டாக்கா ?
தேனீக் கூட்டம்னு மழுப்புற ..

கால்கடுக்க நிற்கையில
பாவமாக தெரியிற ..
காக்கியை போட்டதும்
கல்லாக மாறிடுற ...

ஹெல்மேட்டு போடலனா
**த்தா ..**ம்மா ..னு
கேட்குற ..

கர்ப்பிணியா இருந்தாலும்
விரட்டி போய் மிதிக்கிற ...

அரஸ்ட் வாரண்ட்
இருந்தாக் கூட
கொடை பிடித்து காக்குற ..
அதிகாரியாக இருந்துவிட்டால்
சல்யூட் அடிக்கிற ..
சாமானியனாக தெரிந்தால் மட்டும்
வேட்டியைத் தான் உருவுற ..

ரோட்டோரம் கடையை மிரட்டி
உண்டியலை நிரப்புற ..
சிக்னல் சிக்னலா
கடையைப் போட்டு
யாசகம் கேட்கிற ..

வேலை செய்யும் நேரத்திலேயும்
மப்புள மிதக்கிற ..
கத்துகிட்ட மொத்த வித்தையும்
என் களத்துல காட்டுற ..
( 13 புல்லட்ஸ் 👼)

காவல் தெய்வம்னு கும்பிட்டாக்கா
காவு வாங்க துடிக்கிற ..
இத்தனையும் பண்ணிபுட்டு
உங்கள் ................

    ......... நண்பனு சொல்ற !!


Saturday, 2 February 2019

பேரன்பும் - பாப்பாவும்

பாப்பாவ பார்க்க போயிருந்தேன் .. பாப்பா , மற்ற குழந்தைகள் மாதிரி இல்லாததால் பாப்பா கடைசி வரைக்கும் பாப்பாவாகவே இருக்கணும்னு அமுதவன் அப்பாவுக்கு
ஆசை !

ஆனால் , இந்த இயற்கை கொடூரமானது , இரக்கமற்றது , வெறுக்கத்தக்கது ..

பாப்பாவின் வயதிற்கேற்ப உடலில் ஏற்படும் மாற்றம் , உணர்வு , அவள் கண் முன் தெரியும் இந்த சமூகம் என எதுவுமே பாப்பாவை கடைசி வரைக்கும் பாப்பாவாக வைத்திருக்க முடியவில்லை ..

பாப்பா பாப்பாவாக இருப்பது எல்லாம் இந்த இயற்கை பேரன்பாக திகழும் போது மட்டுமே ..

அன்பு நிலையானது இல்லை , அதிலும் பேரன்பு சொல்லவே வேண்டாம் ..அன்புக்கும் பேரன்புக்கும் வித்தியாசம் என்பது  வரிசையாய் செல்லும் எறும்புகளுள் ஒன்றுக்கும் மற்றொன்றுக்கும் இடைப்பட்ட இடைவெளி தான் ..

அன்பு - காட்டப்படும்
பேரன்பு - ஏற்றுகொள்ளப்படும்

பேரன்பு எதன் மீது வேண்டுமானாலும் இருக்கலாம் .. அது உயிருள்ள ஜீவனாகவும் இருக்கலாம் ,உயிரற்ற தன்னமையுடையதாகவும் இருக்கலாம் .. பாப்பாவை அப்படியே ஏற்றுக்கொள்ள கூடிய பேரன்பு இங்கு சொற்பமே .. அப்படி ஏற்றுக்கொண்ட உள்ளங்களுக்கு எற்படுகின்ற அவஸ்தைகளை சொல்கின்ற படமாக தான் பேரன்புவை நான் பார்க்கிறான் ..

ஒரு சில படங்களை பார்க்கும் போது நமக்கு தோன்றும் , நம்ம பேச தயங்குகிற விஷயங்களை வெளிப்படையாய் சொல்லிருக்காங்க யென: ஆனால், பேரன்பு இதற்கு ஒரு படி மேலேறி ..

நம்ம யோசிக்கவே மறந்த பல விஷயங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து காட்டிருக்காங்க .. படம் எடுத்த விதத்திற்காகவும் ,எண்ணத்திற்காகவும் இரண்டு மூன்று விருதுகளை கொடுத்துவிட்டு ஒரு சில தினங்களில்  பொட்டிக்குள் அடைத்து விடாமல் ..
அந்த குருவியை போல சுதந்திரமாக பறக்கட்டும் சில மாதங்கள் யென !

பாப்பாவை போலத் தான் இங்கு பலரும் காத்துக் கொண்டு இருக்கிறார்கள் , அந்த பேரன்பிற்காக ..

என்னை அப்படியே ஏற்றுக்கொள்ள கூடிய பேரன்பிற்காக நானும் காத்திருக்கிறேன் . அந்த ஆழ்கடலில் தான் பேரன்பு கிடைக்குமென்றால் அங்கு செல்லவும் தயாராக தான் இருக்கிறேன் .. ❤❤


Monday, 7 January 2019

கதையாடல் - சிகப்புரோஜாக்கள்

கதையாடல்
#சிகப்புரோஜாக்கள்

பூத்துக் குலுங்குவதெல்லாம்
ரோஜாக்கள் யல்ல ..
ரோஜாக்களாக இருப்பனயாவும்
சிகப்பு ரோஜாக்கள் யல்ல ..
இவன் விழிகளுக்கு
குண்டு மல்லியாகியினும்
செக்க சிவந்த சிகப்பு ரோஜாக்களே  !!

ரோஜாக்கூட்டங்களே
மன்றாடி நிற்கிறது
குத்துங்கள் எஜமான் குத்துங்களென !!

வண்டுகளின் விருப்பத்தேன்
நான் மட்டுமே !!
என்கிற கர்வ மிகுதி
அந்த ரோஜாக்களுக்கு...
கர்வத் தேனை
மட்டுமே ...
இதழோடு இதழ் பதித்து
உறிஞ்சுகிறான் !!
பஞ்சணையில்
வஞ்சனையுடன்
விளையாடுகிறான் !!

கண்ணொளியில் பட்ட
சிகப்பு ரோஜாக்களை
காணொலியாய்
படம் பிடித்து
மற்ற விழிகளுக்கு
விருந்து வைக்கிறான் !!

கொலைகளும்
ஆயக் கலைகளில் ஒன்றாகிவிட்டது
இவனுக்கு ..

ரோஜாக்களின் காம்பினை
அறுக்கின்ற வேளையில்
வழிந்தோடுகிற குருதியே
அந்த
மியாவ் மியாவ் பூனைக்கு
ஒரு வாரகால உணவாகிறது ...

தன்னைத் தானே
அடக்க நினைத்தும்
அத்துமீறி நிற்கிறான் ..
இவன் பாதையெங்கும்
காலி மதுக்குப்பிகளில்
வளர்க்கப்படுகிற சிகப்பு ரோஜாக்கள் ..
பாவம் ,
இவன் என்ன செய்வான் ?

தன் நாட்குறிப்பை
எழுதுகின்ற மதிற்சுவர் முழுவதும்
நிரம்பி வழியும்  சொற்களாய்

மீண்டும் .. மீண்டும் ...மீண்டும் ..
மீண்டும் .. மீண்டும் ... மீண்டும்..
மீ..ண்..டு..ம்..
............................... !!


Saturday, 24 November 2018

வகுத்தல் - ஒற்றுமை

(வகுத்தலின் உள்நோக்கமெல்லாம்
பகிர்தலே ...
மன்னிக்கவும் !
சமமாய் பகிர்தலே .. )

மானிடனாய் பிறந்துவிட்டேன்
நரக வாழ்வை தொடங்கிவிட்டேன்
இனி நான்
கண் மூடி
மண் மூடும் வரை ..
சரித்திரம் ஏதும் வேண்டாம்
சமத்துவம் கிடைத்தால் போதும்

எனக்கொரு பேராசை !

இந்த சமூகத்தை
வெண் தாடி கிழவனின் தடிகளால்
வகுக்க வேண்டும் ...
ஈவாக ஒற்றுமையானவர்களையும்
மீதியாக சில வெங்காயங்களையும்
பிரித்தெடுக்க வேண்டும் ..

அநீதிக்கெதிராக ,
...
அமைதியாக இருந்தால்
அடக்கம் செய்து விடுகிறான் !
ஆர்ப்பாட்டம் செய்தால்
ஆண்டி- இந்தியன் என்கிறான் !

என் மக்களே ::

தனியாக போராடினால்
தாளித்து விடுவான் ..
ஒற்றுமையாக போராடினால் தான்
பயந்து விடுவான் ..

(இப்போதும் கூவுகிறேன்
வகுத்தலின் உள்நோக்கமெல்லாம்
பகிர்தலே ...
மன்னிக்கவும் !
சமமாய் பகிர்தலே ... )

எனக்கு
அர்ச்சனை செய்ய ஒரு கூட்டம்
என்
மலத்தை அள்ள ஒரு கூட்டம்
என்
பிணத்தை எரிக்க ஒரு கூட்டம் ...
அத்தனை கூட்டத்தையும்
கல்விக் கொண்டு
வகுத்தெடுப்போம் !
இப்பொழுது
மலம் அள்ள நான் வருகிறேன் ..
மலையேற நீயும் வருகிறாயா ?

பூஜ்ஜியங்களெல்லாம்
ராஜ்ஜியங்கள் அமைக்க
உருவாக்கிற கூட்டணி
உப்பு கலந்த தேநீராக
சுவைக்கத் தான் செய்கிறது
அந்தந்த தேர்தல் சீஸனில் !

காதலை
சாதிக்கொண்டு வகுக்கிறாய்
ஈவாக ,
கயிற்றில் கட்டிய பிணங்களும்
மீதியாக ,
இன்னுமொரு காதலும்
துளிர்விடுகிறது ..

உங்களை
உங்களாலே வகுத்துக் கொள்ளுங்கள் ..
.
.
என் சுதந்திரத்தை
சகித்துக் கொள்ள முடியாத
உன் சுதந்திரம் தான்
இங்கு தீண்டாமை
என்பதே உணரும் வரை !
.
.
என் தேவையெல்லாம் ,
சரிசமமாய்
உட்கார நாற்காலி
கண்ணாடி குவளையில் தேநீர்
காதல் சுதந்திரம்
பயில கல்வி
இன்னும் இன்னும் பல ...

(நிறைவாக சொல்கிறேன்
வகுத்தலின் உள்நோக்கமெல்லாம்
பகிர்தலே ..
மன்னிக்கவும் !
சமமாய் பகிர்தலே )

மறந்து விடாதே தோழா
நாளையொரு போராட்டமெனில்
வீதிக்கு வா
ஒற்றுமையாக !

Sunday, 16 September 2018

தற்கொலை செய்யணும் !!

தற்கொலை செய்ய வேண்டும்
இப்போது ஏன் ?
எதற்கு ?
என்றெல்லாம் தெரியாது
ஆனால், செய்ய வேண்டும் ..
அப்படிதான் இருந்தது
அன்றும்
அதற்கு முன்பும் !
தோராயமாக
தற்கொலை எண்ணம்
1,234 ஆக வைத்துக் கொள்ளலாம் ..
அதிகமாகவும் இருக்கலாம்
குறைவாகவும் இருக்கலாம்
என்ன செய்ய ?
எண்ணம் தற்கொலை நோக்கி இருந்ததால்
எண்ண மறந்துவிட்டேன்

யார் அனுமதியும் வேண்டாம்
என்னை நானே
கொலை செய்யப் போகிறேன்
சென்ற முறைப் போல் இல்லாமல்
இந்த முறை புதியதாக யோசிக்கிறேன்
கத்தியின்றி
இரத்தமின்றி
வலியெதுமின்றி
ஒரு தற்கொலை ..
இது சாத்தியமா ?
அதெல்லாம் தெரியாது எனக்கு
ஆனால்,
தற்கொலை செய்ய வேண்டும்

வழக்கம் போல்
நம்முன்னோரின் முயற்சியில்
தற்கொலை செய்யலாமா ?
பூச்சி மருந்து குடித்து ..
நேரமாகி விட்டது
கடையை அடைத்திருப்பான் ..

தூக்கு கயிறு ,
வேண்டவே வேண்டாம் ::
போன முயற்சிலேயே
நான்
உடைந்த நாற்காலி
தொங்கும் காத்தாடி
அறுந்த கயிறென
வெவ்வேறு திசையில்...
அசிங்கமாய் போகும்
ஒரு தூக்கு கூட ??
த்தூ ...

ஓடும் ரயில் முன்
தலை , தசையென
தனிதனியாய்
தண்டாவளத்தில்
தகர்த்தெறியப்படும் !
இறந்த அடுத்தநாள்
முகம் தெரியமால் செய்தி தாளில் வரும்

மலை உச்சியிலிருந்து ,
.
முதலில் ஏற முடியுமா ?
இந்த உடலை வைத்து ..
அப்படியே ஏறி குதித்தாலும்
பாதி உயரத்திலேயே உயிர் போய்விட்டால்
என் உயிர் போவது
எனக்கே தெரியாவிட்டால்
அது தற்கொலையாகதே ..

உடல் முழுக்க பெட்ரோல் ஊத்தி
லிட்டர் 84.50 பைசா ?
ஆறு ரூபாய் குறைவாக உள்ளது பர்சில்
தீப்பெட்டி வேறு ,
பட்ஜெட் பற்றாக்குறை !

பழைய சங்கதி எதற்கு
இப்படி செய்யலாம்
நூறு குண்டூசிகளை விழுங்கிடலாம் ,
எழுதிக் கொண்டிருக்கின்ற
பேனாவின் முனையால்
தொண்டையில் கோடு போடலாம் ,
வீட்டின் மலத்தொட்டியில்
மண்டைய விடலாம் ..
மலத்தை அள்ளுபவன் ,
என்னையும் அள்ள வேண்டும்
பாவம் !

ஆஆஆஆஆஆஆஆ !!

வேறு என்ன செய்ய ?
தற்கொலை செய்யணுமே ...
இந்த நொடி கணமே ..

மின் கம்பியை கடித்து விடவா ?
விஷநாகத்துடன் மல்யுத்தம் செய்யவா ?
கைப்பேசியே ஒளித்து வைத்திடவா ?
நகத்தைப் போல்
என்னை நானே கடித்து துப்பவா ?
யோசிக்க யோசிக்க
தலை வலிக்கிறது ..
பேசாமல்
மனுஷ்யபுத்திரன் கவிதைகளை படித்து
அவரைப் போல் 
கவிதையென  எழுதவா ?
படிப்பவன் தான் இறப்பான்
பின்பு அவரே என்னை கொல்வார்
அது கொலையாகிவிடும் ..

என்னை நானே
கொலை செய்ய வேண்டும்
வேற வழியேயில்லை
சுலப வழி
தாமரை கட்சியில்
இணைந்திடலாம் ..
ஆசை இருப்பின் வருவீர்
தாமரையில் அமருவீர்
தற்கொலையே பருகுவீர் !!







Wednesday, 12 September 2018

நாற்காலியும்_இவர்களும்



கண்மூடிக் கொள்ளாதே
களவாணிப் பயலுக
களப்பணி செய்ய
காத்திருக்காக !!

நாலு காலு
மெத்தை நாற்காலியில
ஒருமுறை
குத்த வைக்க ..
பலாயிரம் முறை
கால்ல விழணும் !
கோஷம் போடணும் !
கொடி பிடிக்கணும் !
சாஷ்டாங்கம கும்பிடவும் செய்யணும் !!

சூரிய குடும்பத்து நாற்காலி ...
முதல்வனாய் இருந்தாலும்
முதியவனாய் இருந்தாலும்
இறுதி வரை நாற்காலி தான்
கட்டுமரத்திற்கு !!
கட்டுமரம் கவிழ்ந்தாச்சு
இடத்தை நிரப்ப சூரியனும் வந்தாச்சு ..
உதிக்கிற திசை தெரியாமலே
நாற்காலி நமக்கு நாமேனு நினைச்சிடுச்சு .


அடிமை சாசன நாற்காலி ..


நம்புங்க !!
என் தேசம் சுதந்திர தேசமே ..
அடிமைகளும் ஆளும் தேசமே !!
ஒற்றை நாற்காலி தான் ..
அதுவும்
உடைந்த நாற்காலி தான் ..
ரெண்டு கயிறால் இறுக கட்டி
காலத்தை கடத்துற நாற்காலி தான் .

உதிரி நாற்காலி ...

*
கொட்டும் முரசொன்று
கொட்டு கொட்டென கொட்டியது
பக்கத்தில் நின்றவனையும்
அதிகாரத்தில் இருந்தவனையும்
அதிரடி நாயகனை
நகைச்சுவை நாயகனாய்
சித்தரித்து விட்டோம் !!
ஒர் அறைக்குள்
சிறைப்படுத்தி விட்டோம் !!
**
சாதிக்காயொன்று
நாற்காலிக்கான மாறுவேடப் போட்டியில்
மாம்_பழம் ஆயிற்று ..
இது என்ன மாயம் ,
பழமும் கசக்குதே !!
***
பாசக்கயிறு ஒன்றினால்
பம்பரம் சுழலுகிறது
ஐந்தாண்டுக்கு ஒருமுறை
இங்கும் அங்குமாய் ..
****
காவியம் படித்த அண்ணன்
சட்டை பாக்கெட்டிலிருந்து
ஆயிரம் மதயானைகளை
கிழக்கே , மேற்கேயென
வீசியெறிய குதுக்குலமாய்
தம்பிகளும் ... தங்கச்சிகளும் !!
*****
மய்யம் கொண்ட புயல்
நாற்காலியை வந்தடைவதற்குள்
அகம் டிவியில்
வலுவிழுந்து போகிறது ..

எந்திரன் ஒருவன்
உணர்ச்சியற்ற எந்திரனாகிறான்
மக்கள் போராட்டத்தில் ,

இடதுசாரிகள் எல்லாம்
ஒரு ஒரமாய்
வேடிக்கை பார்க்குது ..

நோட்டா கூட
தனி நாற்காலி கேட்குது !!

இனத்திற்கொரு கட்சி
மதத்திற்கொரு கட்சி
சாதிக்கொரு கட்சி
மனைவிக்கு ஒரு கட்சி
கணவனுக்கொரு கட்சி
இனியொரு
கட்சியும் வேண்டாம் ..
கலர் கலராய் கொடியும்
பறந்திட வேண்டாம் ..

கண் திறக்க
காமராசும் வரப்போவதில்லை ..
வெங்காயங்களை தோலுரிக்க
வெண்தாடி கிழவனும் வரப்போவதில்லை ..
கோபம் கொண்ட
நீயும் , நானும் தான் வரணும்
களம் வந்து சேரு  ..
   - ஜோசப்_யுவன்_முத்து
(ஆதார் அட்டையை தேட முயற்ச்சிக்க வேண்டாம் )

Monday, 10 September 2018

ஒருத்தரும் வரல ....

***** ஒருத்தரும் வரல ****

( அந்த ஆவணப்படத்தை பார்க்காதவர்கள் தயவு செய்து பார்க்கவும் ..அந்த கடலில் , புயலில் சிக்கி , உயிர் நீத்த ஒரு மீனவனின் குரலாய் .. என் அழுகுரலின் கூப்பாடு )

நீங்கள் உணரும் நாற்றத்தில்
வாழும் வாசனைத் திரவியங்கள்
நாங்கள் ..

குரங்கிலிருந்து வந்தவன் தான் நானும்
ஆனால் ,
தவளையாய் வாழ்கிறேன்
நீரிலும் , நிலத்திலுமாய் ..

செங்கலையும் , மரத்தையும்
தெய்வமாக்கியவன் நானல்ல !!
அந்த இயற்கையே
குலதெய்வமாக்கியவன் நான் ...
எங்கள் கடலம்ம ❤




ஆசை தீர தீர
அள்ளிக் கொடுப்பாள் ..
அது இன்பமாயினும் ,துன்பமாயினும் !!

கச்சத் தீவை கச்சிதமாய்
பங்காளிக்கு தந்துவிட்டாய் ..
எனக்கும் வாழ்வுண்டு
என்பதை ஏன் மறந்துவிட்டாய் ??

நாலு காசு
பார்க்கணும்னா ..
ஆழ்கடல் போய் தான் ஆகணும் ..

திசை மாறாமல் போக
ஆழ்கடலில்
எட்டுவழிச் சாலையும் அல்ல !!
என் எல்லை இதுவென காட்ட
ஹிந்தியில் பெயர் பலகையும் இல்லை !!

சுட்டு பிடிக்கிறான்யா ..
நாங்க பிடிச்சதையும் சுட்டுகிறான்யா ..

சரி .. நான் .. விஷயத்திற்கு வாறேன்

ஏன் வரல ?
எதுக்கு வரல ?
ஒருத்தரும் வரலயே ??

ஆழ்கடலில் புயல் வருமென
முன் செய்தி சொல்ல
முன்னே அனுப்பிய
ராக்கெட்டெல்லாம்
ஆகாய கடலில் மூழ்கிப் போச்சா ?

அதிகார மெதப்பில் உள்ளவனுக்கு
தண்ணீரில் மிதப்பவன் ஏளனம் தான் ..

மூச்சை
இழுத்து இழுத்து
விட்டு விட்டு
பயிற்சி செய்ய
இது உங்களின் யோகா கூடம் அல்ல
என் உயிருக்கான போராட்ட களமிது ..

புயல் வந்தது என்னமோ ஒரிரவு தான்
ஒரு நாளாச்சு
வரல ...
இரண்டு நாளாச்சு
அப்பவும் வரல ..
ஒரு வாரமாக போகுதய்யா
இன்னும் வரல ..



கிழக்கே
சூரியன் உதிக்க தொடங்கியாச்சு  ..
தொலைவில் வள்ளுவனும்
புது குறள் எழுத ஆரம்பிச்சாச்சு ..
கலங்கரை ஒளியும்
கொஞ்சம் கொஞ்சம்
நம்பிக்கை தந்தாச்சு ...
இறகை விரித்து
வட்டமிட கழுகும் வந்தாச்சு ...
இறக்கை சுத்துற
வான்பறவை மட்டும் வந்தபாடில்லை !!

வந்திருக்க வேண்டாமா ?
தேடியிருக்க வேண்டாமா ?
என்னை காப்பாற்றாமல் போயிருந்தாலும்,
என் நம்பிக்கையை காப்பாற்றிருக்க
வேண்டாமா நீ ?

ஏன்யா வரல ??
ஒருத்தரும் வரலயே ...

அன்னாந்து
பார்த்து பார்த்து
கழுத்து சுளுக்கிடுச்சு ...
காப்பாற்றென
கத்தி கத்தி
தொண்டை தண்ணீர் வற்றிப் போச்சு ..
பாதி உயிரும்
இதிலேயே போயிடுச்சு ..




இறப்பை பற்றி ஐயமுமில்லை ..
கவலையுமில்லை !!
என் ஆதங்கம் எல்லாம் ,

என்னை பெற்றவளும் ,
நான் கட்டியவளும் ,
நான் ஈன்றவனும் ,
என்னை ...
தொட்டு
கட்டியணைத்து
முத்தமிட்டு
அழுதும் புரளும் நிலையில்
என் உடலில்லையே ..!!

நான் பிடித்த
மீன்களின் சாபமோ ? என்னமோ ??
நானும்
துண்டு துண்டாக தான்
கிடைக்கிறேன் ..
விரல் , கை , கால் , சதையென !!

என்னை
அழுத்த அழுத்த தான்
நானும் , என் இனமும்
மேலேறி வருவோம் ...
தகர்த்தெறிவோம் ...
காத்திரு !!

Friday, 31 August 2018

யுவன் பிறந்தநாள் ..

யுவன் !!

யுவனுக்கு பிறந்தநாள் ...
என் காதல் சொல்ல நேரமிது ..

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போனது
என் வலியை உடைத்தெறிய
என்னை கொண்டாட வைக்க
என் இரவை நீட்டிக்க
அதையெல்லாம் நீ செய்தாய் !!

அகவை 39 !! ❤

ஆக , தோராயமாக யுவன் இசையமைத்த 39 படங்களில் ஒரு பதிவு .. முடிந்தால் கண்டுபிடித்து எண்ணிக் கொள்ளுங்கள் ..😝

இந்த பதிவு
உனக்காக எல்லாம் உனக்காக ..
என்
இளமையை துள்ளவைத்து
மனதை திருடி விட்டாய் !!
உன் மெளனமும் பேசுகிறது
இசையின் வாயிலாய் ..

புன்னகைப் பூவே
என் உணர்வுகளுக்கும் ,
உந்தன் இசைக்கும் ,
இடையேயான போராட்டத்தில்
நீ தான் எப்போதும் வின்னர்

உனது குறும்பில்
உள்ளம் கரைகிறான்
எதிரியும் ..
எந்தன் பேரழகனே !
ஆண்களையும்
இசை வலையில் சிக்கவைக்கிற
மன்மதனே !!

எவன் இசை சாயத்தையும் தீண்டாத
சண்டக்கோழி நீ ...
இசை பயிலாமலேயே
இத்தனை வருடம் ??
பெரிய கேடி தான் நீ ...
ஒற்றை வேல் ஏந்திய
பருத்தி வீரன் நீ ...

உன் ரசிகன் என்பதில்
அளவுகடந்த திமிரு எனக்கு !
என் அன்பிற்குறிய பையாவே ..
உன் இசை வற்றாத
தாமிரபரணியில் ..
அறிந்தும் அறியாமலும்
தீரா காதல் கொண்டேன் உன்னிடத்தில் ..
உமது பாடல் வெளியீட்டின்போது
எல்லாம் எமக்கு தீபாவளியே !!

சர்வமும் நீயாகி போனதால்
யோகியாகிய உமக்கு சீடனாகினேன் ..
இசை வானத்தில்
கழுகாய் பறக்கிறாய் நீ ..
உன் முத்திரை பதியாத
இடமொன்று இருந்தால் சொல் ?
அவன் இவன்
என்றெல்லாம் பாராது
இசையமைக்கிறாய் ..❤

உன் மங்காத்தா ஆட்டத்தில்
எத்தனை பேரை
வேட்டையாடினாய் தெரியுமா ??
நடுவில் சில வருடம்
கண்ணாமூச்சி ஏனடா ??
கதற வைத்து விட்டாய் ..
இவன்
புதிய முறையை கையாள
எப்போதும் அஞ்சான் ..

வாழ்த்துகள் சொல்ல வேண்டுமெனில்
பட்டியல் இன்னும் நீளும் ..
எங்களின் தர்மத்துரையை
உன்னை ஒருபோதும்
நெஞ்சம் மறப்பதில்லை ..
நீ தருகின்ற பேரன்பிற்கு நன்றி ❤

ஒரே வேண்டுக்கோள்
பிரார்த்தனை தான் ...
நான் யாக்கை எய்தும் வரை ..
கீப்போர்ட்டில் கை
வை ராஜா வை ...!!

மாஸ் பிறந்தநாள் தலைவா ..

டேய் , நானும் யுவன் பாட்டு கேட்கிறேன் .. எனக்கு அப்படி ஒன்றும் தோணவில்லை என்றால் ..மன்னிக்கவும் .. இது உங்களுக்கான பதிவு இல்ல ..

நீங்க கேட்கிறீங்க ..
நாங்க பீல் பண்றோம் ...
ஆக !! #HBD_YUVAN

Saturday, 21 July 2018

குடிசையின் இன்பத்துப்பால் ...

தென்னை மரம்
அதை ஒட்டி குடிசை ..
மஞ்சள் நிற ஒளியில் குண்டு பல்பு
நார் கட்டிலில் தலைவன்
சாணி மொழுகிய தரையில்
முந்தானையை விரித்து தலைவி ..

தலைவன்
குப்புறப்படுத்தும்
குளிர்காய்ந்தப் பாடில்லை ..
இருக்கவே இருக்கிறாள் !!
இதில் எதுவும் தப்பில்லை ...

கட்டியிருந்த வேட்டியை
கழட்டி வச்சிட்டு ,
தவளை சைகையில் அழைப்பு ..
அசைந்தபாடில்லை !!
ஏதேதோ சத்தமிட்டும்
மசிந்தபாடில்லை !!

மேனி தொட்டு அழைக்கிறான் ..
விழியிலேயே விண்ணப்பம் வைக்கிறான் ..
அவன் அழைப்பதும் ,
அவள் ஆசைக்கு இணங்குவதும் ,
சில நேரம் அன்பினால்
பல நேரம் ஆணையினால் ...

யாருமில்லாத போதும்
குண்டு பல்பு அணைக்கப்படுகிறது ..
ஐன்னலும் அடைக்கப்படுகிறது ..
.
.
உச்சிந்தனை முகர்ந்து
தலைமுடியை விரல் கோதி
முகம் புதைத்து
தேன் உறிஞ்சி
சின்னஞ்சிறு கதைபேசி
ஆட்டம் தொடங்குவது எல்லாம்
இந்த குடிசையில் கிடையாது !!
.
.
எப்போதுமே ,
வெட்டு ஒன்னு ..
துண்டு ரெண்டு தான் ...
.
ஆமாம் !! ஆமாம் !!
வெட்டு ஒன்னு ,
துண்டு ரெண்டு தான் ..
கணக்கும் சரிதான்

களை எடுப்பது போல்
முடிச்சு அவிழ்த்து
ஏர் தழுவுகிறான் ..
முனகல் சத்ததினால்
கடிகார நொடி முள் ,
ஒய்வுபெறுகிறது !!
கட்டிலின் நார்
மெல்ல மெல்ல வலிதாங்காது
அறுபடுகிறது !!

இயற்கையின் நியதி
களைப்பு நீங்கி
உடல் தெம்பு பெற ..
இந்த கட்டிலில்
தெம்பு இழந்து
களைப்படைய வேண்டும் ,
என்பதே ..

ஆட்டம் தொடங்கிய இடத்திலேயே
முடிவடைவது ஊடலின் சிறப்பு ..
குண்டுபல்பை எறியவிட்டு
கழட்டிய வேட்டியை தலைவன் தேட ..
தலவிரிக்கோலத்தை
கொண்டையிட்டு தரைக்கு போய்ட்டா
தலைவி !!

Thursday, 12 July 2018

நா. முத்துகுமார் !! - பேரன்பு

என் வாழ்வியலில் நா.முத்துகுமார் ..❤

தமிழுக்கும் , தமிழ் சினிமாவுக்கும் இவன்
ஒரு " அழகு குட்டிச் செல்லம் " 

"உன் பெயரை சொல்லும் போதே "  மனதிற்குள் ஏதோ ஒரு அன்பின் ஊற்று
வெளிப்படுகிறது ..

"கண் பேசும் வார்த்தைகளை"
உன் விரல்கள் பேசிய போது .. உனது ரசிகன் ஆனேன் ..

" தூர் " கவிதையினால் எத்தனை பேர் மனதை தூர் வாரி அவன் ஆணவத்தை அழித்துள்ளாய் ..

"பூக்கள் பூக்கும் தருணமும் "
உன் பேனா சிந்தும் தேன் துளிக்காக தான் காத்துக் கொண்டிருக்கிறது ..

" வெயிலோடு விளையாடி "
உந்தன் கைவிரல் கவியோடு உறவாடி
எந்தன் நிகழ் காலம் , எதிர் காலங்களை நோக்கி செல்கிறது ..

" ஆரிரோ ஆராரிரோ " இது எனக்கான
உந்தன் தாலாட்டு ..

உன் பேனா உடைப்பட்டு ..
"ஒரு கல்லும் .. ஒரு கண்ணாடியுமே" உடையாமல் மோதிக் கொண்டு காதல் செய்கிறது என்றால் ??

"நெருப்பு வாயினில் "
நீ சிக்குண்டாய் என்ற செய்தி காதில் வந்து விழுகிறது ..

அந்த தொலைக்காட்சி நேரலையில் காண்கிறேன் .. உனது இறுதி ஊர்வலத்தை .. 
" வேடிக்கை பார்ப்பவனாகிய " உன்னை இந்த உலகமே செய்வதறியாது வேடிக்கை பார்க்கிறது ..

" போகாதே " " போ...கா....தே " ..
நீ இருந்தால் நான் இருப்பேன் .. கத்தி சொல்ல முயல்கிறேன் .. உனக்கு கேட்குமா என்பதறியாது .. ?

நீ சொன்னது போல் ... " தெய்வங்கள் எல்லாம் தோற்றே போனது "
உன் பேரன்புக்கு முன்னால் ...

ஏய் ... " பறவையே எங்கு இருக்கிறாய் " என தேடப் போவதில்லை  நான் ..
நீ என்னோடு தான் இருக்கிறாய் ..என் வலியோடு , உணர்வோடு இன்னும் !!

" ஒரு நாளில் " முடிந்துவிடுமா ?? உன் வாழ்வும் , உந்தன் கவியும் ..

"இன்னும் ஒரு இரவு ... இதோ ... இதோ "
என உன் நினைவோடு கடந்து சென்று கொண்டிருக்கிறேன் ..

நீ மீட்டிய "ஆனந்த யாழை " இன்னும் ரீங்காரித்துக் கொண்டு தான் உள்ளது ...

@யுவன்_முத்து





Sunday, 17 June 2018

அ....ப்...பா...

மூத்தப் பிள்ளையா ..
முத்து பிறப்பானு ...
முன்கூட்டியே
தெரிஞ்சிருந்தாயா !! 😝

என் கால்மிதி
சைக்கிள் நகர்வில்
மூச்சிறைக்க
பின்னால் ஓடி வர ...

உன் மூச்சுக் காற்று
சத்ததைக் கேட்டு ...
டயரில் காற்று போச்சான்னு !
சிரிப்பை சிதறிய தருணம்
மூளையின் ஒரு மூலையில்
இன்னும் இருக்கு ...❤

சிறு வயதில் ..
குரல் உயர்த்தி ..
ஓங்கி அறைந்த
உன் கைகள் எல்லாம் ..

வயது ஏற ஏற ..
உயர்த்திய குரல் ஊமையாகவும் ..
அறைந்த கைகள் அணைத்துக் கொண்டதும் ..
இன்றுவரை புரியாத புதிர் தான் ..😵

நான் !!
பசின்னு நின்னது இல்ல ...
உன் !!
பசியை வெளியே சொன்னதில்லை ..🙇

பெயர் சொல்லும் பிள்ளையாவும் இல்ல
பெயரைக் கெடுத்த பிள்ளையாவும் இல்ல
பெயரளவிலே உன் பிள்ளையா இருக்கேன் ..😥

அந்த சனிக்கிழமை இராத்திரி
தார்ச்சாலையில
தள்ளுவண்டியில
நூறு வாழத்தாரை
ஒத்தையில
மூச்சு வாங்க தள்ளி
நிற்கையில !!
என் நினைப்பு வந்து
துணைக்கு கூப்பிடுக்கையில
தான் எல்லாமே தெரிஞ்சது !!

என் காலின் ரப்பர் செருப்புக்கும்..
உன் பாதத்தின் பித்த வெடிப்புக்கும் ..
உள்ள காதல் !!❤

என் கலர் சட்டைக்கும் ..
கறை படிந்து ..
ஓராயிரம் ஓட்டையில்
தெரியும் உன் மேனிக்கும்
உண்டான காதல் ..❤

நான்
முகம் பூசிய பவுடர் நாற்றத்துக்கும் ..
உன்
முகத்தில் வடிந்தோடிய வேர்வை வாசனைக்கும் ..
இடைப்பட்ட காதல் ...❤

முதலில்
தோளில் சுமந்தாய் ...
இன்றும்
தோழனாய் சுமந்துக் கொண்டிருக்கிறாய் ..❤

அக்கம் பக்கத்து
உற்றார் உறவினரெல்லாம் ..
ஒருசேர சொல்றான் ..

உன் அப்பன்
ரொம்ப உழைச்சிட்டான்
ஓய்வு கொடு என ..

நான் ஓய்வெல்லாம் தர போவதில்லை
வரம் தர நினைத்திருக்கேன் ..
என்னை பிள்ளையாய்
பெற்றமைக்கு அல்ல
எதிர்ப்பார்ப்பில்லா உழைப்பிற்காக

இவ்வளவு நாள் காத்திருந்தாய் ..
இன்னும் கொஞ்ச காலம் பொறுத்திரு ..
முருகன் மகன் முன்னுக்கு வருவான் !!❤❤

Tuesday, 12 June 2018

தீராத காதல் - 1 ..

அந்த மழலையின்
பொக்கை வாய் சிரிப்பினில் ..
தொலைத்த
பொக்கிஷத்தை தேடுவது
என்றுமே தீராத காதல் தான் ...

அடைமழைக்கான
அறிகுறியாய்
முதல் துளி மேனியில் விழ ..
அன்னாந்து
இமைமூடி இரண்டாம் துளிக்காக
காத்திருப்பது
என்றுமே தீராத காதல் தான் ..

பக்கத்திலேயே சுற்றித் திரியும்
பட்டாம்பூச்சியை
கையில் பிடிக்க
முயற்சித்து முயற்சித்து
தோற்றுப் போகையில்
எட்டிப் பார்க்கும்
தோல்வி புன்னகை
என்றுமே தீராத காதல் தான் ..

அப்பனாவதற்கு
சில காலமே இருக்கையில்
இன்றும்
அன்னையின் மடிக்கு
தவமிருப்பது
என்றுமே தீராத காதல் தான் ..

பிரிந்தவளோ ...
மறந்து போனவளோ ..
என்றாவது
அன்பின் கதவை தட்டுவாள்
என காத்திருப்பதும்
தீராத காதல் தான் ..

இலை உதிர்ந்த கிளையோ ..
கிளை உடைந்த மரமோ ..
எதுவாகிப் போயினும்
தளராது தாங்கும்
வேரின் அன்பு
என்றுமே தீராத காதல் தான் ..

பூக்காரி தான்
பறித்த பூக்களை
நூலில் ஒவ்வொன்றாக
இறுக்கி கொல்கையில்
அவை ..
தேன் சிந்தி
மலர்ந்த கதை
வாழ்ந்த கதையை சொல்வது
என்றுமே தீராத காதல் தான் ..

இருண்டுப் போயிருக்கும்
அம்மாவாசை இரவிலும் ...
தன் எழுத்தால்
நிலவை வரவழைக்க
முயலுபவனுக்கு
நிலவின் மேல்..
என்றுமே தீராத காதல் தான் ...

தன்னுடைய
இன்றைய முகம் காண
கடலிருந்தும்
குளமிருந்தும் ..
சாலையின் குழியில்
தேங்கிய மழைநீரில்
முகம் காணும்
நிலவின் குணம்
என்றுமே தீராத காதல் தான் !!