Saturday, 26 October 2019
புணர்தலும் புணர்தல் நிமித்தமும்
கல்லறைக்கு அருகில்
யாரோ ஒருவர்
முட்டாளாகிய நான்
இதே நொடி !
ஒரு துளி !
Sunday, 24 March 2019
கற்பனைகளுக்கு அப்பால் ..
#கயிதை 👼
கற்பனைகளுக்கு அப்பால் ,
அது...
மலைகளால் சூழப்பட்ட தீவு
தீவின் நுழைவு வாயிலில்
அறிவிப்பு பலகையொன்று
ஆடையையும் ,மூளையையும்
கழட்டி வைத்து உள் வருகென !
உள் நுழைந்ததும்
கண்ணெதிரே
ராமசாமி ஐயரின் மாமிச கடை
இன்றைய ஸ்பெஷல் ,
பெண்ணுறுப்பை சிதைத்த
தடித்த ஆண்குறிகள்
10 % தள்ளுபடியில்
சற்றுத் தள்ளி
இங்குள்ளவர்களின் குலதெய்வமான
ஆர்மோனியப்பெட்டியுடன் ராஜாவின்
மண்சிலையொன்று ..
தீவின் மையத்தில்
ஒரு சொட்டுக் கடல்
கடலில் கும்மாளமாய்
மூன்று மகிழ்ச்சியான பன்றிக் குட்டிகளும்
கெழட்டு ஜோடியான நரிகளும்
கடலுக்கு வலப்புறம்
நிலப்பரப்பின் நுனிப்புல்லை மேய்ந்தவாறு
சில நூறு நெத்திலி மீன்கள்
இன்னொருப்புறம்
கட்டுக்குள் அடங்காத கூட்டமொன்று
அடகு கடைக்கு முன்னால்
விசாரித்தலில் தெரிய வந்தது ,
இங்கு ..
கண்ணீரை அடகு வைத்து
கஷ்டத்தை தீர்த்துக் கொள்வார்களாம்
சில நொடிகளுக்கு
அடகு கடையின்
கண்ணாடி பேழைக்குள்
கண்ணாடி குப்பிக்களுக்குள்
சேகரிக்கப்பட்ட கண்ணீர்த் துளிகள்
ஒவ்வொரு கண்ணீர் குப்பிகளும்
ஒருவரின் மரணத்திற்காக
ஒருவரின் பிரிவிற்காக
ஏதோ காரணத்திற்காக ..
தீவின் முக்கியத் தொழில்
பகல் நேரத்தில்
அந்தரத்தில்
சிதறிக் கிடக்கும்
மக்காத குப்பைகளான நட்சத்திரங்களை
படகில் சென்று
சுத்தம் செய்வது ...
அத்தனை சாதியினரும்
இங்கு துப்புரவு தொழிலாளர்கள்
தீவில் கோலாகலமாய்
திருமண விழாவொன்று ..
சிபுவின் முயற்சியால்
காதலர்களுக்கு
நிச்சயிக்கப்பட்ட திருமணமாக
இரத்தத் திரவியங்களை
உடல் முழுக்க தெளித்துக் கொண்டும்
காலில் மாட்டிய நகக்குப்பிகளில்
சிகப்புநிற நெயில்பாலிஷ் தீட்டிய படியும்
முன்பே வாங்கி வைத்த
மோதிரத்தை
தன் ஆடைக்குள் ஒளித்து வைத்தும்
மாப்பிள்ளை மிடுக்காய்
மணமேடை ஏறுகிறது
ஆண்குருவி
இதயத்தை கேட்டவள்
தன் இதயத்தை
தரப்போகின்ற நிலையை எண்ணி ,
மணமேடை ஏறி
வெக்கப்பட்டு சிரிக்கிறது
பெண் கழுகு
தம்பதிகளுக்கு
வாழ்த்து மடலாய் ..
என் கையொப்பத்துடன் ,
" அன்பால் வடிவமைக்கப்பட்ட உலகிது,
நம்மை வெறுப்பவர்களின்
கற்பனைகளுக்கு அப்பால்
அன்பு செய்வோம் , அவர்களிடத்திலும் .."
Monday, 11 March 2019
பொள்ளாட்சி கூட்டு பாலியல் தொல்லை
Speak about pollachi_rapist
*****************
அவளின் குரலாக ...
அன்பை கொட்டி
நம்ப வைக்கலாம் ..
அறிவை தீட்டி
அறைக்கும் அழைக்கலாம்
அடங்க மறுத்தா
அத்து மீறலாம் ..
கூட்டு பயலுக
கூட்டமாய் முன் நிற்க ..
அந்த நொடியிலேயே
பாதி உயிரும் போக ..
அழுது அழுது
காலில் விழுந்து கரைந்து போனாலும் ..
அரக்க கண்களுக்கு
பெண் எல்லாம்
பொம்மை தான் ..
கத்தி கதற
தெம்பு இல்ல ..
இன்னும் கெஞ்ச
கண்ணுல தண்ணீர் இல்ல ..
கழட்டி எறிந்த ஆடையும்
கனத்து போச்சு ..
பிடியில் சிக்கிய உடம்பும்
மறத்து போச்சு ..
வெளியில் சொல்லவும்
திராணி இல்ல ..
மாண்டு போகவும்
உசிரு இல்ல ..
அதிகாரம் இருந்தால்
அடிவயித்துல எட்டி மிதிக்கலாம் ..
காமிரா இருந்தால்
கண்டபடியும் படம் பிடிக்கலாம் ..
கூட்டணி கட்சிகளெல்லாம்
முக்கியச் செய்தி ..
கூட்டுப் பலாத்காரமெல்லாம்
விரைவுச் செய்தி ..
இத்தனைக்கு பின்னும் ,
நீ ஏன் போனனு தான்
கேட்குற ..
அவனை கேள்வி கேட்க
ஏன் பயப்புடுற ?
சட்டத்தின் ஓட்டையெல்லாம்
பெண்ணின் யோனியா ..
ஆண்குறி உள்ளிருந்து
தப்பி பிழைத்தது போல்
மரண பிடியிலிருந்து
நீயும் தப்பிக்க ..
Saturday, 9 February 2019
கருப்பும் , காக்கியும் !!
#very_very_bad !! காக்கி சட்டைகளை சீண்டி பார்க்கும் கருப்பு கூட்டம் .. அதன் உந்துதலின் வெளிப்பாடு தான் இந்த பதிவு .. மொழி நடை ஒரு கானா மெட்டுக்கு ஏற்றாற் போல் 🙏
Very very bad .. Bad to the core ❤
*****
வருவ ..
மேல வருவ ..
இடம் தந்தா தான வருவ !
நிற்ப ..
எதிர்த்து நிற்ப ...
கற்றால் தான கேள்வி கேட்ப !
( பாவம் ! நெய் வாங்கவே சிரமப்படுகின்ற அந்த சமூகத்துக்கு 10% இட ஒதுக்கீடு அறிவிக்கப்படுகிறது .. இது பின்னாடி உள்ள சமூகத்தை எவ்வளவு பாதிக்கும்னு தெரிஞ்ச போராளிஸ் வழக்கம் போல , போராட வாறாங்க )
படிக்க வாறோம் நாங்க ..
கதவைத் திறங்க நீங்க ..
எங்களைத் தடுத்தா ?
ஏறி மிதிச்சா ?
எட்டி உதைச்சா ?
**தா ..
வருவேன் வருவேன் முன்னால
கருப்பர் கூட்டம் பின்னால
வழிய விடுவ தன்னால ...
(இப்படி ரைமிங்கா சொல்லும் போதே போலீஸ் லத்தி சார்ஜ் பண்றாங்க .. அப்போது , அந்த கூட்டத்திலிருந்து )
பூட்ஸ் கால
பாலிஸ் பண்ணி
தொண்டையில மிதிக்கிற ..
லத்தியை தான் உருவிக்கிட்டு
மண்டையை பொளக்குற ..
குடிசையை பற்றவைத்து
ஜெகஜோதியாய் கொளுத்துற ..
என்னனு கேட்டாக்கா ?
தேனீக் கூட்டம்னு மழுப்புற ..
கால்கடுக்க நிற்கையில
பாவமாக தெரியிற ..
காக்கியை போட்டதும்
கல்லாக மாறிடுற ...
ஹெல்மேட்டு போடலனா
**த்தா ..**ம்மா ..னு
கேட்குற ..
கர்ப்பிணியா இருந்தாலும்
விரட்டி போய் மிதிக்கிற ...
அரஸ்ட் வாரண்ட்
இருந்தாக் கூட
கொடை பிடித்து காக்குற ..
அதிகாரியாக இருந்துவிட்டால்
சல்யூட் அடிக்கிற ..
சாமானியனாக தெரிந்தால் மட்டும்
வேட்டியைத் தான் உருவுற ..
ரோட்டோரம் கடையை மிரட்டி
உண்டியலை நிரப்புற ..
சிக்னல் சிக்னலா
கடையைப் போட்டு
யாசகம் கேட்கிற ..
வேலை செய்யும் நேரத்திலேயும்
மப்புள மிதக்கிற ..
கத்துகிட்ட மொத்த வித்தையும்
என் களத்துல காட்டுற ..
( 13 புல்லட்ஸ் 👼)
காவல் தெய்வம்னு கும்பிட்டாக்கா
காவு வாங்க துடிக்கிற ..
இத்தனையும் பண்ணிபுட்டு
உங்கள் ................
......... நண்பனு சொல்ற !!
Saturday, 2 February 2019
பேரன்பும் - பாப்பாவும்
ஆசை !
ஆனால் , இந்த இயற்கை கொடூரமானது , இரக்கமற்றது , வெறுக்கத்தக்கது ..
பாப்பாவின் வயதிற்கேற்ப உடலில் ஏற்படும் மாற்றம் , உணர்வு , அவள் கண் முன் தெரியும் இந்த சமூகம் என எதுவுமே பாப்பாவை கடைசி வரைக்கும் பாப்பாவாக வைத்திருக்க முடியவில்லை ..
பாப்பா பாப்பாவாக இருப்பது எல்லாம் இந்த இயற்கை பேரன்பாக திகழும் போது மட்டுமே ..
அன்பு நிலையானது இல்லை , அதிலும் பேரன்பு சொல்லவே வேண்டாம் ..அன்புக்கும் பேரன்புக்கும் வித்தியாசம் என்பது வரிசையாய் செல்லும் எறும்புகளுள் ஒன்றுக்கும் மற்றொன்றுக்கும் இடைப்பட்ட இடைவெளி தான் ..
அன்பு - காட்டப்படும்
பேரன்பு - ஏற்றுகொள்ளப்படும்
பேரன்பு எதன் மீது வேண்டுமானாலும் இருக்கலாம் .. அது உயிருள்ள ஜீவனாகவும் இருக்கலாம் ,உயிரற்ற தன்னமையுடையதாகவும் இருக்கலாம் .. பாப்பாவை அப்படியே ஏற்றுக்கொள்ள கூடிய பேரன்பு இங்கு சொற்பமே .. அப்படி ஏற்றுக்கொண்ட உள்ளங்களுக்கு எற்படுகின்ற அவஸ்தைகளை சொல்கின்ற படமாக தான் பேரன்புவை நான் பார்க்கிறான் ..
ஒரு சில படங்களை பார்க்கும் போது நமக்கு தோன்றும் , நம்ம பேச தயங்குகிற விஷயங்களை வெளிப்படையாய் சொல்லிருக்காங்க யென: ஆனால், பேரன்பு இதற்கு ஒரு படி மேலேறி ..
நம்ம யோசிக்கவே மறந்த பல விஷயங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து காட்டிருக்காங்க .. படம் எடுத்த விதத்திற்காகவும் ,எண்ணத்திற்காகவும் இரண்டு மூன்று விருதுகளை கொடுத்துவிட்டு ஒரு சில தினங்களில் பொட்டிக்குள் அடைத்து விடாமல் ..
அந்த குருவியை போல சுதந்திரமாக பறக்கட்டும் சில மாதங்கள் யென !
பாப்பாவை போலத் தான் இங்கு பலரும் காத்துக் கொண்டு இருக்கிறார்கள் , அந்த பேரன்பிற்காக ..
என்னை அப்படியே ஏற்றுக்கொள்ள கூடிய பேரன்பிற்காக நானும் காத்திருக்கிறேன் . அந்த ஆழ்கடலில் தான் பேரன்பு கிடைக்குமென்றால் அங்கு செல்லவும் தயாராக தான் இருக்கிறேன் .. ❤❤
Monday, 7 January 2019
கதையாடல் - சிகப்புரோஜாக்கள்
#சிகப்புரோஜாக்கள்
பூத்துக் குலுங்குவதெல்லாம்
ரோஜாக்கள் யல்ல ..
ரோஜாக்களாக இருப்பனயாவும்
சிகப்பு ரோஜாக்கள் யல்ல ..
இவன் விழிகளுக்கு
குண்டு மல்லியாகியினும்
செக்க சிவந்த சிகப்பு ரோஜாக்களே !!
ரோஜாக்கூட்டங்களே
மன்றாடி நிற்கிறது
குத்துங்கள் எஜமான் குத்துங்களென !!
வண்டுகளின் விருப்பத்தேன்
நான் மட்டுமே !!
என்கிற கர்வ மிகுதி
அந்த ரோஜாக்களுக்கு...
கர்வத் தேனை
மட்டுமே ...
இதழோடு இதழ் பதித்து
உறிஞ்சுகிறான் !!
பஞ்சணையில்
வஞ்சனையுடன்
விளையாடுகிறான் !!
கண்ணொளியில் பட்ட
சிகப்பு ரோஜாக்களை
காணொலியாய்
படம் பிடித்து
மற்ற விழிகளுக்கு
விருந்து வைக்கிறான் !!
கொலைகளும்
ஆயக் கலைகளில் ஒன்றாகிவிட்டது
இவனுக்கு ..
ரோஜாக்களின் காம்பினை
அறுக்கின்ற வேளையில்
வழிந்தோடுகிற குருதியே
அந்த
மியாவ் மியாவ் பூனைக்கு
ஒரு வாரகால உணவாகிறது ...
தன்னைத் தானே
அடக்க நினைத்தும்
அத்துமீறி நிற்கிறான் ..
இவன் பாதையெங்கும்
காலி மதுக்குப்பிகளில்
வளர்க்கப்படுகிற சிகப்பு ரோஜாக்கள் ..
பாவம் ,
இவன் என்ன செய்வான் ?
தன் நாட்குறிப்பை
எழுதுகின்ற மதிற்சுவர் முழுவதும்
நிரம்பி வழியும் சொற்களாய்
மீண்டும் .. மீண்டும் ...மீண்டும் ..
மீண்டும் .. மீண்டும் ... மீண்டும்..
மீ..ண்..டு..ம்..
............................... !!
Saturday, 24 November 2018
வகுத்தல் - ஒற்றுமை
(வகுத்தலின் உள்நோக்கமெல்லாம்
பகிர்தலே ...
மன்னிக்கவும் !
சமமாய் பகிர்தலே .. )
மானிடனாய் பிறந்துவிட்டேன்
நரக வாழ்வை தொடங்கிவிட்டேன்
இனி நான்
கண் மூடி
மண் மூடும் வரை ..
சரித்திரம் ஏதும் வேண்டாம்
சமத்துவம் கிடைத்தால் போதும்
எனக்கொரு பேராசை !
இந்த சமூகத்தை
வெண் தாடி கிழவனின் தடிகளால்
வகுக்க வேண்டும் ...
ஈவாக ஒற்றுமையானவர்களையும்
மீதியாக சில வெங்காயங்களையும்
பிரித்தெடுக்க வேண்டும் ..
அநீதிக்கெதிராக ,
...
அமைதியாக இருந்தால்
அடக்கம் செய்து விடுகிறான் !
ஆர்ப்பாட்டம் செய்தால்
ஆண்டி- இந்தியன் என்கிறான் !
என் மக்களே ::
தனியாக போராடினால்
தாளித்து விடுவான் ..
ஒற்றுமையாக போராடினால் தான்
பயந்து விடுவான் ..
(இப்போதும் கூவுகிறேன்
வகுத்தலின் உள்நோக்கமெல்லாம்
பகிர்தலே ...
மன்னிக்கவும் !
சமமாய் பகிர்தலே ... )
எனக்கு
அர்ச்சனை செய்ய ஒரு கூட்டம்
என்
மலத்தை அள்ள ஒரு கூட்டம்
என்
பிணத்தை எரிக்க ஒரு கூட்டம் ...
அத்தனை கூட்டத்தையும்
கல்விக் கொண்டு
வகுத்தெடுப்போம் !
இப்பொழுது
மலம் அள்ள நான் வருகிறேன் ..
மலையேற நீயும் வருகிறாயா ?
பூஜ்ஜியங்களெல்லாம்
ராஜ்ஜியங்கள் அமைக்க
உருவாக்கிற கூட்டணி
உப்பு கலந்த தேநீராக
சுவைக்கத் தான் செய்கிறது
அந்தந்த தேர்தல் சீஸனில் !
காதலை
சாதிக்கொண்டு வகுக்கிறாய்
ஈவாக ,
கயிற்றில் கட்டிய பிணங்களும்
மீதியாக ,
இன்னுமொரு காதலும்
துளிர்விடுகிறது ..
உங்களை
உங்களாலே வகுத்துக் கொள்ளுங்கள் ..
.
.
என் சுதந்திரத்தை
சகித்துக் கொள்ள முடியாத
உன் சுதந்திரம் தான்
இங்கு தீண்டாமை
என்பதே உணரும் வரை !
.
.
என் தேவையெல்லாம் ,
சரிசமமாய்
உட்கார நாற்காலி
கண்ணாடி குவளையில் தேநீர்
காதல் சுதந்திரம்
பயில கல்வி
இன்னும் இன்னும் பல ...
(நிறைவாக சொல்கிறேன்
வகுத்தலின் உள்நோக்கமெல்லாம்
பகிர்தலே ..
மன்னிக்கவும் !
சமமாய் பகிர்தலே )
மறந்து விடாதே தோழா
நாளையொரு போராட்டமெனில்
வீதிக்கு வா
ஒற்றுமையாக !
Sunday, 16 September 2018
தற்கொலை செய்யணும் !!
தற்கொலை செய்ய வேண்டும்
இப்போது ஏன் ?
எதற்கு ?
என்றெல்லாம் தெரியாது
ஆனால், செய்ய வேண்டும் ..
அப்படிதான் இருந்தது
அன்றும்
அதற்கு முன்பும் !
தோராயமாக
தற்கொலை எண்ணம்
1,234 ஆக வைத்துக் கொள்ளலாம் ..
அதிகமாகவும் இருக்கலாம்
குறைவாகவும் இருக்கலாம்
என்ன செய்ய ?
எண்ணம் தற்கொலை நோக்கி இருந்ததால்
எண்ண மறந்துவிட்டேன்
யார் அனுமதியும் வேண்டாம்
என்னை நானே
கொலை செய்யப் போகிறேன்
சென்ற முறைப் போல் இல்லாமல்
இந்த முறை புதியதாக யோசிக்கிறேன்
கத்தியின்றி
இரத்தமின்றி
வலியெதுமின்றி
ஒரு தற்கொலை ..
இது சாத்தியமா ?
அதெல்லாம் தெரியாது எனக்கு
ஆனால்,
தற்கொலை செய்ய வேண்டும்
வழக்கம் போல்
நம்முன்னோரின் முயற்சியில்
தற்கொலை செய்யலாமா ?
பூச்சி மருந்து குடித்து ..
நேரமாகி விட்டது
கடையை அடைத்திருப்பான் ..
தூக்கு கயிறு ,
வேண்டவே வேண்டாம் ::
போன முயற்சிலேயே
நான்
உடைந்த நாற்காலி
தொங்கும் காத்தாடி
அறுந்த கயிறென
வெவ்வேறு திசையில்...
அசிங்கமாய் போகும்
ஒரு தூக்கு கூட ??
த்தூ ...
ஓடும் ரயில் முன்
தலை , தசையென
தனிதனியாய்
தண்டாவளத்தில்
தகர்த்தெறியப்படும் !
இறந்த அடுத்தநாள்
முகம் தெரியமால் செய்தி தாளில் வரும்
மலை உச்சியிலிருந்து ,
.
முதலில் ஏற முடியுமா ?
இந்த உடலை வைத்து ..
அப்படியே ஏறி குதித்தாலும்
பாதி உயரத்திலேயே உயிர் போய்விட்டால்
என் உயிர் போவது
எனக்கே தெரியாவிட்டால்
அது தற்கொலையாகதே ..
உடல் முழுக்க பெட்ரோல் ஊத்தி
லிட்டர் 84.50 பைசா ?
ஆறு ரூபாய் குறைவாக உள்ளது பர்சில்
தீப்பெட்டி வேறு ,
பட்ஜெட் பற்றாக்குறை !
பழைய சங்கதி எதற்கு
இப்படி செய்யலாம்
நூறு குண்டூசிகளை விழுங்கிடலாம் ,
எழுதிக் கொண்டிருக்கின்ற
பேனாவின் முனையால்
தொண்டையில் கோடு போடலாம் ,
வீட்டின் மலத்தொட்டியில்
மண்டைய விடலாம் ..
மலத்தை அள்ளுபவன் ,
என்னையும் அள்ள வேண்டும்
பாவம் !
ஆஆஆஆஆஆஆஆ !!
வேறு என்ன செய்ய ?
தற்கொலை செய்யணுமே ...
இந்த நொடி கணமே ..
மின் கம்பியை கடித்து விடவா ?
விஷநாகத்துடன் மல்யுத்தம் செய்யவா ?
கைப்பேசியே ஒளித்து வைத்திடவா ?
நகத்தைப் போல்
என்னை நானே கடித்து துப்பவா ?
யோசிக்க யோசிக்க
தலை வலிக்கிறது ..
பேசாமல்
மனுஷ்யபுத்திரன் கவிதைகளை படித்து
அவரைப் போல்
கவிதையென எழுதவா ?
படிப்பவன் தான் இறப்பான்
பின்பு அவரே என்னை கொல்வார்
அது கொலையாகிவிடும் ..
என்னை நானே
கொலை செய்ய வேண்டும்
வேற வழியேயில்லை
சுலப வழி
தாமரை கட்சியில்
இணைந்திடலாம் ..
ஆசை இருப்பின் வருவீர்
தாமரையில் அமருவீர்
தற்கொலையே பருகுவீர் !!



