Thursday, 15 March 2018

** என் அண்ணனுக்காக **

(அவள் -அம்மா .. அவர் -அப்பா ... அண்ணன் -அவன் .. இவையெல்லாம் அன்பின் வெளிப்பாடே )

மூத்தவனே ..
எனக்கு முன்னால் எல்லாம் அவனே ...
ஆம் !!

நான் குடியேறுவதற்கு முன்னால் ...
அவளின் கருவறை ..
அவளுடான தொப்புள் கொடி ..
அவளது மார்ப்பின் பால் ..
அவளின் தாலாட்டும் மடி ..
அவளின் கைப்பிடிச் சோறு ..

இன்னும் சொல்லப் போனால் !!

அவளின் அன்பு முத்தங்கள் மற்றும் பல ...

                        
அதுபோலத்தான் ...அவருடனும்...

அவரின் மார்ப்பில் தூக்கம் ..
அவரின் தோள்களில் உப்பு மூட்டை ..
அவரின் மேல் யானை சவாரி ..
அவரின் அரவணைப்பு எல்லாம் ..

ஆனால், என்ன ?? இவையெல்லாம்
அவனுக்கு நிரந்தரமாக கிடைக்கவில்லை ..
அதை பங்கீட்டுக் கொள்ள
வந்த என் வருகையால் ..

எவ்வளவு பெரிய தியாகம் இவையெல்லாம் ..
அண்ணா ! Loves lot ..

********

அவன் !!
வெயிலிலும்,மழையிலும் ...
ஆடி ,பாடி ,ஓடி ...
குண்டி தெரிய கிழித்த டவுசர்களை எல்லாம் ..
ஒட்டுப்போட்டு தைத்துக் கொண்டு..
நான் ஆடுகிறேன் ,
அந்த வெயிலிலும் , மழையிலும் !!

அவன் !!
ஆசை..ஆசையாய் ..
வாங்கிய கலர் சட்டைகள் எல்லாம்
இப்போது என் வசம் ஆகிவிட்டது ..

அவன் எழுதிய சிலேட் ,
அவன் படித்த கோனார் தமிழ் கையேடு ..
முதற்கொண்டு ..
எனக்காக பத்திரமாக வைத்திருந்தார்கள் !!

இன்னும் சொல்லப்போனால் ..

என் வாழ்வில் வந்த முதல் நண்பன் ..

ஒரு ரூபாய்க்கு வாங்கிய மிட்டாயை
இரண்டாக பகிர்ந்துக் கொண்டோம் ..

டிவி ரிமோட்காக அடித்துக் கொண்டோம் ..
இதைப்பார்த்து அப்பா கை ஓங்கையில்
ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு
நலம் விசாரித்தோம் ..

எனக்காக விட்டுக்கொடுத்த ..
பேருந்தின் ஐன்னல் இருக்கை !!
அம்மா சுட்ட சூடான மொறுவலான எண்ணெய் தோசை ...
அவ்வளவு எளிதில் நினைவுகளிலிருந்து
அகற்ற இயலாது ..

********

வயது ஆக ஆக ...
அவன் அண்ணன் என்ற நிலையில் மட்டுமின்றி ..

என் வழி தவறவிடாது காத்திடும் அப்பாவாக !!

அறிவை வழங்கிடும் ஆசானாக !!

தோள் கொடுத்திடும் உற்ற தோழமையாக !!

அன்பு காட்டிடும் அம்மாவாக ??

இல்லை ! இல்லை !!

அந்த பொறுப்பை மட்டும் அவன் மனைவியிடம் வழங்கி விட்டான் ..

அதாங்க ..அண்ணி என்ற என் அம்மாவிடம்  வழங்கி விட்டான் ..

என் உடன் பிறப்பை எனக்காக !!
இன்னும் என்ன என்ன ??
செய்யப் போகிறாய் ..

நீ தந்தவற்றையெல்லாம் என்னால் ஒரு போதும் தர இயலாது ..

உன்னை வாழ்த்தி அன்பு செலுத்துவதே தவிர ..

Tuesday, 13 March 2018

பெண் தோழி !!

என் வாழ்வில் மீண்டும் ஒரு அவள் !!
இந்தமுறை கிட்டத்தட்ட என் வயதிற்கேற்ப..

யார் அவள் ?
கேட்டால் "பெண் தோழி" என்கிறாள் ..
ஆனால் ..
அந்த வரிக்குள் மட்டும் அவளை அடக்கி விட முடியாது ..

நல்ல வேளையாக அவள் என் வாழ்வில் வந்தால் ...
வராமல் போயிருந்தால் ??

பெண்களின் கண்ணைப் பார்த்து பேச முடியாமல் !!
தடுமாறிப் போயிருப்பேன் ..

மனதில் பட்டதை பெண்களிடம் சொல்ல முடியாமல் !!
திக்குவாயாக மாறியிருப்பேன் ...

அவளின் துப்பட்டா என்னருகே உரசும் போது எல்லாம் !!
என் அம்மாவின் சேலை வாசம் ...

அவள் வீட்டு டிபன் பாக்ஸ்களிலெல்லாம் !!
என் அம்மாவின் கை பக்குவம் ..

செல்லமாக தலை கோதி விடுகிறாள் ..

இறுக்கமாக கை பிடித்துக் கொள்கிறாள் ..

(அவளின் துணைக்கு நானா ? இல்லை ..என் துணைக்கு அவளா ? )

என் நிழலுக்கும் அவள் கொடை பிடிக்கிறாள் ...

நான் அழுகையில் கைக்குட்டையாக மாறிவிடுகிறாள் ...

என் மொட்டை மாடி தனிமையில் !!
நிலாவாக வந்து கதை சொல்கிறாள் ..

உரிமை கொண்டாடுகிறாள் ...
சண்டை போட்டுக் கொள்கிறாள் ..
பின்பு அவளே !!
என்ன பேசமாட்டியா ? என கேள்வியும் கேட்கிறாள் ..

நம் இருவருக்குமிடையே ..
காமம் இல்லை !!
ஆனால் , காதல் இருக்கிறது ..

அன்பு செய்கிறாள் ..
அரவணைத்து செல்கிறாள் ...
விட்டுக் கொடுத்து போகிறாள் ..
வீம்பாக வார்த்தை போர் செய்கிறாள் ..
எதாவது நமக்கென்றால் ??
துடிதுடித்தும் போகிறாள் ...
புரியாத புதிர் தான் இவள் ..

என்ன தவமோ ??
நான் பெற்ற வரமோ !!
இன்னொரு யுகம் கிடைக்குமோ  ??

மீண்டும் ..
என்னை செதுக்கும் உளியாய் ..
நீயே வேண்டும் பெண் தோழியாய் ..

Monday, 12 February 2018

அவளுக்கான வரிகள் ( soup boy - words )


             ** Soup boy - words **

அவள் ..
வருகைக்கு முன் !!
கனவு கண்டுக் கொண்டிருந்தேன் ...
.
.
அவள் ..
வருகைக்குப் பின் !!
கண்ட கனவுகளில் வாழ்ந்துக் கொண்டிருந்தேன் ..
.
.
அவள் ..
போன பிறகு தான் !!
என் வாழ்க்கையே வாழப்போகிறேன் ..

**

அவள் மீது ..
அன்பை செலுத்துங்கள் !!
கொட்டி விடாதீர்கள் ..

திரும்ப அள்ள எல்லாம் முடியாது ..
நீங்கள் கொட்டிய அன்பை
காற்றடிக்கும் திசையில் !
பறக்கச் செய்திருப்பாள் ..
அவள் !!

**

மை லார்ட் ..
சிற்றின்ப பட்டியலில் ..
அவள் காதலையும் சேர்த்து விடுங்கள் !!

**

நீங்கள் அப்ப அப்ப
தருவதை / தந்ததை எல்லாம் ..
அவளும் தர வேண்டும் ..என
எதிர்ப்பார்க்காதீர்கள் !!

கடைசியில் மொத்தமாக ஒன்று தருவாள் ..
வாங்கிக் கொள்ள .. Sorry ..
தாங்கிக் கொள்ள தயாராகுங்கள் ..

**

நான் எப்பவும் ராவா ... தான் ?
ஏனா ?
என் மனசு பூரா.... அவளே தான் !!

**

அவள் பிரிவினால் தான் ..
முதன் முறையாக
விரல்களுக்கு இடையே சிகரெட்டை பற்றவைத்தேன் !!
காரணமிருக்கிறது ...
நான் ஊதித் தள்ளும் புகை காற்றில் மறைவது போல ..
அவள் நினைவுகளும் மறையட்டும் என்றுதான் !!

**

அப்போது ...
எங்கே பார்த்தாலும் அவள் முகம் !!
இப்போது..
எங்கே தேடியும் அவளே காணும் !!

ஒளிந்திருந்து விளையாடுகிறாளோ ?

காதல் விளையாட்டாக இருந்தால் சரி..
என் வாழ்வில் விளையாடுவதாக இருந்தால் ??

**

கொள்ளையடிக்க வந்தவளே ..
கொள்ளை அடித்து விட்டு போயிருக்கலாமே ??
ஏனடி ?
கொன்று விட்டு போகிறாய் ..

**

அவள் ...
மாடு ! மாடு ! என்றழைக்கும் போது ..
செல்லமாக அழைக்கிறாள் என்றிருந்தேன் !
இப்போது தான் காரணம் தெரிகிறது ..
அவளின் நினைவுகளை
முழுங்கவும் முடியாமல் ..
துப்பவும் முடியாமல் ...
அசைப் போட்டுக் கொண்டிருக்கிறேன் ..
நல்ல எருமை மாடாக !!

**

தூங்கும் போது கூட
அலைபேசியை காதருகே தான் வைத்துள்ளேன் !!

அவளின் மறதினால் ..
தெரியாதனமாக கூட அவளிடமிருந்து ..
அழைப்பு வந்துவிடுமோ ? என

காத்திருக்கிறோம்... நானும் !
என் அலைபேசியும் ..

**

என் காதல் பொல்லாதது ...
எப்படியும் ஒருநாள் என்னை எண்ணுவாய் !!
உன் விழியோரம் நீர் ததும்பும் ..
சிந்தினாலும் பரவாயில்லை ..
கவலை கொள்ளாதே .. கண்மணியே !!

அப்போதும்
அதை துடைக்க ...
உன் கழுத்தை தவழும் துப்பட்டாவாகவோ !
உன் மேனி சூழ்ந்த புடவையாகவோ !
எப்போதும் போல் உன் கைக்குள் அகப்பட்ட ..
கைக்குட்டையாகவோ !!
நானே இருப்பேன் ..

**

மறவாதே கண்மணியே .. என்னை அல்ல ..என் காதலே !! என்னை விட எந்த கொம்பனும் உன்னை இவ்வளவு நேசித்திருக்க மாட்டான் என ..

        ** மங்களம் _உண்டாக்கடும் **

Sunday, 11 February 2018

சவரக்கத்தி - பிசாசு கையில் தங்கமீன்

                        **சவரக்கத்தி**

இந்த கத்தி பார்ப்பவர்களை குத்துமா என்று தெரியவில்லை .. ஆனா , கண்டிப்பா  ஏதோ ஒரு வகையில் உரசி பார்க்கும் ..

பிசாசு  (மிஷ்கின் ) (மங்கா)
தங்கமீன்கள் (ராம் ) (பிச்சை)
தூண்டில் (பூர்ணா) (சுபத்ரா)

இந்த பிசாசுக்கு தங்கமீன் வேணும் .. அதை எப்படியாவது அடையனும்னு போராடுது..  தங்கமீனை பிடிக்கிறதுக்கு ஒரே வழி.. தூண்டில் இந்த பிசாசு கையில் இருந்தால் மட்டுமே சாத்தியம் ..அதே தான் அதுவும் பண்ணுகிறது ..

தங்கமீன் ரொம்பவே சுவாரஸ்யமானது .. தன் குழந்தைகளுக்கு முன்னால் ஹீரோவாகவும் , பேரம் பேசும் மனிதனாகவும் , உண்மையிலேயே தூண்டிலில் அகப்பட்ட மீன் போலத் தான் ,அவன் காது கேளாத மனைவியிடம் சிக்கித் தவிக்கிறான் .. காட்சிக்கு காட்சி சிரிப்பு , கோபம் ,அழுகை ,தன் இருப்பை காட்டுதல் என பல்வேறு பரிமாணங்களில் தோன்றுகிறான் ..

பிசாசு .. ஒரு ஜிப்பா , மிலிட்டரி கட்டிங்  ,கழுத்துல ஜெயின் ,கூர்மையான பார்வை ... அந்த பிசாசின் குணம் எப்ப  பார்த்தாலும் கோப படும் .. கோபம் மட்டுமே படும் ...நல்லா தொண்டை தண்ணீர் வற்ற கத்த தெரியும் ...

தூண்டிலுக்கு இதை விட நல்ல கதாபாத்திரம் அமையுமா  ? என்பது கேள்விக்குறியே ..
புருஷனுக்கு ஏற்ற மனைவி போல் தான் அவளின் பகுமானமும் ,வாயும் ..

கவனிக்கத் தோன்றிய இடங்கள் ::

** குப்பைத் தொட்டியில் தங்கமீன் ஒளிந்திருக்கும் போது .. குப்பை அள்ளுபவனின் செயல் .. அவனுக்கு தேவை குப்பை மட்டும் தானே .. அவனது செயலை பார்த்தால் எவனுக்கோ அது தங்கும் வீடு போல

** நீங்க எங்க இருக்கீங்கனு சொல்லுங்க நானே வருகிறேன் என தங்கமீன் சொல்லும் போது ..
"இல்ல ..நீ ஓடு ..நான் உன்ன துரத்தி பிடிக்கிறேன் " என பிசாசு தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு ..சொல்லுவது எல்லாம் தன் இருப்பை நிலை நாட்டவும் !!
தோல்வியை ஒப்புக் கொள்ளமுடியாமல் தவிப்பதும் தான்

** என்னத்த ராக்கெட் செஞ்சு மேல பறக்க விட்டாலும் ... கையால தான் கழுவனும் .. என கவனிக்க வைக்கிறார் டீ கடையில் வேலை செய்பவர்

** இப்படியொரு காதலை காட்டியதற்கே ஆயிரம் முத்தங்கள் தரலாம் அந்த பிசாசுக்கு (கதை ,திரைக்கதை ) !! தனக்கான மாப்பிள்ளை ஒரு ஊனம் என்று தெரிய வரும்போது .. அவளிடம் நீடிக்கும் அந்த மவுனங்களே உடைத்தெறிந்தது ..அவள் சாதிகளின் ஆணவத் தன்மையே .. ஊனமற்றவனின் கால்களை தாங்குவது எல்லாம் ... அவளின் பாவங்களை கழுவும் செயல்

** எல்லாம் இழந்து போய் இருப்பவனுக்கு உத்வேகம் தரும் ஊனமுற்ற டீ கடைக்காரரின் சைகை மொழிகள்

** கரும்பு ஜூஸ் அக்கா , சைக்கிள் கடை ஓனர்

** பிசாசின் நிலை கண்டு துடிக்கும் அவனின் அப்பா

** தத்துவம் பேசும் பைத்தியம் .. ஆங்கிலத்தில் பேசினால் அவன் மகான் ..

இதை விட முக்கியமாய் கவனிக்க வைத்த இடங்கள் ..

** நிறைவு பகுதியில் ... நம்ம அப்பா / நமக்கு ஹீரோ தானா !!

தங்கமீன் அடி வாங்கும் காட்சி .. யப்பா .. சண்டை போடுப்பா !! என கண்ணீர் மல்க கெஞ்சும் பெண் பிள்ளையிடம் ..
"அப்பாக்கு ..சண்டை தெரியாதுமா " என கண்ணீர் சிந்தும் அதே தங்கமீன் தான் !!

ஆண் பிள்ளை ஓடி வந்து பார்க்கிறது .. தன் தந்தை அடி வாங்குவதை .. அவனிடம் வார்த்தைகள் கூட இல்லை ... ஒரு பார்வை தான் .. இதை கவனித்த தங்கமீன் வீரம் கொண்டு எழுவது எல்லாம் ?

பெண் பிள்ளை சொல்லும் போது .. எங்கே போனது அந்த வீரம் ..

** கட்டி உருளும் பிசாசும்  , தங்கமீனும் .. தண்ணீர் டப்பாவில் இவர்கள் மோதும் போது ..அங்கு அவளின் தண்ணீர் குடத்திலிருந்து வெளிவருகிறது சிசு .. கணத்த மெளணங்கள் ஆக்கிரமிக்கிறது சில நொடிகள்..

#கத்தி எதுக்கு தான் .. தொப்புள் கொடி வெட்டத்தான் ...

** அந்த கத்தியை கழுவ திறந்த தண்ணீர் குழாயை ஏன் அவள் அடைக்காமல் சென்றால் ?? அந்த பிசாசுக்கு தண்ணீர் தெளித்து உயிர் கொடுக்கவா ..

வந்து விட்டதே .. பிசாசுக்கும் உயிர் , மனிதாபிமானம் எல்லாம் ..

https://youtu.be/JVFm1gYgXkI

Tuesday, 6 February 2018

உரையாடல் with அவனும் ..அவளும் ..நடுவுல ஒரு பூ வும் !!

யம்மா !! யம்மா !! டைம் ஆயிடுச்சு ...

நான் கிளம்புறேன்...

எப்போதும் போல் பரபரப்பாக கிளம்புகிறான் "ஷ்" ..

இவனின் வருகைக்காக ...எப்பவும் போல் காத்துக் கொண்டு இருக்கிறார்கள் ,அவனது கல்லூரி தோழிகளான ..
"னி" &  "னோ" & "மா" ..

( என்ன பிடிபடலையா ?  "_" இந்த குறிக்குள் இருப்பது அவர்கள் பெயரின் இறுதி எழுத்து .. இத்தொடர் முடியும் தருவாயில் சொல்கிறேன் ..அவர்களது பெயரை !! இல்லை ... நீங்களே உத்தேசித்து கொள்ளுங்கள் )

சிறு வயதில் இருந்தே ஒன்றாக தான் படிக்கிறார்கள் ,இந்த 4 பேரும். "ஷ்" வீட்டு வழியாக தான் கல்லூரிக்குச் செல்ல வேண்டும் .அது மட்டுமில்லாமல் , "ஷ்" வீட்டை சுற்றி பூக்கள் வித விதமாக பூத்து இருக்கும் ..அவனது தந்தை ஒரு தோட்டக் கலை தொழிலாளி ,கூடவே பூச்செடிகள் விற்பதும் ..

இதற்காகவே அந்த "னி" & "னோ" & "மா "
மூன்று பேரும் வருகை தருவது ஒரு காரணம் . இவர்கள் தலையில் பூ சூடிக் கொள்ளும் செலவு மிச்சம் பாருங்க ..

***

என்னம்மா  ! "னோ" உன் அக்காக்கு குழந்தை பிறந்திருக்காமே ? என்று வினாவிக் கொண்டே அவள் தலையில் தான் கோர்த்த மல்லிகை பூவை வைக்கிறாள் "ஷ்" வின்  அம்மா ..

ஆமா ! ஆண்ட்டி ... நாளைக்கு தான் நான் போய் பார்க்கனும் ..இன்னிக்கு கடைசி நாள் காலேஜ் ... அதான்..

சரிமா !! பார்த்து போய்ட்டு வாங்க ....

*****

உங்களுக்கு ஒன்று தெரியுமா ?

இந்த "ஷ்" க்கு "னோ" மீது ஒரு தலைக்காதல் .... இன்றாவது , எப்படியாவது சொல்லிட வேண்டும் என மனதை தயார் செய்து கொண்டு உள்ளான் ...

மதிய உணவுக்காக ... வகுப்பறையில் இருந்து எல்லோரும் வெளியே கிளம்புகிறார்கள் .."ஷ்" அவனது இடத்தில் அமர்ந்து எதையோ ,யோசித்துக் கொண்டே இருக்கான் ...

என்னடா ? சாப்பிட வரலையா .. என்னாச்சு இப்படி உட்கார்ந்து இருக்க .. வா..போகலாம் :   "னோ" அவனது கையை பிடித்து கூப்பிடுகிறாள் ...

உன்ட .. கொஞ்சம் பேசணும் .. உட்காரு !!
அவளை அருகில் அமர வைக்கிறான் .. "ஷ்"

ஏய் ? நீங்க வேணும்ன போங்க ..நாங்க பின்னாடி வாறோம் என "னோ" சொல்வதற்கு முன்னாடியே "னி" யும் "மா" வும் நடையே கட்ட ஆரம்பித்து விட்டார்கள் !!

உங்களுக்கு இன்னொரு விஷயம் தெரியுமா ? இந்த "னி" க்கும் , "மா" க்கும் இவன் காதல் விஷயம் தெரியும் .. உனக்கு சொல்ல தயக்கமா இருந்தா சொல்லு !! நாங்களே அவளிடம் சொல்லிடுறோம் .. என சொல்லியும் பார்த்தாச்சு எப்பவோ ..

நம்ம துரை "ஷ்"  தான் இல்லை , நானே சொல்லிக்கிறேன் . நீங்க எதுவும் பண்ண வேண்டாம் ,என அன்பு கட்டளையிட்டு உள்ளான் ..

ஏண்டி ?? "மா " இன்னிக்காச்சும் ... சொல்லிடுவானா ? இந்த பக்கி என சிரித்துக் கொண்டே போகிறாள் "னி"..

****

சரி... சொல்லுங்க ஷார் !! என்னாச்சு உங்களுக்கு ...

பையில்  இருந்து ஒரு பேப்பரை எடுத்து அவள் முன் நீட்டுகிறான்..

எட்டாய் மடித்து வைத்திருந்த பேப்பரை விரித்து பார்க்கிறாள் ... கோபம் !! உச்சிக்கு ஏறி என்னடா இது ? ஒன்றுமே இல்ல .. வெறும் பேப்பரா இருக்கு ..

அவன் குடுத்தான் ! அதுல  அவனால எழுத முடியலனு ... ஏன்ட  சொல்லி அனுப்பிருக்கான் !! " ஷ்" மெளனத்தை உடைத்து பேச முயல்கிறான் ..

யாரு அவன் ? என்ன சொன்னான் ??

அவனா ??? அவன் ...அவன் ...

அடேய் !! சீக்கிரம் சொல்லு !! பசிக்குது எனக்கு ...

அவன் வேற யாரும் இல்ல .. எங்க வீட்டு மெயின்  கதவை ஒட்டுன மாதிரி ஒரு ரோஜா செடி இருக்கும் ல .... அதுல பூக்குற ரோஜா பூ ( மஞ்சள் நிறம் ) ...

பூ வா ?? அதுக்கு என்ன ...

அது உன்ன ரொம்ப காதலிக்குதாம் .. அது சொல்லுது , அந்த பகுதியிலேயே அதுதான் மஞ்சள் நிறமா ? மற்றதைக் காட்டிலும் வித்தியாசமாக இருக்குமா. அதனாலே , எல்லோருக்கும் என் மேல ஒரு கண்ணு !! நான் ? நீ ? னு போட்டி போடுவாங்க ..என்ன பறிக்க ..

ஆனா.. நீ தான் அத கண்டுக்கொள்ளவே மாட்டேன்குறனு ரொம்ப பீல் பண்ணுது .. அதுக்கு உன் கூட சேர்ந்து இருக்கணும்னு ரொம்ப ஆசையாம் ..ஏன் ? உனக்கு அது பிடிக்கலையா ..

யாரு சொன்னா ?? அந்த மஞ்ச ரோஜா தான .. அது தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் .. நான் தினமும் வருவதே அத பார்க்கத் தான் ..என்ன ? எனக்கு பிடிச்சது இங்க எல்லோருக்கும் பிடிக்குது ..அதான், அது மேல கொஞ்சம் பொறாமை ..கண்டுக்கொள்ள மாட்டேன் .ஆனா,அத ஒரக் கண்ணால பார்ப்பேன் ..ரொம்ப அழகா இருக்கும் !!
அதுட போய் சொல்லு அவளுக்கு உன்ன ரொம்ப பிடிக்குமாம்னு..

நெஜமாத் தான் சொல்றீயா .."னோ" ..அப்புறம்,
அதோட காதல்வலியை வெளிபடுத்துகிற மாதிரி ஒரு விஷயம் சொன்னது !! சொல்லவா ??

சொல்லுடா !!

அந்த பூ சொல்லுது ..

அவளால் ..
பறிக்கப்பட்டு ..
அவளின் கூந்தலில் ஒய்யாரமாய் அமர்ந்த
பூவல்ல நான் !!

அவளால் ...
மறுக்கப்பட்டு ..
தற்கொலை என்கிற பெயரில் தானாக உதிர்ந்த
பூ நான் !!

அவளின் கூந்தலில் அமர்ந்த பூ வின் மணம் வாடியதை உணர்ந்த அவளுக்கு !!

தானாக உதிர்ந்து அவள் காலடிக்கு மெத்தையாகிய
எனது மனம் ஊசலாடுவது அவளுக்கு தெரியாமல் போனது ஏனோ ??

டேய் ...."ஷ்" ..என்ன அவ்வளவு லவ் பண்ணுதா ? அந்த பூ ..சரி..நாளைக்கு அத எங்க வீட்டுக்கு கொண்டு போய்டுறேன் .. இனிமே எப்பவும் அது என் கூட இருக்கும் ..கவலைப்பட வேண்டாம்னு , அதுட சொல்லு !!

சரி.."னோ" ..ஆனா,???

என்னடா ...திரும்ப...

இல்ல..அது இன்னொரு விஷயம் கடைசியா சொல்லுச்சு ..அதான்,எப்படி சொல்லனு தெரியாம.?

சொல்லுடா ...எதுனாலும்...இப்ப நீ சொல்றீயா ?? இல்ல நானே , அதுட கேட்கிறேன் ..விடு..

இரு ..நானே சொல்றேன்..அது சொல்லுது! உன்கூட அது சேர்ந்து வாழனுமா ? தினமும் காலையில உன் கூந்தலில் குடி புகுந்து ..மாலையில் குப்பைத் தொட்டிக்கு போகிற வாழ்க்கை அதுக்கு வேண்டாமா ? அதுவும் இல்லாமல் சில காலங்களில் அது பூக்கவே பூக்கதாம்..

உன் கூட எப்பவும் சேர்ந்து வாழனும்னா ?? அது மனிதனாக பிறவி எடுக்க வேண்டும் .இல்லையேல், நீ அதே செடியில் ஒரு பூ வாக உருவாக வேண்டும் .. இதுல ஏதாவது நடக்க எத்தனை ஜென்மம் வேண்டும் என தெரியவில்லை ..அதனாலே , எனக்கு பதிலா நீ ("ஷ்") கல்யாணம் பண்ணிக்கோ ..என்ன மாதிரி, அவள  நீ சந்தோஷமா பார்த்துக் கொள்வாய் ..அதாவது , நான்...உன்ன கல்யாணம் பண்ணிக்க வேண்டும் என சொல்லுது ..என்ன பண்ண ???

( அருகில் அமர்ந்தவள் ..எழுந்து நிற்கிறாள் )

கையை இறுகப் பிடித்துக் கொண்ட "ஷ்" ..எங்கப் போற..அந்த பூ வுக்கு ஒரு பதில் சொல்லிட்டு போ ..

அவள் முகம் இப்போது இவனை திரும்பி பார்க்கிறது .. கண்களின் ஓரத்தில் கண்ணீர் துளிகள் .அந்த பூ க்கு இப்ப தான் அப்படி சொல்லத் தோணுச்சா ??

இல்ல !! இப்ப தான் அதுக்கு தைரியம் வந்துச்சு !! சொல்லிடுச்சு ..ஆமா ? அழுகுறீயா ??

நானா ? நான், ஏன் அழப்போறேன் நீ இருக்கும் போது .. அவனது இறுகிய கைப்பிடியை கண்ணருகே வைத்துக் கொண்டு , பெரு மூச்சு விடுகிறாள் ..

ஏய் ! லூசு..என்னாச்சு ..சரி திரும்பு ..தான் மறைத்து வைத்திருந்த அந்த மஞ்சள் நிற பூவை அவள் தலையில் வைத்து அதை அவள் சூடிய அழகை பார்த்து விட்டு .. தோல்கள் உரச  ,கைப்பிடி இன்னும் இறுக அணைத்துக் கொண்டு முன்னே செல்கிறார்கள் ..

ஒரு பூ வின் காதல் ஜெயித்தது ...அட !! ஒரு நிமிஷம் ...சொல்ல மறந்துட்டேன் .. "ஷ்" அம்மா இன்னிக்கு காலையில "னோ" தலையில மல்லி பூ வச்சதுல ...அப்ப அது ..??

ஸாரி மல்லி ...


என் மனதில் "ஷ்" - பிரகாஷ்

"னோ" - வினோ "மா"-ஹேமா " னி"- ரஞ்சினி

Sunday, 4 February 2018

நினைவலைகள்

இது கதை அல்ல !
கவிதை அல்ல !!
கற்பனைகள் அல்ல !!!

என் #மெய்யான_மெய்யே

தாயின் மடியில் தவம் கிடந்த நாட்கள் துளியும் ஞாபகமில்லை ..
தகப்பன் தன்னை தோளில் சுமந்த காலங்கள் இன்னும் வியப்பின் ஆச்சரிய கேள்விக்குறி தான் ..

அந்த மனுசனுக்கும் நம்ம மேல பாசம் இருக்குது ..அதை காட்டுகிற நிலைமையில் தான் இல்லை போல் ..

ஆனால் !!

இந்த நட்புகளுடன் இருந்த மணித் துளிகள் மட்டும் ...
நினைவலைகளாக ஆர்ப்பரித்துக் கொண்டே இருக்கு ...
நீச்சல் தெரியாத காரணமோ ? என்னமோ ?
அதில் இருந்து வெளிவர முடியாமல்
தத்தளித்துக் கொண்டே இருக்கிறேன் ..

எத்தனை எத்தனை நினைவுகள் !!
அதில்,ஒன்றாவது இனி நடக்காதா ?
என தவிக்கின்ற என் இதயங்கள் !!

****

என் எச்சியை ...
தாயை தவிர எவரும் ...
இவ்வளவு ரசித்திருக்க முடியாது !!
என்றிருந்தவனுக்கு செருப்படி கொடுத்தது
அந்த நட்புகளின் எச்சிகள் ...

அப்பன் வைத்த பெயரை மாற்றி ..
பட்டப் பெயர் வைத்தோம் !!
நமக்கு நாமே
கூப்பிட்டு பார்த்தால் கூட ...
அந்த பெயர் தான் நம்மை வசீகரிக்கிறது ..

பெரும்பாலும் ..
அந்தரங்க வார்த்தைகள் தான் எங்களை சூழ்ந்திருக்கும் !!
அது ஆகாயத்தையே சீண்டுமளவிற்கு
அனல் பறக்கும் ..

*****

இடையில் எப்போதாவது ..
முட்டிக் கொள்வோம் ..
மோதிக் கொள்வோம் ..
சட்டையே பிடித்துக் கொள்வோம் ..

ஆனால், கொஞ்ச நாளிலேயே !!
சின்னம்மா பாணியில் ..

ஒருவரையொருவர் ;
பார்த்துக் கொண்டும் ..
பேசிக் கொண்டும் ..
பல்லை இளித்துக் கொண்டும் ..
கை கோர்ப்போம் !!

என் உடன்பிறப்புக்கே ..
அனுமதியில்லை நான் பயன்படுத்துவதை
அவன் உபயோகிக்க !!

இவனுக்கு மட்டும் எப்படி கொடுத்தேன்
இவ்வளவு சுதந்திரத்தை ..
#சர்வமும்_தாராளமயம்
ஆனால், நட்புகளுக்குள் சொல்லப்படாமல்
ஒர் உடன்படிக்கை இருந்தது ..
வேறு என்னவாக இருக்கப் போகிறது ..
அந்த உள்ளாடையின் பயன்பாட்டை தவிர

****

நட்புகளின் அழுகையை வேடிக்கை பார்த்தது எல்லாம் ..
தந்தைகளின் மரணத்தில் தான் ...
அந்த வலிகளிலிருந்து
முதலில் நான் மீள வேண்டுமே ..
அப்புறம் தானே நண்பனை அழாதே என ஆறுதல் கூற முடியும் ..

வகுப்பறையில் அவர் !! (ஆசான் )
(எல்லாரையும் குறிப்பிடவில்லை )

பாடம் நடத்துவது போல் படம் காட்டுவார் ..
இங்கே கடைசி பலகையிலும்
படம் காட்டப்படும் .. இலவசம் தான் !!
ஆங்கில நாயகியின் ஆடையில்லா ஆட்டங்கள் ...
அவளின் முனகல் ஒலி கூட
Mute செய்யப்பட்டிருக்கும் ... என்பது வேற விஷயம் !!

நேரங்காலம் அறியாது
சாப்பிடுவோம் ....
கைவைக்காத டிபன் பாக்‌ஸ் இல்லை ..

வகுப்பு நேரத்தில் ..
கல்லமிட்டாயை கூட கடுகு போல தான் கடிப்போம் ..
சப்பாத்தியை கூட இட்லி போலத்தான் முழுங்குவோம் ..

(வெயிட் ..சிரிப்பு வருது ..அவனும் சிரித்திருப்பான் ..)

பசியில்லை என்றாலும் ..ருசிக்காகவே தின்ற நாட்கள் அது ...
இப்போது எல்லாம் !!
பசியும் இல்லை .. திங்கிற தீவணங்களில் ருசியும் இல்லை ..

******

தலையனை வேண்டாம் ..
தாய்மடி வேண்டாம் ...
அவன் உடல் மேனியும் ..
யானை வயிறு தொந்தியும் போதும் ..
துயில் கொள்ள ..

தினம் ஒரு நட்பு கிடைக்கத்தான் செய்கிறது ..
ஆனால், எதுவும் நான் தொலைத்த நட்புகளின் அருகில் கூட வராமல் தொலைவிலே நிற்கிறது ..

****

எனக்கு காதலி இல்லை ..
இப்படி எழுதிப் புலம்பிக் கொண்டே இருப்பதால் வரப்போகிற மனைவியும் நீடித்திருக்க வாய்ப்பில்லை ..
அந்த நட்பின் நினைவுகள் போதும் ..

எவ்வளவு சுகமான நினைவுகளாக இருப்பினும் ..
நினைத்துப் பார்த்தால் ..
மனதில் கனத்தையும் ..
விழி ஓரத்தில் கண்ணீரையும் தான் தருகிறது !!

எத்தனை எத்தனை நினைவுகள் !!
அதில்,ஒன்றாவது இனி நடக்காதா ?
என தவிக்கின்ற என் இதயங்கள் !!

தொடரும் என் நினைவலைகள் ..

Thursday, 25 January 2018

வெற்றியா ? தோல்வியா ?

எதில் எல்லாம் நீ தோல்வி அடைவேன் என எண்ணுகிறாயோ ? அதை நோக்கி நீ ஓடு !!

ஓடுகிறாயா ? பற்றாது வேகம் !!
இன்னும் வேகமாக ஓடு !!

கொஞ்சம் திரும்பி பார் .. நீ தாண்டி வந்த தோல்விகள் எல்லாம்  வெற்றியை தாங்கிக் கொண்டு வலம் வருகின்றன .. அந்த வெற்றி உன்னை நெருங்கிவிடாமல் பார்த்துக் கொள் !! ஏனென்றால் ,அதை தக்க வைக்க முடியாது ... 

அப்போது வெற்றியை எப்போது தான் அணுபவிப்பது ? என்கிறாயா ?

ஓடி ஓடி ...களைப்பாறும் இடைவெளியில் அந்த வெற்றியை ருசித்துக் கொள் .. மறந்துவிடாதே .. திரும்பவும் ஓட வேண்டும் என்பதே .

எப்போதும் ,வெற்றியும் ...புகழின் கொம்பானியிலும் தான் அமர்வேன் என்றால் இரு ... வாழ்க்கையில் வென்று விட்டேன் ,என  மார்த்தட்டிக் கொள் ..

ஆனால்,நினைவில் கொள் ..
உன்னுயிர் மண்ணடி சேரும் போது அந்த வாழ்வு தான் உன்னை வென்றிருக்கிறது என உனக்கு புரியும் ..

#RUN_TO_FAILS

Sunday, 31 December 2017

இந்த புத்தாண்டு 2k18

உலகமே இன்றைய நாளை தான் புத்தாண்டாக கொண்டாடுகிறது..அப்புறம் ஏன் ஆங்கில புத்தாண்டு என பெயர் சூட்டிக் கொண்டு ..உலக புத்தாண்டாகவே வரவேற்போம் ..

ஏய் நூற்றாண்டே ??
இன்னும் எத்தனை ஆண்டை
கடக்கப் போகிறாய்..
ஓர் நூற்றாண்டு கூட
வாழ முடியாத மனித இனம் நான் ..!

மேலும் ! மேலும் !
வஞ்சித்து விடாதே .
இல்லையேல்..
வெறுத்து விடுவேன் கடந்த ஆண்டுகளை போல் !!

சென்ற ஆண்டின் ..
அதான் ! நேற்றைய நாளின் (டிசம் -31)
இருள் சூடிய வேளையில்
முகம் காட்டிய சந்திரனிடம்..
தூது உரையுங்கள்..

நீ அடுத்த ஆண்டில்
பிரகாசித்துக் கொண்டிருக்கிறாய் என..

என் வீட்டு முற்றத்தில் உள்ள
குட்டி குட்டி தவளைகளுக்கும் !
காய்க்காத தென்னை மரத்திற்கும் !!
எப்போதும் அந்த..
பல்பு வெளிச்சத்திலும் !
ஐன்னல் ஒரத்திற்கும் இடையே !!
தஞ்சம் புகுந்த பல்லிகளுக்கும் சொல்லியாச்சு ...
#happy_new_year என

அய்யோ !!..
அந்த மொட்டை மாடிக்கும்..
அங்கு ,நான் பார்க்கும் ..
வானத்திற்கும்..
சொல்ல மறந்திட்டேனே ..!!
பரவாயில்லை /
கோபித்துக் கொள்ள மாட்டாள் ..
அவளைப் போல ****

எல்லா நாளும்..
ஒரு நாளே ..என
தூங்குபவர்களுக்கும் புதிய ஆண்டின்
செய்தி சொல்ல..
விண்ணை பிளக்கிறது வெடிச்சத்தம் ..
கூடவே :: சீறி பாய்கிறது
150/180/220 சிசி ,புல்லட் ரக
மோட்டார்கள் ..அதுவும்
அந்த கரகர ஹார்ன் ஒலியுடன்..

அடேங்கப்பா ..
அந்த பேக்கரி கடைக்காரனிடம்
எவ்வளவு கூட்டம் ..!!
இவ்வளவு நாள்
காட்சிப் பொருளாய் ..அந்த
கண்ணாடி குடுவையை
அலங்கரித்த கேக்கை விற்றுத் தீர்த்துவிட்டான் ,ஒட்டு மொத்தமாக...
பரவாயில்லை..வித்தை தெரிந்தவன் தான் !!

ஸ்ப்பா ..ஸ்ப்பா...
குயி..குயி.குயி..குயி..
போலிஸ் ஜீப்பின் சத்தம் ..
சட்டம் தன் கடமையை செய்யும் போல்..!!

இந்தப் பக்கம் ..
ஏதோ ..ஆம்புலன்ஸ் சத்தம் ..
தன் உயிரை மாய்த்துக் கொள்ள
தானே காரணமாக இருப்பவன்
இந்த மனித இனம் மட்டும் தான்..!!

**

அந்த தார் ரோட்டு சாலைக்கும் ,
தெரு விளக்குகளுக்கும் ...
புதிய ஆண்டின் வருகையை
தெரியபடுத்த வந்துவிட்டாள் ..
எதிர் வீட்டு தேவதை !!

தண்ணீர் தெளித்து ,
கோலம் இட்டு ..
கலர் தூவி..
தன் கைபட happy new year 2018
என்றும் எழுதியாச்சு
இருந்தும் முற்று பெறவில்லை !
மன திருப்தியும் இல்லை !!

இவள் கோலம் போடும் வரை ..
இந்த தேவதையின் தேவதையாம்..
தகப்பனின் மார்ப்பில் சாய்ந்து
வேடிக்கை பார்த்தவளே..
கீழ் இறக்கி !
கோலப் பொடி அள்ளி
ஆண்டின் தொடக்கத்திலேயே..
அதற்கு முற்றுப்புள்ளி ஒன்றும் வைத்தாயிற்று ..
அந்த பிஞ்சு விரல்களால் !!

ஏய் நூற்றாண்டே  !!
உன் வேகத்திற்கு
எங்களால் ஈடு கொடுக்க முடியாது ..
அதனால் , பொறுத்துச் செல்..
சபித்து விடாதே //
இல்லையேல் !!
வெறுத்து விடுவேன் வழக்கம் போல்
இந்த ஆண்டையும் ..

Thursday, 14 December 2017

தொலைந்து போன நட்புகள் !!

கலகலவென இருந்த அறைகள்
இப்போது கல்லறை போல் ...
ஓர் மாயான அமைதி !!

ஆட்கள் இல்லாத வீட்டில் ..
எனக்கு மட்டும் என்ன வேலை ?
என, அந்த கொசுவிற்கு கூட கிராக்கி வந்துவிட்டது ...

***

ஸ்டார் டிவி, சூரிய டிவி ...
என..அலறும் சத்தம்
கேட்ட வீடு ...
இப்போது ! எல்லாம்
மெதுவாய் சுத்தும் அந்த
மின்விசிறியின்
கரகர ஒலி மட்டும் தான் ...

இன்னும் கொஞ்ச நாள் போனால் ..
அந்த கடிகாரத்தின்
நொடி முள் சத்தம் கூட ,இந்த
வீட்டை முழுவதுமாக
ஆக்கிரமித்து விடும் போல் ...

ஒரு நிமிஷம் ..
யாரோ ?
கூப்பிடுவது போல் இருக்கிறது ..

அட ச்சே !!
வேறு யாரும் இல்ல ..
என் பெயரை நானே மனதுக்குள் உச்சரித்து இருக்கிறேன் ..
இது தான் மனப் பிரம்மையோ ?

****

அழுக்குத்  துணிகளால்..
அலங்கரிக்கப்பட்ட
ஐன்னல் , வாசல் கதவு ,
அப்புறம் அந்த கொடி ..
எதையும் காணும் இப்போ !!

கறை பொதிந்திருந்த
கேஸ் ஸ்டவ் உள்ள அடுப்பங்கறை ..
டப்பா டப்பா வா //
அடுக்கி வைத்திருந்த அலமாரிகள் ..
குக்கரின் விசில் சத்தம் !
என்றாவது ஒரு நாள்
கமகமக்கும் நண்பனின் சாம்பார் ..
இதையும் காணும் இப்போ !!

முந்தி எல்லாம் ..
நான் மட்டும் அமைதியாக.. தனியாக
இருந்தேன் !

இப்போது ..
என்னைப் பின்பற்றி ..
எனக்கு துணையாக இன்னும்
சில உயிரில்லாப் பொருட்கள் ..

*****

பைத்தியகாரனாக இருக்கும் போல..
அந்த சிலந்தி !!
எந்தன் வீட்டை நான்
இன்னும் காலி செய்யவில்லை ..

அதற்குள் ,
அவன் வீடு கட்ட ஆரம்பித்துவிட்டான்
மூலைக்கு மூலை ..

இங்கு !
சில பிரிவுகள்
பொதுவானது தான் ..
ஆனால்,அவையெல்லாம் !!
நியாயமானது என்று சொல்ல முடியாது ..

தினமும் ..
பார்த்துக் கொண்டும்..
கைக் கோர்த்து கொண்டும்..
திரிந்த உறவுகள் !!

இனி !!
என்றாவது பார்க்கலாம் என...
கை குலுக்கி விட்டு வெகுதூரம் செல்கிறது..

*****

ஒரு நாள்..
நானும் இந்த வீட்டை விட்டு
போகத் தான் போகிறேன் ..
ஆனால் !
என் வாழ்வில் சில நாட்கள்
இங்குதான் என..
என் முதுமை இந்த நினைவுகளை
அசைபோட தயாராக இருக்கிறது !!

இங்கு ..
என்னை சுற்றி எல்லாமே இருக்கின்றது..
ஆனால் !
எனக்காக தான் என்று எதுவுமில்லை ..
இது தான் இன்னும் இன்னும்
நிறைய யோசிக்க வைக்கின்றது !!

                           
                           ********

Saturday, 2 December 2017

** MY மனசு WHAT SAYING **

** மனக்குமுறல் **



பொதுத் தேர்வில் அதிக கட் ஆப் மதிப்பெண் எடுத்தும்,அரசாங்கத்தின் சாதி  பிரிவுகளுக்கான இட ஒதுக்கீட்டின் படி நல்ல காலேஜில்  
(அரசு மற்றும் சில புகழ் ஓங்கிய தனியார் கல்லூரிகளில் )
இன்ஜீனியரிங்க் படித்தாலும் சரி....
மீதம் உள்ள கல்லூரிகளில் இன்ஜினியரிங் படித்த மாணவர்களாக இருப்பினும் சரி ...
இவர்களை நான் தரம் பிரித்து..
***
உங்களுக்கு வேலை கிடைப்பதே அரிது.. இங்க ..contract என உருவாகும் வரை என்னைப் போன்ற 85%  இன்ஜினியரிங் மாணவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் நல்ல வேலை கிடைத்தது ..அது என்ன என்னைப் போன்றவா ? முழுசா படிங்க அப்ப புரியும் ...
Conract guyz உடல் நோகாமல் சம்பாதிக்கும் வித்தையே இவர்கள் எப்போது கண்டறிந்தார்களோ ! அப்ப ஆரம்பித்தது இந்த பிரச்சனை ! இன்ஜூனியரிங்க் படிச்சா வேலை இல்லையென்று ..
நீ எந்த கல்லூரியில் படித்தாலும் சரி..உனக்கான ஊதியம் (most of all )
₹ 8000 .. இதுல எல்லா நாளும் வேலைக்கு வந்தால் ₹500 சிறப்பு ஊக்கத் தொகை ..
(அட த்தூ..  ****   sorry .வாய்ல கொசு போய்டுச்சு )..
கொசு செத்துடுச்சு..சரி..நம்ம கதைக்கு வருவோம்..அந்த ₹ 8000 வாங்குறதுக்கு நீங்க எதையெல்லாம் அடகு வைக்கனும்னு சொல்ல விரும்பவில்லை !!
இல்ல..நான் இன்ஜினியர் எனக்கு ஐந்து இலக்க சம்பளம் (likely 10k to 15k ) வேண்டும் என்றால் அதற்கும் வழி வைத்திருக்கிறார்கள் இந்த contract guyz. என்ன 12 மணி நேர வேலை ...இதில் வேலை மட்டுமே 12 மணிநேரம் ..நீங்க வேலைக்கு கிளம்புறது,சாப்பிடுறது,திரும்ப வீட்டுக்கு வர ..எப்படி பார்த்தாலும் ஒருநாளில் 15 மணி நேரத்தை இவர்களுக்கே செலவிட நேரிடும்..
இது என்னடா வாழ்க்கைனு சொல்லி முடிக்கிறதுக்குள்ளவே அடுத்த நாள் வந்துடும் ..இதில் மற்றொரு சிறப்பு
உங்களை அந்த கம்பெனியின் நிரந்தர ஊழியர்களிடமிருந்து வேறுபடுத்தி காட்ட உங்களுக்கு டி-சார்ட் வழங்கப்படும் ..( அந்த மாதிரி கலர் சட்டை போட எல்லாம் தகுதி வேண்டும் டா )
***
இன்னொரு குரூப் இருக்கு ! பொறங்கையை நக்கிற மாதிரி.. (கொஞ்சம் சொல்ற விதம் ugly ஆக தான் இருக்கும்..but,இது என் மனக்குமுறல் தானே ..அதுக்கு தெரியாது இது எல்லாம் )
உள்ளங்கையே நக்கிறவங்க அந்த contract ல் வேலை செய்பவர்கள் ..உண்மையிலேயே நக்கிற அளவுக்கு எதுவும் இருக்காது அவர்களிடத்தில்...அது வேற விஷயம் !
இந்த பொறங்கைனு சொன்னது நம்ம (reference guys ) தான்...நம்ம கூட தான் குப்பை கொட்டிருப்பான் ..ஆனா, ஏதோ சொல்ற அளவுக்கு நல்ல வேலைல இருப்பான் ..பொறாமை எல்லாம் இல்லை ..ஆனா, கொஞ்சம் வயிறு எரிய தான் செய்யுது..
உடனே ..இந்த கூட்டம் பொங்கி எழும் ... ஏன் ? உனக்கு reference இருந்தா போகமாட்டியா என்று...கண்டிப்பா பொறங்கையை நக்கிற அளவுக்கு எனக்கு மாமனோ,மச்சானோ இருந்தா ?? ஆனா, இல்லையே...
இந்த இரண்டு வகையிலும் இல்லாத ஒரு குரூப் இருக்கு ! இன்ஜினியரிங் படிச்சிட்டு அத்தனை அரசாங்க உத்தியோகத்துக்கும் தேர்வு எழுதுவான் ..இதில் சிறப்பு என்னவென்றால் ! அந்த தேர்விற்கு தகுதி +2 தான் ...இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் !! அதிலும் பாஸ் பண்ண மாட்டான் ..இதுல இன்னும் கொஞ்ச பேர் , மச்சான் உன் கம்பெனியில வேலை இருக்கா ? அங்க இருக்கானு ? கடைசி வரைக்கும் கேட்டுகிட்டே இருக்கும் ...அப்படியே ஒரு கம்பெனியில சேர்ந்தா  கூட இரண்டு ,மூனு மாசம் தான் ...
பசங்க தான் இப்படியென்றால் ! பெண் இன்ஜினியர்கள் பேங்க் தேர்வு ... ஷோ ரூம் வரவேற்பாளர்கள் (receptionist) ..இன்னும் கொஞ்சம் கல்யாணம் பண்ணிடும் ...இன்னும் கொஞ்சம் பேர் வீட்ல உட்கார்ந்து நல்லா சீரியல் பார்க்கும் ...இதுல இன்னும் கொஞ்சம் தான் அவளுடைய கனவை நிறைவேற்ற சீறிட்டு இந்த உலகில் தடம் பதிக்கும் !!
நான் இறுதியாக சொல்ல விரும்புவது எல்லாம் ...எங்களை கை நீட்டி நீ இன்ஜினியரிங் ஒழுங்க படிக்கலனு ...நீங்க சொல்லகூடாது ..அதை கேட்கும் தகுதி உங்களுக்கு இல்ல !! உன் கணக்கு படி தேர்வில் தேர்ச்சி பெற்றால் u r an engineer..
Yaaa! Of course i am an engineer ..with first class...
எங்களது உழைப்பை , உரிமையே,உணர்வை,கனவை,இன்னும் சொல்லப் போனால் எங்களது இளமையையும்  பறித்துக் கொள்கிறாய் ...
உழைப்புக்கேற்ற ஊதியம் தா என்று சொல்லவில்லை ! எங்கள் உழைப்பிற்கு கொஞ்சமாவது மரியாதை தா என்று தான் கேட்கிறோம் ...
All the above words are
"My மனசு what saying "
----- an Engineering------

Friday, 17 November 2017

மாய தாரகை ...

           *** மாய தாரகை ***

மாய தாரகையே ...
நீ !
யாருடைய மங்கையே ?

உந்தன் விழிக்காகவே ...
பிரம்மனின் உழிகள் !
நிறைய மெனக்கெட்டு உள்ளது போல் ?

ஏனடி நீயும் ...
இது என்ன நியாயம் ?
எந்தன் விழியில் ..
இப்போது ... உந்தன் விழி .!!

******



இருண்டு போன வானத்தில் ..
வெள்ளை நிலா ..கண்டேன் இதுவரை !
இது என்னடி மாயம் ..
நான் செய்த யோகம் !!
வெள்ளை நிற படலத்தில் ..
கருப்பு நிலா ஒன்று !
அதுவும் ..
அங்கும் இங்கும் என சுழன்றுக்கொண்டு .!!
 
****
இரண்டு சிறைகளை (2 eyes) மட்டும்..
வைத்துக்கொண்டு !
இன்னும் எத்தனை பேரை அடைக்க ..
காத்து இருக்கிறாய் !!
என்ன குற்றம் செய்ய வேண்டும் ..
அந்த சிறையில் நானும் அடைபட !!!
.
.
.
ஆமாம் ..! அது என்ன சிகப்பு சிக்னல் ?
                              ( சிகப்பு பொட்டு )
தெரிந்துதான் வைத்துள்ளாயா ?
என்னாலும்  இந்த சிக்னலை சட்டென்று கடக்க முடியவில்லை ..
விதியே மீறி செல்லவும் விருப்பமில்லை !
 
****

ஆயிரம் கண்களை கடந்து இருப்பேன் !
இப்போது தான் காண்கிறேன் ..
முதல் கண்ணை ( likes an gun )
என் முன்னே !
அந்த கண் (gun ) ...துளைத்து விடுகிறது
எளிதாக ...
இறுகிப்போன என் கல் மனதையும் !
 
****

என்னை !
இந்த உலகத்தை மறக்க செய்துவிட்டு ..
உன் முகத்தை ஏனடி மறைக்கிறாய் ?
ஆடையினால் ...
என்னடி நீயும் !
இது என்ன நியாயம் ?
மாய தாரகையே !
நீ ...
யாருடைய மங்கையே ?


                                         

Sunday, 12 November 2017

கர்வம் அழிந்ததடி - 2 ! (A BOY WAITING FOR U )






இமை மூடியும்  வருகிறாய் ..
கனவிலே யுத்தம் செய்கிறாய் !
தினந்தோறும் ..
ஏனடி என்னை கொல்கிறாய் !!


நீ நீயாக இருந்தபோது ...
காதல் செய்தேன் !
நீயே இப்போது இல்லையென்றால் ...
நானும் என்ன செய்வேன் ..
............ எங்கே போவேன் !!



உன் அழுகை வந்தாலே..
நான் துடைப்பேனடி !
என் அழுகைக்கு காரணம்..
நீ என்பதையும் மறந்தேனடி !!



நான் கேட்கும் இசையெல்லாம் ..
ஒரே கீதம் !
அன்று..நீ சொன்ன வார்த்தை மட்டும் ..
என் கனவு தேசத்திற்கு தேசிய கீதம் !!



மழையாக நீ என்னை ..
நனைக்க வந்தாய் !
அணை கட்டி காக்கும் முன்பே..
விலகி சென்றாய் !!



சிறகு உடைந்த பறவையாக ..
நானும் இப்போ ...
.
.
உன்னருகே !!
பறந்திட போவது எப்போ ??



உன் கரம் கோர்த்து ...
நானும் !
நெடுந்தூரம் நடக்க வேணுமடி ...
.
.
கனவிலும் இது நடக்காது என்றால் ..
மனதினில் !
என்ன என்னமோ செய்ய தோணுதடி ...




எப்படி சொல்லிடுவேன் ..
என் வலியினை வார்த்தைகளால் !
உனக்கும் வேண்டாமடி இது ..
.
.
கடவுளிடம் கேட்டுகொள்கிறேன் ..
என் பிரார்தனைகளால் !!



நீ தந்த நினைவுகளை போதுமடி ..
என் வாழ்வின் மீதமும் ஏதோ போகுதடி ...
..
மொத்தத்தில் நான் கொண்ட ..
கர்வம் அழிந்ததடி !!
..
..
இப்போதாவது ..பெண்ணே ..
என் காதல் உனக்கு புரிந்ததா...டி ??

Monday, 30 October 2017

"மழையும் ! இவர்களும் ! "

அரை மணி நேரமாக மழையே வேடிக்கை பார்த்த நான்...என்னைப் போல் மற்றவர்கள் இதை நேரத்தில் என்ன செய்வார்கள் ...என்று எண்ணி..
       
              "மழையும் ! இவர்களும்! "

** பயிர் இடுவதற்காக நிலத்தை உழுது கொண்டிருந்த உழவன் ..முதல் மழைத்துளி அவன் வேர்வை படிந்த மார்பில் விழுந்த கணம் ...தலையில் இருந்த துண்டை கழற்றி..வானத்தை பார்த்து கை எடுத்து கும்பிட்டு..மண்ணை பூசிக் கொள்ளலாம்..நெற்றியில் !

** கடலுக்கு மீன் பிடிக்க சென்ற கணவன் பத்திரமாக கரைக்கு வர வேண்டும் என தன் கழுத்தில் தொங்கும் மஞ்சள் நிற தாலி கயிற்றை கண்ணில் வைத்து இறைவனை வேண்டலாம் ..

** மழையில் நனைந்து விட்ட விறகுகட்டையே அடுப்பிற்குள் திணித்து அதை பற்ற வைக்க தன் பாதி உயிரை கொடுத்து ஊதி கொண்டிருக்கலாம் அந்த கிளவி ...

** ஐடி தொழில்நுட்பத்தில் வேலை பார்க்கும் பெண் ஒருத்தி கையில் தேநீர் கோப்பையுடன் அந்த கண்ணாடி மாளிகையிலிருந்து வேடிக்கை பார்க்கலாம்...

** ஆற்றின் ஓரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை அறிவிக்கப்படலாம்..

** கையில் பிடிக்க முடியாத அளவுக்கு பிஸியாக இருக்கும் நடிகையின் கால்சீட் பெற்று படப்பிடப்பு நடந்துகொண்டிருக்கும் போது ..மழையின் குறுக்கீட்டால் பேக் அப் என டைரக்டர் கத்த ..வேறு வழி இல்லாமல் தயாரிப்பாளர் கவலையடையலாம்..

** டேய்...நம்ம மாவட்டத்துக்கு இன்னிக்கு ஸ்கூல் லீவு டா ...என மகிழ்ச்சியில் பள்ளி மாணவன் துள்ளி குதிக்கலாம்...

** என்னடா ...? நம்ம மாவட்டத்துக்கு லீவு இல்ல என நண்பன் கவலையடைய...இந்த செய்தி வாசிக்கிற ஆளு சரியில்லடா...இவருக்கு முன்னாடி இருந்த ரமணன் லீவு விட்டுட்டு தான் மழை வருமா ? வராதானே? சொல்லுவாரு..என அவனை தேற்றிக் கொண்டிருக்கலாம்....

** மர குடிசையில் ஒழுகும் நீருக்காக ஒரு பாத்திரத்தை எடுத்து வைத்துக் கொண்டிருக்கும் அம்மாவை....யம்மா...அங்கேயும் ஒழுகுதுனு பிள்ளை சொல்லலாம் !

** கையேந்திபவன் கடையின் முதலாளிகள் எல்லாம்...இன்னிக்கு பொழப்பு போச்சுனு கவலையடையலாம்..

**சாதி,மத வேறுபாடு மறந்து.. மழைக்காக அத்தனை சாதியினரும் ஒரே இடத்தில் தஞ்சம் அடையலாம்...

** மின்சாரதுறை அதிகாரி..மழை வருதா ? அங்க வையர் கட் ஆயிடுச்சு..இங்க கட் ஆயிடுச்சு என போன் வருமே ..என சலித்துக் கொள்ளலாம்...

** வெளியே செல்வதற்காக...குடையே தேடி கொண்டிருக்கலாம் பெரியவர் ஒருவர்...

** குளிருக்கு இதமாக ...தலையனைக்கு அடியில் மறைத்து வைத்திருக்கும் சிகரெட்டை பாத்ரூமிற்கு கொண்டு சென்று ..வட்டம் வட்டமாக புகையிடலாம் அந்த இளைஞன்...

** மாடியில் நேற்று காய்வதற்காக போட்ட துணியே அள்ள மூச்சு வாங்க மாடி படியில் ஏறிக் கொண்டிருக்கலாம்..

** கடைக்கு சென்ற பெண் ...முழுவதுமாக
நனைந்து ..அவளது ஆடை தோலுக்கு தோலாக காட்சியளிக்க...அந்த கவர்ச்சியே சீண்டும் ஓநாய்களிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள வேகமாக வீட்டை நோக்கி நடக்கலாம்..

** மச்சான் ....செம க்ளைமேட்... பீர் அடிக்கலாம் வாடா என நண்பனை போன் போட்டு துணைக்கு ஆள் சேர்க்கலாம்....

** அமைச்சர் பெருமக்கள் எல்லாம்..போன வருடம் மாதிரி மழை பெய்து அரசுக்கு களங்கம் ஏற்படுத்திட வேண்டாம் என வருணபகவானை வணங்கி கொண்டிருக்கலாம்....

** மழையிலிருந்து தன் ஆண்ட்ராய்டு மொபைலை காப்பாற்ற பாலித்தீன் பைக்குள் சுருட்டி வைத்துக் கொண்டிருக்கலாம்...

** குடை பிடித்து நடந்து சென்று கொண்டிருக்கும் போது..எதிரே வந்த கார்.. பள்ளத்தில் சீறும் போது ...தன் சட்டையில் படிந்த சேறினால்..அந்த கார் ஓட்டியே வசை பாடலாம் ஒருவர்...

** கொட்டும் மழையிலும்..ரெயின் கோர்ட் அணிந்து தன் கடமையே ஆற்றும் டிராபிக் போலீஸ்..

** பைக்கில் சுற்றிய காதலர்கள்...மழைக்காக ஒதுங்க ..அங்க அவர்கள் தோல் உரசி ...புதியதாக முத்த மழை அங்கே பெய்யலாம்...

** வகுப்பறையில் ப்ரேக் முடித்து விட்டு வந்த மூன்றாம் வகுப்பு மாணவன்...கொஞ்சம் நேரம் கழித்து...டீச்சர்..ஒன்னுகு வருது ! என கேட்க.... தோழிகள் சிரிக்க...டீச்சர் இப்பதானாட போய்ட்டு வந்த என அரட்ட..அடக்க முடியாமல் அடக்கிக் கொண்டிருக்கலாம்...

** மழையிலிருந்து வீட்டிற்குள் சேற்றுகாலுடன் உள்ளே நுழையும் கணவன்மார்களை ,மனைவிமார்கள் வறுத்துக் கொண்டிருக்கலாம்...

** அப்பா ! ஆபீஸ் க்கு ...குடை எடுத்துட்டு போகல..பஸ் ஸ்டாப்ல வெயிட் பண்றேன்...சீக்கிரம் வாங்க என செல்ல மகள் அப்பாவிடம் போன் செய்து கொண்டிருக்கலாம்

** மழை வந்ததுமே ! இரண்டு மூன்று போர்வைகளை உடல் முழுக்க சுற்றிக்கொண்டு தூங்கும் வேலையில்லா பட்டதாரிகளும் இருக்கலாம்..

** உதவியாளரை அழைத்து, நம்ம வாத்தியார் கடையில சூடா ஒரு ரெண்டு மிளகாய் பச்சி,ஒரு கீரின் டீ வாங்கிக்கிட்டு உங்களுக்கும் ஏதாவது வாங்கிக் கொள்ளுங்கள் என தன் சட்டை பையிலிருந்து பணத்தை எடுக்கலாம் ..பேங்க் மேனேஐர்...

** கொட்டும் மழையிலும், சிக்கனலுக்காக காத்திருக்கலாம்..மெட்ரோ வாகன ஓட்டிகள்.

** பெண்ணின் சுதந்திரத்தை காட்ட ஆசைதீர மொட்டை மாடி மழையில் நனைந்து தீர்த்துக் கொண்டிருக்கலாம்..

** இன்னும்,ஏதோ ஒரு மூலையில்...நமது மனித உலக பாரம்பரியமான காகித கத்தி கப்பல் செய்து நீரில் விடலாம்...

** அடேய்...போதும்டா...என இந்த பதிவை மூடி விட்டு மழையே நீங்களும் ரசிக்க தயாராகலாம்..!