Wednesday, 19 February 2020

சுவாரஸ்யமான மனிதர்கள் !

சுவாரஸ்யமான மனிதர்கள் : 



பஸ் காக ரொம்ப நேரம் காத்திருந்தேன் ..அந்த பஸ் ஸ்டாப்ல நான் மட்டும் தான் இருந்தேன் .. பொழுது போகாம எந்த பக்கம் இருந்து அதிக கார் வருதுனு எண்ண ஆரம்பிச்சேன் .. நான் உட்கார்ந்து இருக்கிற இடத்துல இருந்து கற்பனையாக ஒரு எல்லைக் கோடு வரைஞ்சுகிட்டு ! என்னுடைய வலது பக்கத்துல இருந்தும் , இடது பக்கத்துல இருந்தும் வரக்கூடிய கார் , இந்த எல்லைக் கோட்டினை கடந்தால் மட்டும் தான் count .. இங்குட்டும் அங்குட்டுமா  35 கார் count பண்ணேன் .. அதுக்கு மேல interest இல்ல ! 

கார்களை தவிர இன்னும் நிறைய மனிதர்கள் , நாய் , மாடுனு கடந்து போய்க் கொண்டே இருக்காங்க ..

யார் முகமும் மனசுல பதிய மாட்டிங்குது ..பார்க்கிற அந்த நொடி மட்டும் தான் அவர்களுடைய முகம் இந்த கண்ணுக்குள்ள நிற்குது ! 

என்னை கடந்து போக கூடிய உயிர்கள் இவ்வளவு இருக்கிற மாதிரி , நானும் யாரோ ஒருவருக்கு கடந்து போக கூடிய நபர்களில் ஒருத்தனாக இருப்பேன்ல ..

இப்ப இது பிரச்சினையில்ல.. 

நொடிப் பொழுதில் , நம் வாழ்வில் கடந்து போக கூடிய ஒரு சிலரின் முகம் மட்டும் ரொம்ப ஆழமாக பதிந்திருக்கும் .. அவர்களை திரும்பி இந்த வாழ்க்கையில் சந்திப்போமோ என்றால் ,  வாய்ப்பே இல்லனு தான் தோணுது .. 

அப்படி இந்த வருட தொடக்கத்தில் இருந்து , யாராவது முகம் ரொம்ப ஆழமாக பதிந்திருக்கானு யோசித்து பார்த்தால் ரெண்டு பெண்களின் முகம் வந்து நிற்குது ! 

முதல் பெண் : 

நொடிப் பொழுதில் கடந்து போயிருக்கேன் ..ஒரே ஒரு வார்த்தை மட்டும் பேசியிருக்கேன் ! ஆனால் , அவர்கள் முகம் அவ்வளவு ஆழமாக பதிந்து இருக்கு ..

சம்பவம் தொடக்கம் ....

இரவு 9:50 இருக்கும் ..போரூர் toll gate தாண்டி அண்ணா ஒருத்தர் வீட்டுக்கு போகனும் .. Toll gate தாண்டி , முதல் வளைவில் வளைந்து ரொம்ப தூரம் நடக்கணும் ..

Google map ல , அவர் வீட்டுக்கு முதல் வளைவுல செல்லாம ..இரண்டாவது வளைவில் சென்றால் சீக்கிரம் போய்டலாம்னு காட்டுச்சு ..சரினு நடந்தேன் ! 

சாலையின் ஓரத்தில் வரிசையாக கண்டெய்னர் லாரி ...( toll gate ல இருந்து கொஞ்ச தூரம் தான் )  லாரி பக்கத்துல 3 பொண்ணுங்க ..ஒருத்தங்க மட்டும் ரோஸ் கலர் சேலை , அதுக்கு மேட்ச்சா லிப்ஸ்டிக் ! இன்னும் ரெண்டு பேர் சுடிதார் ... 

அவர்களை தாண்டி தான் அந்த ரெண்டாவது வளைவு இருந்துச்சு .. தூரத்தில் இருந்தே தெரிஞ்சுடுச்சு , அவர்கள் prostitute என , 

சேலை கட்டிய அந்த பெண் , 

" டேய் , மொட்ட .. எங்கடா போற , 

இங்க வாடா .. லாரி பின்னாடி வா ...

உன்ன தான்டா ! " 

நான் எதுவும் பேசல , react பண்ணல , அப்படியே கேட்காத மாதிரி நடக்கிறேன் ..

அவர்களை தாண்டி வந்துட்டேன் .. கொஞ்ச தூரம் நடந்ததும் ரெண்டாவது வளைவு வந்துச்சு .. பார்த்தால் , பெரிய கேட் ஒன்று சின்னதா பூட்டு போட்டு இருக்கு .. அந்த கேட்டை தாண்டி போனால் , அவர் வீட்டுக்கு ஈஸியாக போயிடலாம் தான் .. ஆனால் , 🙄

Note : google map அதிகப்பட்சம் தப்பாக மட்டும் தான் சொல்லும் என்பதை நினைவில் கொள்கிறேன் ! 

இப்ப வேற வழியில்ல ..திரும்ப வந்த பாதையிலேயே நடந்து முதல் வளைவுக்கு போகனும் ..
போகிற வழியில் அவர்கள் வேற இருப்பாங்க ! 

நினைச்ச மாதிரியே , திரும்ப அந்த சேலை கட்டுன பெண் , 

" டேய் ... மொட்ட , என்னடா ? 
இங்குட்டே சுத்திட்டு இருக்க...

லாரி பின்னாடி வாடா , 

குட்டிப்பாப்பா !  காசு கூட வேண்டாம்டா னு " 

சொல்லிட்டே நெருங்க வந்துச்சு " 

நான் , 

அக்கா  " sorry ...க்கா " னு வேகமா  அவர்களை தாண்டி வந்துட்டேன் ..

இவன் , என்னடி என்ன அக்கானு சொல்றானு ..பக்கத்துல இருந்த ரெண்டு பேர்ட அந்த பெண் சொல்லுது .. 

அவர்கள் சிரிக்கிற சத்தம் என் காதுல கேட்குது .. 

அவர்களை தாண்டி ரொம்ப தூரம் வந்துட்டேன் .. நான் மேல சொன்ன அத்தனை நிகழ்வும் , 20-25 நொடியில் நடந்திருக்கும் .. ஆனால் , அந்த அக்கா முகம் அவ்வளவு தெளிவாக பதிந்திருக்கு ! 

இனி திரும்ப அந்த அக்காவே பார்ப்பேனா என்றெல்லாம் தெரில .. 

நான் கடந்து போன சுவாரஸ்யமான மனிதர்களுள் அவர்களும் ஒருத்தங்க 💙

இன்னொருத்தரை பற்றி நாளைக்கு சொல்றேன் ! 

With love ,
யுவன் 👣🙇🎈

Monday, 30 December 2019

3 years of தரமணி ஆல்பம் :

தரமணி : 30 டிசம்பர் 2016 ! 

3 years of தரமணி ஆல்பம் .. 

யுவன் - நா.முத்துக்குமார் - ராம் ..

யுவன் , எனக்கான யுவனாக இருந்த கடைசி ஆல்பம் . அதுக்கு அப்புறமும் யுவன் இசையமைக்க தான் செய்யிறாரு .ஆனா, ஒரு போதும் எனக்கான யுவனாக உணர முடியவில்லை .. 

நா.முத்துக்குமார் , படம் வெளிவருவதற்கு முந்தைய வருடம் ஒரு விருது விழாவின் மேடையில் சொல்வாரு ... " அடுத்த வருடம் , தரமணி படத்திற்காக  யுவன் தேசிய விருது கண்டிப்பாக வாங்குவார்னு " ... 

அந்த அளவுக்கு , தரமணி படத்தின் இசையின் மீது அதீத நம்பிக்கையை ,படத்தில் பணியாற்றிய அத்தனை பேரும் கொண்டிருந்தனர் .அதுவே , எனக்குள்ளேயும் ஒருவித எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது .இதற்கு முன்  , இந்த trio ( யுவன் - நா.மு - ராம் ) செய்த சம்பவங்கள் அப்படி ..
கற்றது தமிழ் , தங்க மீன்கள் னு .. இன்றும் , நினைவில் வந்து முனுமுனுக்கிற பாடல்கள் அடங்கிய படங்கள் . 

ஆல்பம் வெளிவருவதற்கு முன்னரே நா.முத்துக்குமார் மறைந்து போகிறார் .. அவருக்காகவே , ஒரு track .. 

From the bottom of our hearts 💙

ராமும் , யுவனும் நா.முத்துக்குமார் பற்றி தன்னோட நினைவை சொல்வார்கள்  .. 
ராம் தன்னோட உரையில் கடைசியா ஒரு வரி சொல்வாரு ..

" தரமணி அவனுடைய இறுதி ஆல்பம் 
அல்ல " ... Ya , that's true 💙

இப்பவும் நா.மு , நம்மளோட play list ல் வாழ்ந்துக் கொண்டு தான் இருக்கிறார் ..

யாரோ உச்சிக் கிளை மேலே , 
உன் பதில் வேண்டி ,
உன்னை உன்னை , 
காதல் ஒரு கட்டுக் கதை ,
ஒரு கோப்பை , 
பாவங்களை .... 

ஆறு பாடல் .. எதையுமே என்னால்  இது சிறந்தது , அது சிறந்தது னு வரிசைப்படுத்த முடியாது .. ஒவ்வொரு பாடலிலும் ஒரு உணர்வு புதைந்திருக்கும் .. 

ஆல்பம் , முழுவதையும் கேட்ட பிறகு எனக்குள் எழுந்த ஒரே விஷயம் .. 
நா.முத்துக்குமார் again deserved national award particularly this track ( உன் பதில் வேண்டி , பாவங்களை ) .. எனக்குள்ளே அப்படியொரு நம்பிக்கை இருந்தது .. ஆனால் , தேசிய விருது இந்த ஆல்பத்திற்கு கிடைக்கவில்லை .. 

மனதை வென்று , மண்ணிற்குள் சென்றவனுக்கு .. மகுடங்கள் தேவையில்லாத ஒன்றாக இருந்திருக்கலாம் .. 

இப்போதும் கர்வத்துடன் சொல்வேன் .இங்கு நா.முத்துக்குமார் விட்டுச்சென்ற வெற்றிடத்தை எவரும் இதுவரை நிரப்பவில்லை . அவனுக்கான , இடத்தை எவராலும் நிரப்பவும் முடியாது ..

நா.முத்துக்குமார் இந்த சகாப்தத்தில் வாழ்ந்த 
பேரன்பின் ஆதி ஊற்று ..


Saturday, 26 October 2019

புணர்தலும் புணர்தல் நிமித்தமும்

நடுநிசியில் , 

இரவும் குளிரும் ..

நிலவும் மேகமும் ... புணர்ந்து கொண்டிருந்த அதே வேளையில் , 

அந்த அறையின் கட்டிலில் அவர்களின் உறுப்புகள் மட்டும் எந்தவித இடையூறுமின்றி புணர்ந்துக்  கொண்டிருந்தன ..

அவர்களின் உயிர் , கழட்டி எறிந்த ஆடையினை போல் எதிரெதிர் திசையிலிருந்து புணர்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது ..

#புணர்தலும்_புணர்தல்_நிமித்தமும்  

                                            @யுவன்முத்து

கல்லறைக்கு அருகில்

கல்லறைக்கு அருகில் ...

உயிருடன் இருத்தல் என்றால் என்ன ? 
இதயம் துடித்தால் உயிருடன் இருக்கிறேன் என்று அர்த்தமா ? அப்படி தான் இங்குள்ளவர்கள் சொல்லிக் கொள்கிறார்கள் ..

இவர்களின் பதில் சரிதான் என மனதையும் ,மூளையையும் ஒப்புக் கொள்ள வைப்பதற்கு நான் படுகின்ற சிரமம் இருக்கிறதே ............

மனதும் , மூளையும் ஒரு வரியை தான் தொடர்ந்து என் முன்னே வைத்து வாதம் செய்கிறது .. எங்களை போன்று இதயத்திற்கும் உடலில் ஒரு வேலை என இருக்கிறது .அந்த வேலையின் போது துடிக்கிறது , அதன் வேலையில் குறுக்கீடு நடக்கின்ற போது துடிப்பதை நிறுத்திக் கொள்கிறது ..அவ்வளவு தான் !!

என்னைப் பொறுத்த வரையில் , உணர்ச்சிகளின் வெளிப்பாடாய் தான் நான் உயிருடன் இருப்பதை உணர விரும்புகிறேன் . அது , இவர்களை போல இதய துடிப்பை காது வைத்தும், நாடியை பிடித்தும் உணர்வது அல்ல ..

வயிறு வலிக்க சிரித்து விட்டு , கண்களிலிருந்து கசிகின்ற கண்ணீரை துடைக்கின்ற போது ஏற்படுகின்ற உணர்வு ! 
அழுகைக்கும் , விசும்பலுக்கும் இடைவெளியில் இடைநிறுத்தமாய் விரல்களை மூக்கின் அருகில் வைத்து உள்நோக்கி மூச்சினை இழுக்கின்ற போது ஏற்படுகின்ற உணர்வு !!
சட்டென பயம் கொள்தல் ,கோபத்தில் எதையோ தூக்கி எறிதல் , சுயமாய் புணர்தல் , இன்னும் இன்னும் இன்னும் மிகுதியாய் ... 

கொஞ்சம் யோசித்து பார்த்தால் , நா.மு வின் வரியில் சிறு திருத்தத்துடன் ஒன்றை மட்டும் சொல்லத் தோணுகிறது .

கடைசியாய் 
உயிருடன் இருந்தது எப்போது ? 
ஞாபகமில்லை இப்போது !! 

தினமும் புழுக்கள் தின்றுக் கொண்டிருக்கும் பிணமாக தான் உணர்கிறேன் .என்ன மாயமோ ? என்னை சுற்றி இருப்பவர்களும் பிணமாக தான் தெரிகிறார்கள் . எல்லோரும் கல்லறைக்கு அருகில் நின்று கொண்டிருப்பது போல் இருக்கிறது !! 

                                                     -@யுவன்முத்து

யாரோ ஒருவர்

** யாரோ ஒருவர் ** 

என்னுடைய காயத்திற்காக
யாரோ ஒருவர் 
துடிதுடித்துப் போகிறார் ...

என்னுடைய உரிமைக்காக 
யாரோ ஒருவர் 
வீதி இறங்கி போராடுகிறார் ...

என்னுடைய வாழ்விற்காக 
யாரோ ஒருவர் 
உயிரோடு தொலைந்தும் போகிறார் ...

என்னுடைய பசிக்காக 
யாரோ ஒருவர் 
அரைநிர்வாணமாய் மன்றாடுகிறார் ...

என்னுடைய இருப்பிடத்திற்காக 
யாரோ ஒருவர் 
சிறையினை இருப்பிடமாக கொள்கிறார் ..

நான் பறப்பதற்காக 
யாரோ ஒருவர் 
தன் சிறகினை வெட்டிக் கொள்கிறார் ...

நான் உறங்குவதற்காக 
யாரோ ஒருவர்
விழித்துக் கொண்டே இருக்கிறார் ...

நான் மேலேறி வருவதற்காக
யாரோ ஒருவர் 
கீழிறங்கி செல்கிறார் ...

நான் நிழலில் நிற்பதற்காக
யாரோ ஒருவர் 
மரமாகி போகிறார் ...

நான் சிரிக்க வேண்டுமென்பதற்காக
யாரோ ஒருவர் 
அழுது கொண்டே இருக்கிறார் ...

ஏன் ?
ஏன் ? 
நான் மட்டும் ஏன் ....
யாரோ ஒருவராக 
எவரோ ஒருவருக்கு 
இருப்பதில்லை ..
இருக்க முடிவதில்லை !!

முட்டாளாகிய நான்

மனிதர்களை ரசிக்க வைப்பதே , அவர்களுக்குள் இருக்கும் முட்டாள்களால் தான் .அந்த முட்டாள் எப்போது வெளிப்படுவான் என்றெல்லாம் தெரியாது . ஆனால் , அவன் வெளிப்படும் போது மட்டும் தான் .. தன் நிலை என்னவென்று என உணர்ந்திட முடியும் ..தனக்குள் தென்படுகின்ற முட்டாள்களையெல்லாம் , எவன் கொன்று புதைத்து முன்னே செல்கின்றானோ ? 
அவனே தான் , மேதையாக ஏற்று கொள்கின்றனர் ..இன்னும் முட்டாள்களின் பிடியிலிருந்து வெளிவராத மனிதர்களால் !! 

இங்கு , மேதை என்பதே ஒரு மாயை தான் . முட்டாள் என்பவன் தான் நிரந்தரமானவன் ! தன்னை தானே  மேதையென கருதிக் கொள்பவன் , ஆகச்சிறந்த பெரும் முட்டாள் எனக் கொள்க ..

தனக்குள் இருக்கும் முட்டாள்களை தேடித்தேடி சந்திப்போம் . அவன் , முட்டாளாய் இருப்பதற்கான காரணத்தை கண்டறிவோம் .. முடிந்த அளவு , தன்னிடமிருந்து வெளிப்படும் முட்டாள்தனத்தை எண்ணி எரிச்சல் அடையாமல் .. அதனை ரசித்து புன்னகை செய்வோம் ....

நானும் முட்டாள் ..
நீயும் முட்டாள் ...💙💙

இதே நொடி !

சட்டை பையிலிருந்து .. 
ஒரு ரூபாய் நாணயத்தை எடுக்கிறேன் .. ரெண்டு பக்கமும் திருப்பி பார்க்கிறேன் .. சுண்ட வேண்டும் போலத் தோனுகிறது .. அதற்கேற்ப , இடுப்பளவு உள்ள மதிற்சுவரில் நாணயத்தை செங்குத்தாக நிறுத்துகிறேன் ,இடது கையின் ஆட்காட்டி விரலைக் கொண்டு ! 

இதே நொடியில் தான் ..இன்னொரு புறம் ! 
பறந்துக் கொண்டிருந்த பறவையொன்று கிளையின் மீது வந்து அமர்கிறது ..
இதே நொடியில் தான் .. எரிந்துக் கொண்டிருந்த விளக்கொன்று அணைந்து போகிறது .. இதே நொடியில் தான்.. கடற்கரையின் மணற்பரப்பிலுள்ள ஒரு குழியிலிருந்து நண்டு  மெல்ல எட்டிப் பார்க்கிறது ..

சுண்டுவதற்காக நிலைநிறுத்தப்பட்ட நாணயத்தை , வலது கையின் ஆட்காட்டி விரலைக் கொண்டு பலமாக சுண்டுகிறேன் ..
இதே நொடியில் தான் .. கிளையில் அமர்ந்த பறவையானது தன் அலகினால் சிறகினை நீவி சத்தம் எழுப்புகிறது .. இதே நொடியில் தான் , அணைந்து போன விளக்கினை கண்டு யாரோ ஒருவர் அதனை பற்றவைக்க தீப்பெட்டி தேடுகிறார் .. இதே நொடியில் தான் , குழியிலிருந்து எட்டிப் பார்த்த நண்டு முழுமையாக குழியிலிருந்து வெளியேறி தன் எதிரே இருக்கின்ற ஆழ்க்கடலை நோட்டமிடுகிறது ..

சுண்டப்பட்ட நாணயம் , சீராக சுழலுகிறது ..வேகம் மெல்ல மெல்ல குறைந்து முற்றிலும் எந்த வித இயக்கமின்றி .. நாணயத்தின் ஒருபுறம் மட்டும் தெரியுமளவு கீழே விழுகிறது !
இதே நொடியில் தான் .. கிளையில் அமர்ந்து சத்தம் எழுப்பிய பறவை , தன் சிறகினை விரித்து பறந்து போகிறது .. இதே நொடியில் தான் , அணைந்து போன விளக்கினை யாரோ ஒருவர் தீக்குச்சியினால் பற்ற வைக்கிறார் ... இதே நொடியில் தான் , குழியிலிருந்து வெளிவந்த நண்டு கடலின் பேரலை ஒன்றில் தன் உடலை நனைத்து விட்டு திரும்ப குழிக்குள் செல்லுகிறது ...

இதே நொடியில் தான் .. இப்போது நானும் ? 👣👣👣

ஒரு துளி !

இங்கு கண்ணாடி குடுவையிலான கோப்பை ஒவ்வொருவரின் பக்கத்திலும் வைக்கப்பட்டுள்ளது . அதில் , அவர்களின் மனநிலைக் கேற்ப மது நிரம்பியிருக்கும் ..

ஒவ்வொருவரும் , ஏதோ ஒருவனின் வாழ்வில் வந்து கடந்து செல்ல நேரிடுகிறது .அப்படி , செல்கையில் தன்னிடமுள்ள மதுவிலிருந்து , சில துளிகளை அவனது கோப்பையில் ஊற்றி செல்வதும் உண்டு . அவனிடமுள்ள மதுவிலிருந்து சில துளிகளை , தன்னுடைய கோப்பையில் நிரப்பிக் கொண்டு செல்வோரும் உண்டு ..இப்போது , இவன் கதைக்கு வருவோம் ! 

இவன் கோப்பை மதுவினால் நிரம்பி வழிந்ததாக எந்த சுவடும் இல்லை ..  இதுவரை ஒரு துளி மது கூட அந்த கோப்பையில் இருந்ததாகவும் தெரியவில்லை . இவன் இப்படி தான் .இவனுடைய வாழ்வும் இப்படி தான் .. 
இதற்கு முன் , இவனை கடந்து சென்றவர்களில் சிலர் பரிதாப உணர்வுடன் சில துளியினை இவனது கோப்பையில் நிரப்ப முன்வந்த போது , அதை நிராகரித்து விட்டான் . இவன் அனுதாபத்தில் வருகின்ற துளிகளை ஏற்பதில்லை ஒரு போதும் .

அன்பின் மிகுதியில் யாராவது ஒருவர் , இந்த கோப்பையில் ஒரு துளி மதுவினை அளிக்க மாட்டார்களா ? என்று தான் ஏங்குகிறான் .. இதுவரை , அப்படி ஏதும் நடக்காத காரணத்தினால் சில நேரம் விரக்தியின் உச்சத்தில் அந்த கோப்பையை எறிந்து சுக்கு நூறாக சிதைத்துள்ளான் . இருந்தும் என்ன செய்ய ? , இந்த வாழ்வு இன்னும் மிச்சமிருக்கிறதே , ஆதலால் அவனுக்கு இன்னொரு கோப்பை வழங்கப்படுகிறது .

இந்த வாழ்க்கை முடிவதற்குள் , அவன் எதிர்பார்ப்பது ...

அந்த கோப்பையில் ஒரே ஒரு துளி மது மட்டுமே !!

Sunday, 24 March 2019

கற்பனைகளுக்கு அப்பால் ..

#இங்கு #கற்பனைகளுக்கு_அப்பால்

#கயிதை 👼

கற்பனைகளுக்கு அப்பால் ,
அது...
மலைகளால் சூழப்பட்ட தீவு
தீவின் நுழைவு வாயிலில்
அறிவிப்பு பலகையொன்று
ஆடையையும் ,மூளையையும்
கழட்டி வைத்து உள் வருகென !

உள் நுழைந்ததும்
கண்ணெதிரே
ராமசாமி ஐயரின் மாமிச கடை
இன்றைய ஸ்பெஷல் ,
பெண்ணுறுப்பை சிதைத்த
தடித்த ஆண்குறிகள்
10 % தள்ளுபடியில்

சற்றுத் தள்ளி
இங்குள்ளவர்களின் குலதெய்வமான
ஆர்மோனியப்பெட்டியுடன் ராஜாவின்
மண்சிலையொன்று ..

தீவின் மையத்தில்
ஒரு சொட்டுக் கடல்
கடலில் கும்மாளமாய்
மூன்று மகிழ்ச்சியான பன்றிக் குட்டிகளும்
கெழட்டு ஜோடியான நரிகளும்

கடலுக்கு வலப்புறம்
நிலப்பரப்பின் நுனிப்புல்லை மேய்ந்தவாறு
சில நூறு நெத்திலி மீன்கள்

இன்னொருப்புறம்
கட்டுக்குள் அடங்காத கூட்டமொன்று
அடகு கடைக்கு முன்னால்

விசாரித்தலில் தெரிய வந்தது ,
இங்கு ..
கண்ணீரை அடகு வைத்து
கஷ்டத்தை தீர்த்துக் கொள்வார்களாம்
சில நொடிகளுக்கு

அடகு கடையின்
கண்ணாடி பேழைக்குள்
கண்ணாடி குப்பிக்களுக்குள்
சேகரிக்கப்பட்ட கண்ணீர்த் துளிகள்

ஒவ்வொரு கண்ணீர் குப்பிகளும்
ஒருவரின் மரணத்திற்காக
ஒருவரின் பிரிவிற்காக
ஏதோ காரணத்திற்காக ..

தீவின் முக்கியத் தொழில்
பகல் நேரத்தில்
அந்தரத்தில்
சிதறிக் கிடக்கும்
மக்காத குப்பைகளான நட்சத்திரங்களை
படகில் சென்று
சுத்தம் செய்வது ...
அத்தனை சாதியினரும்
இங்கு துப்புரவு தொழிலாளர்கள்

தீவில் கோலாகலமாய்
திருமண விழாவொன்று ..
சிபுவின் முயற்சியால்
காதலர்களுக்கு
நிச்சயிக்கப்பட்ட திருமணமாக

இரத்தத் திரவியங்களை
உடல் முழுக்க தெளித்துக் கொண்டும்
காலில் மாட்டிய நகக்குப்பிகளில்
சிகப்புநிற நெயில்பாலிஷ் தீட்டிய படியும்
முன்பே வாங்கி வைத்த
மோதிரத்தை
தன் ஆடைக்குள் ஒளித்து வைத்தும்
மாப்பிள்ளை மிடுக்காய்
மணமேடை ஏறுகிறது
ஆண்குருவி

இதயத்தை கேட்டவள்
தன் இதயத்தை
தரப்போகின்ற நிலையை எண்ணி ,
மணமேடை ஏறி
வெக்கப்பட்டு சிரிக்கிறது
பெண் கழுகு

தம்பதிகளுக்கு
வாழ்த்து மடலாய் ..
என் கையொப்பத்துடன் ,

" அன்பால் வடிவமைக்கப்பட்ட உலகிது,
நம்மை வெறுப்பவர்களின்
கற்பனைகளுக்கு அப்பால்
அன்பு செய்வோம் , அவர்களிடத்திலும் .."

Monday, 11 March 2019

பொள்ளாட்சி கூட்டு பாலியல் தொல்லை

இப்பொழுதாவது #பேசுவோம் 

Speak about pollachi_rapist

*****************

அவளின் குரலாக ...

அன்பை கொட்டி
நம்ப வைக்கலாம் ..
அறிவை தீட்டி
அறைக்கும் அழைக்கலாம்
அடங்க மறுத்தா
அத்து மீறலாம் ..

கூட்டு பயலுக
கூட்டமாய் முன்  நிற்க ..
அந்த நொடியிலேயே
பாதி உயிரும் போக ..
அழுது அழுது
காலில் விழுந்து கரைந்து போனாலும் ..
அரக்க கண்களுக்கு
பெண் எல்லாம்
பொம்மை தான் ..

கத்தி கதற
தெம்பு இல்ல ..
இன்னும் கெஞ்ச
கண்ணுல தண்ணீர் இல்ல ..
கழட்டி எறிந்த ஆடையும்
கனத்து போச்சு ..
பிடியில் சிக்கிய உடம்பும்
மறத்து போச்சு ..
வெளியில் சொல்லவும்
திராணி இல்ல ..
மாண்டு போகவும்
உசிரு இல்ல ..

அதிகாரம் இருந்தால்
அடிவயித்துல எட்டி மிதிக்கலாம் ..

காமிரா இருந்தால்
கண்டபடியும் படம் பிடிக்கலாம் ..

கூட்டணி கட்சிகளெல்லாம்
முக்கியச் செய்தி ..
கூட்டுப் பலாத்காரமெல்லாம்
விரைவுச் செய்தி ..

இத்தனைக்கு பின்னும் ,
நீ ஏன் போனனு தான்
கேட்குற ..
அவனை கேள்வி கேட்க
ஏன் பயப்புடுற ?

சட்டத்தின் ஓட்டையெல்லாம்
பெண்ணின் யோனியா ..
ஆண்குறி உள்ளிருந்து
தப்பி பிழைத்தது போல்
மரண பிடியிலிருந்து
நீயும் தப்பிக்க ..



Saturday, 9 February 2019

கருப்பும் , காக்கியும் !!

சமீபத்தில் ஜிப்ஸி என்ற படத்தின் ஒரு ப்ரோமோ பாடல் ..
#very_very_bad !!  காக்கி சட்டைகளை சீண்டி பார்க்கும் கருப்பு கூட்டம் .. அதன் உந்துதலின் வெளிப்பாடு தான் இந்த பதிவு .. மொழி நடை ஒரு கானா மெட்டுக்கு ஏற்றாற் போல் 🙏


Very very bad .. Bad to the core ❤

*****

வருவ ..
மேல வருவ ..
இடம் தந்தா தான வருவ !

நிற்ப ..
எதிர்த்து நிற்ப ...
கற்றால் தான கேள்வி கேட்ப !

( பாவம் ! நெய் வாங்கவே சிரமப்படுகின்ற அந்த சமூகத்துக்கு 10% இட ஒதுக்கீடு அறிவிக்கப்படுகிறது .. இது பின்னாடி உள்ள சமூகத்தை எவ்வளவு பாதிக்கும்னு தெரிஞ்ச போராளிஸ் வழக்கம் போல , போராட வாறாங்க )

படிக்க வாறோம் நாங்க ..
கதவைத் திறங்க  நீங்க ..
எங்களைத் தடுத்தா ?
ஏறி மிதிச்சா ?
எட்டி உதைச்சா ?
**தா ..

வருவேன் வருவேன் முன்னால

கருப்பர் கூட்டம் பின்னால

வழிய விடுவ தன்னால ...


(இப்படி ரைமிங்கா சொல்லும் போதே போலீஸ் லத்தி சார்ஜ் பண்றாங்க .. அப்போது , அந்த கூட்டத்திலிருந்து )

பூட்ஸ் கால
பாலிஸ் பண்ணி
தொண்டையில மிதிக்கிற ..

லத்தியை தான் உருவிக்கிட்டு
மண்டையை பொளக்குற ..

குடிசையை பற்றவைத்து
ஜெகஜோதியாய் கொளுத்துற ..
என்னனு கேட்டாக்கா ?
தேனீக் கூட்டம்னு மழுப்புற ..

கால்கடுக்க நிற்கையில
பாவமாக தெரியிற ..
காக்கியை போட்டதும்
கல்லாக மாறிடுற ...

ஹெல்மேட்டு போடலனா
**த்தா ..**ம்மா ..னு
கேட்குற ..

கர்ப்பிணியா இருந்தாலும்
விரட்டி போய் மிதிக்கிற ...

அரஸ்ட் வாரண்ட்
இருந்தாக் கூட
கொடை பிடித்து காக்குற ..
அதிகாரியாக இருந்துவிட்டால்
சல்யூட் அடிக்கிற ..
சாமானியனாக தெரிந்தால் மட்டும்
வேட்டியைத் தான் உருவுற ..

ரோட்டோரம் கடையை மிரட்டி
உண்டியலை நிரப்புற ..
சிக்னல் சிக்னலா
கடையைப் போட்டு
யாசகம் கேட்கிற ..

வேலை செய்யும் நேரத்திலேயும்
மப்புள மிதக்கிற ..
கத்துகிட்ட மொத்த வித்தையும்
என் களத்துல காட்டுற ..
( 13 புல்லட்ஸ் 👼)

காவல் தெய்வம்னு கும்பிட்டாக்கா
காவு வாங்க துடிக்கிற ..
இத்தனையும் பண்ணிபுட்டு
உங்கள் ................

    ......... நண்பனு சொல்ற !!


Saturday, 2 February 2019

பேரன்பும் - பாப்பாவும்

பாப்பாவ பார்க்க போயிருந்தேன் .. பாப்பா , மற்ற குழந்தைகள் மாதிரி இல்லாததால் பாப்பா கடைசி வரைக்கும் பாப்பாவாகவே இருக்கணும்னு அமுதவன் அப்பாவுக்கு
ஆசை !

ஆனால் , இந்த இயற்கை கொடூரமானது , இரக்கமற்றது , வெறுக்கத்தக்கது ..

பாப்பாவின் வயதிற்கேற்ப உடலில் ஏற்படும் மாற்றம் , உணர்வு , அவள் கண் முன் தெரியும் இந்த சமூகம் என எதுவுமே பாப்பாவை கடைசி வரைக்கும் பாப்பாவாக வைத்திருக்க முடியவில்லை ..

பாப்பா பாப்பாவாக இருப்பது எல்லாம் இந்த இயற்கை பேரன்பாக திகழும் போது மட்டுமே ..

அன்பு நிலையானது இல்லை , அதிலும் பேரன்பு சொல்லவே வேண்டாம் ..அன்புக்கும் பேரன்புக்கும் வித்தியாசம் என்பது  வரிசையாய் செல்லும் எறும்புகளுள் ஒன்றுக்கும் மற்றொன்றுக்கும் இடைப்பட்ட இடைவெளி தான் ..

அன்பு - காட்டப்படும்
பேரன்பு - ஏற்றுகொள்ளப்படும்

பேரன்பு எதன் மீது வேண்டுமானாலும் இருக்கலாம் .. அது உயிருள்ள ஜீவனாகவும் இருக்கலாம் ,உயிரற்ற தன்னமையுடையதாகவும் இருக்கலாம் .. பாப்பாவை அப்படியே ஏற்றுக்கொள்ள கூடிய பேரன்பு இங்கு சொற்பமே .. அப்படி ஏற்றுக்கொண்ட உள்ளங்களுக்கு எற்படுகின்ற அவஸ்தைகளை சொல்கின்ற படமாக தான் பேரன்புவை நான் பார்க்கிறான் ..

ஒரு சில படங்களை பார்க்கும் போது நமக்கு தோன்றும் , நம்ம பேச தயங்குகிற விஷயங்களை வெளிப்படையாய் சொல்லிருக்காங்க யென: ஆனால், பேரன்பு இதற்கு ஒரு படி மேலேறி ..

நம்ம யோசிக்கவே மறந்த பல விஷயங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து காட்டிருக்காங்க .. படம் எடுத்த விதத்திற்காகவும் ,எண்ணத்திற்காகவும் இரண்டு மூன்று விருதுகளை கொடுத்துவிட்டு ஒரு சில தினங்களில்  பொட்டிக்குள் அடைத்து விடாமல் ..
அந்த குருவியை போல சுதந்திரமாக பறக்கட்டும் சில மாதங்கள் யென !

பாப்பாவை போலத் தான் இங்கு பலரும் காத்துக் கொண்டு இருக்கிறார்கள் , அந்த பேரன்பிற்காக ..

என்னை அப்படியே ஏற்றுக்கொள்ள கூடிய பேரன்பிற்காக நானும் காத்திருக்கிறேன் . அந்த ஆழ்கடலில் தான் பேரன்பு கிடைக்குமென்றால் அங்கு செல்லவும் தயாராக தான் இருக்கிறேன் .. ❤❤


Monday, 7 January 2019

கதையாடல் - சிகப்புரோஜாக்கள்

கதையாடல்
#சிகப்புரோஜாக்கள்

பூத்துக் குலுங்குவதெல்லாம்
ரோஜாக்கள் யல்ல ..
ரோஜாக்களாக இருப்பனயாவும்
சிகப்பு ரோஜாக்கள் யல்ல ..
இவன் விழிகளுக்கு
குண்டு மல்லியாகியினும்
செக்க சிவந்த சிகப்பு ரோஜாக்களே  !!

ரோஜாக்கூட்டங்களே
மன்றாடி நிற்கிறது
குத்துங்கள் எஜமான் குத்துங்களென !!

வண்டுகளின் விருப்பத்தேன்
நான் மட்டுமே !!
என்கிற கர்வ மிகுதி
அந்த ரோஜாக்களுக்கு...
கர்வத் தேனை
மட்டுமே ...
இதழோடு இதழ் பதித்து
உறிஞ்சுகிறான் !!
பஞ்சணையில்
வஞ்சனையுடன்
விளையாடுகிறான் !!

கண்ணொளியில் பட்ட
சிகப்பு ரோஜாக்களை
காணொலியாய்
படம் பிடித்து
மற்ற விழிகளுக்கு
விருந்து வைக்கிறான் !!

கொலைகளும்
ஆயக் கலைகளில் ஒன்றாகிவிட்டது
இவனுக்கு ..

ரோஜாக்களின் காம்பினை
அறுக்கின்ற வேளையில்
வழிந்தோடுகிற குருதியே
அந்த
மியாவ் மியாவ் பூனைக்கு
ஒரு வாரகால உணவாகிறது ...

தன்னைத் தானே
அடக்க நினைத்தும்
அத்துமீறி நிற்கிறான் ..
இவன் பாதையெங்கும்
காலி மதுக்குப்பிகளில்
வளர்க்கப்படுகிற சிகப்பு ரோஜாக்கள் ..
பாவம் ,
இவன் என்ன செய்வான் ?

தன் நாட்குறிப்பை
எழுதுகின்ற மதிற்சுவர் முழுவதும்
நிரம்பி வழியும்  சொற்களாய்

மீண்டும் .. மீண்டும் ...மீண்டும் ..
மீண்டும் .. மீண்டும் ... மீண்டும்..
மீ..ண்..டு..ம்..
............................... !!